இதுவரை:

 கடற்கரைக்கு உலாச் செல்லும் ஐந்து குழந்தைகள் ஒரு மணல் தேவதையை சந்திக்கிறார்கள். தினமும் ஒரு வரம் கொடுப்பதாக அந்த தேவதை ஒத்துக் கொள்கிறது. முதல் இரண்டு நாட்களும் இவர்கள் கேட்ட வரத்தால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மாறாக வீட்டிலும், வெளியிலும் குழப்பமே ஏற்படுகிறது. காவல்நிலையம் வரை செல்லும் சூழ்நிலை கூட வருகிறது. இனி…

3. லேம்ப்புக்கு ஆபத்து

“இந்த மணல் தேவதை ரொம்ப மோசம். அது ஏதோ சதி பண்ணுதுன்னு நினைக்கிறேன்.. இனிமே அது பக்கத்துல போகாம இருக்கிறதே நல்லது” என்று சிறிலும் ஆந்த்தியாவும் கூற,

“அப்படி இல்ல.. நமக்குத் தான் நல்ல பொருத்தமான வரமாக் கேக்கத் தெரியலை.. நல்லா யோசிச்சு நல்ல வரமாக் கேப்போம்.. உதாரணமா பத்து ரூபாய், இருபது ரூபாய் அந்த மாதிரி கேட்டாக் கூட உடனடியா அந்த காசுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கி சாப்பிடலாம்” என்றாள் ஜேன்.

five friends

“சரி! அப்படியே செய்வோம்” என்று நான்கு பேரும் கிளம்ப, மார்த்தா லேம்ப்பையும் அழைத்துச் செல்லுமாறு கூறினாள். ஏற்கனவே அன்று காலை முதலே நிறைய சேட்டைகள் செய்து கொண்டிருந்தான் லேம்ப். அவனை வைத்துக் கொண்டு அவளால் வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை..

“ஐயோ வேண்டாமே.. அவனால ரொம்பத் தொல்லை” என்று குழந்தைகள் சொல்ல, “இவனையா வேண்டாம்னு சொல்றீங்க? செல்லக்குட்டி அவன். இப்படி ஒரு அழகான குழந்தையை எல்லாரும் வேணும் வேணும்னு தான் சொல்லுவாங்க.. இவனை தினமும் வெளியே கூட்டிட்டுப் போகணும்னு அம்மா அப்பா சொல்லிருக்காங்க இல்ல.. இதோ கூட்டிட்டுப் போங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று விடாப்பிடியாக லேம்ப்பைத் தூக்கி அவர்களின் கைகளில் கொடுத்து அனுப்பினாள் மார்த்தா.

 நான்கு பேரும் லேம்ப்பைத் தூக்கிக்கொண்டு மீண்டும் கடற்கரைக்குச் சென்றனர். முதல் நாள் மணல் தேவதை இருந்த இடத்தைக் கற்களால் குறித்து வைத்திருந்தனர். ஆனால் அடுத்த நாள் அப்படி குறித்து வைக்க மறந்துவிட்டார்கள்.

“ஐயோ எல்லா இடமும் ஒண்ணு போல இருக்கு.. இந்த மணல் தேவதை எங்க இருக்கோ?” என்று அவர்கள் குழம்பிப் போய் அமர்ந்திருக்க, கடல் மண்ணில் கையை விட்டு விளையாடிக் கொண்டிருந்த லேம்ப் சிறிது மண்ணை எடுத்துத் தன் கண்களில் போட்டுக்கொண்டான். கண் உறுத்தலால் அவன் அழ ஆரம்பிக்க, பாட்டிலில் இருந்த தண்ணீரை அவன் கண்களில் ஊற்றினாள் ஆந்த்தியா.

அவள் ஊற்றியதில் அவனுக்கு இன்னும் வலி ஏற்பட்டிருக்கும் போல, ‘வீல்’ என்று கத்த ஆரம்பித்தான். ராபர்ட்டிற்குக் கோபம் வந்துவிட்டது.

“மார்த்தா எல்லாருக்கும் இவனைப் பிடிக்கும்னு சொன்னாங்க.. இப்படிக் கத்தினா எப்படி? எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இவன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று ராபர்ட் கூற, லேம்ப் திடீரென்று அழுவதை நிறுத்தி விட்டான். அவனது முகம் மிக அழகானதாகவும் பிரகாசமானதாகவும் மாறிவிட்டது.

என்ன ஆயிற்று என்று நான்கு பேரும் உற்றுப் பார்க்கையில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மணல் தேவதை, “இதோ இன்னிக்கு உங்களுக்கான வரம் குடுத்தாச்சு.. இப்போ உங்க தம்பியை எல்லாருக்கும் பிடிக்கும்” என்றது.

“ஐயோ! அது நாங்க சாதாரணமா பேசிக்கிட்டிருந்தது.. நாங்க வரமே இன்னும் கேக்கல.. உன்னால இந்த வரத்தைத் திருப்பி எடுத்துக்க முடியுமா?” என்று கேட்டாள் ஜேன்.

“அது முடியவே முடியாது.. நீங்க கேட்க முன்னாடி நல்ல யோசிக்க வேண்டாமா?” என்று கூறிவிட்டு மீண்டும் தன் குழிக்குள் சென்றுவிட்டது மணல் தேவதை.

 ஒவ்வொரு நாளும் இப்படி வரத்தை வீணடித்து வருகிறோமே என்று வருந்திய குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பினர். போகும் வழியில் ஒரு குதிரை வண்டியில் வந்த பணக்காரப் பெண்மணி லேம்ப்பைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தினாள்.

“எவ்வளவு அழகான குழந்தை! இவனை எனக்கு தந்துடுறீங்களா? உங்க அப்பா அம்மா கிட்ட கேட்டு நான் தத்தெடுத்துக்கிறேன்” என்று அவள் கேட்க,

“இல்ல.. எங்க அப்பா அம்மா தர மாட்டாங்க.. நாங்க ரொம்பப் பாசமா வளர்க்கிறோம்” என்று குழந்தைகள் மறுக்க,

அவள், “அப்ப சரி! ஒரு நிமிஷம் மட்டும் குடுங்க.. அந்தக் குழந்தையைக் கொஞ்சிட்டுத் தரேன்” என்று பாசத்துடன் கையில் வாங்கினாள். இவர்கள்  கவனிக்காத நேரம் சட்டென்று லேம்ப்பைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டு விட்டாள்.

 குழந்தைகள் குதிரை வண்டிக்குப் பின்னால் வேக வேகமாக ஓடினார்கள். சிறிது தூரம் சென்றபின் வண்டி நின்றது. அந்தப் பெண்மணி குழந்தையை வண்டியிலேயே அமர வைத்துவிட்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றாள். குதிரை வண்டியில் இருந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் அந்தப் பெண்ணின் உதவியாளர் இருவரும் லேம்ப்பைப் பார்த்து சிரித்தார்கள். விரைவில் அவர்கள் இருவரும், ‘எனக்குத் தான் இந்தக் குழந்தை வேண்டும்’, இல்லை எனக்குத் தான்’ என்று சண்டை போட ஆரம்பித்தார்கள்.

 இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நேரம் குழந்தையைத் தூக்கிக்கொண்டான் சிறில். “நல்லவேளை! திரும்பிக் கிடைச்சுட்டான். அந்த வரத்தால தான் எல்லாரும் இவனை வேணும் வேணும்னு சொல்றாங்க.. நாம வெளியில இருக்கிறது ஆபத்துதான்.. வாங்க வீட்டுக்கு போயிடலாம்” என்று அவன் ‌கூற, ஒரு குறுக்குப் பாதை வழியாக நால்வரும் வீட்டுக்கு விரைந்தனர்.

ஆனால் அந்தப் பாதையில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த நாடோடிகள் சிலர் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “இது என்னோட குழந்தை, இது எனக்குத்தான்” என்று ஒரு நாடோடி சண்டையிட்டான். குழந்தைகள் கொடுக்க மறுக்கவே பிடுங்கிக் கொண்டான். லேம்ப் புதியவர்களைக் கண்டதும் ஓவென்று அழுதான்.

அப்போது சிறிலுக்கு ஒரு சாமர்த்தியமான யோசனை வந்தது. “நீங்களே குழந்தையை வெச்சுக்கோங்க.. ஆனால் அவன் உங்க கூட பழகுற வரைக்கும் நாங்க கொஞ்ச நேரம் இருக்கோம்” என்று கூறிவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டனர். அப்போது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. அதனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லேம்ப்பைப் பற்றிய விஷயங்கள் அதையும் இதையும் பேசி ஆறு மணி வரை நேரத்தைக் கடத்தினார்கள்.

 சூரியன் மறையத் துவங்கவும் நாடோடிகளின் நடவடிக்கைகளில் சட்டென்று ஒரு மாற்றம் ஏற்பட்டது. திடீரென்று குழப்பத்துடன் அவர்கள் அப்படியே அமர்ந்திருந்தனர். லேம்ப்பும் பழையபடி சாதாரணமான குழந்தையாக மாறிவிட்டான். சட்டென்று எழுந்த நாடோடிகள் அனைவரும் தங்கள் கூடாரத்திற்குள் சென்று விட்டனர். ஒரு பெண் மட்டும் லேம்ப்பின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி முத்தமிட்டாள். “நல்லபடியா தம்பியைக் காப்பாத்திட்டோம்!” என்று பெருமூச்சு விட்டபடியே நால்வரும் வீட்டிற்கு விரைந்தார்கள்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments