முன்பொரு காலத்தில் ஒரு இளம்பெண் இருந்தாள். அவளுடைய அம்மா இறந்துவிட்டதால், அவள் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தியாக வந்தவள் மோசமான கொடுமைக்காரி.
தன்னை விட அந்த இளம்பெண் அழகாய் இருந்ததால், சித்தி வீட்டு வேலை முழுவதையும் அவளைச் செய்யச் சொல்லிக் கொடுமைப்படுத்தினாள்.
கடைசியில் ஒரு நாள் சித்தி அப்பெண்ணை எப்படியாவது வீட்டை விட்டுத் தொலைதூரத்துக்குத் துரத்தி விட முடிவு செய்தாள். அவளிடம் ஒரு சல்லடையைக் கொடுத்து, “பூமி முடியும் இடத்தில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று, சல்லடை முழுக்கத் தண்ணீர் கொண்டு வா” என்று சொல்லி அனுப்பினாள்.
‘’பூமி முடியும் இடத்தில் இருந்த கிணற்றை, அவளால் கண்டுபிடிக்க முடியாது; அப்படியே கண்டுபிடித்தாலும், சல்லடையில் தண்ணீரை எப்படிக் கொண்டு வர முடியும்?’ என்று சித்தி நினைத்தாள்.
அந்தப் பெண்ணும் சல்லடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் பார்த்த ஒவ்வொரிடமும், அந்தக் கிணறு எங்கேயிருக்கிறது என்று கேட்டாள். ஆனால் ஒருவருக்கும் அது இருக்கும் இடம் தெரியவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
முடிவில் ஒரு கூன் விழுந்த பாட்டி, அந்தக் கிணறு இருக்கும் இடத்தைச் சொன்னாள். அதற்கு எப்படி போக வேண்டும் என்ற வழியையும் சொன்னாள்.
அந்தப் பெண் பாட்டி சொன்ன வழியிலேயே போய், அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்து விட்டாள். கிணற்று நீரை அவளுடைய சல்லடையில் நிரப்பினாள்; ஆனால் சல்லடையில் நீர் தங்காமல் உடனே கீழே வழிந்து விட்டது. சல்லடையில் நீரை நிரப்ப முடியாததால், கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
திடீரென்று அவளுக்கு முன், ஒரு கரகரப்பான குரல் கேட்டது. அவள் நிமிர்ந்து பார்த்த போது, முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு ஒரு பெரிய தவளை அங்கு நின்றது.
“அன்பே! உனக்கு என்ன பிரச்சினை?” என்று அது கேட்டது.
“என் சித்தி உலகத்தின் கடைசியில் இருக்கும் இந்தக் கிணற்று நீரை இந்தச் சல்லடையில் நிரப்பி வரச் சொன்னார். ஆனால் என்னால் நிரப்ப முடியவில்லை” என்று அந்தப் பெண் சொன்னாள்.
“ஒரு நாள் இரவு முழுக்க, நான் சொல்வதை நீ கேட்பதாகச் சத்தியம் செய்தால், சல்லடையில் நீர் நிரப்புவது எப்படி? என்று நான் சொல்கிறேன்” என்று அந்தத் தவளை சொன்னது.
“சரி. சத்தியம். ஒரு இரவு முழுக்க நீ சொல்வதை நான் கேட்கிறேன்” என்று அவள் சொன்னாள்.
“சல்லடையின் அடியில் பாசியை அள்ளி, அதன் மேல் களிமண்ணைப் பூசு. அதற்குப் பிறகு சல்லடையில் நீர் நிற்கும்” என்று அந்தத் தவளை சொன்னது.
பிறகு தவளை தத்தித் தாவிக் கிணற்றுக்குள் குதித்து விட்டது
அவள் சல்லடையின் அடியில் கொஞ்சம் பாசியை எடுத்து வைத்தாள். அதன் மேல் களிமண்ணை எடுத்துப் பரப்பினாள். அதற்குப் பிறகு சல்லடையில் நீரை நிரப்பினாள். இப்போது நீர் சல்லடையிலிருந்து கீழே வழியாமல், அப்படியே இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு, அவள் வீட்டுக்குக் கிளம்பிய சமயம் தவளை கிணற்று நீரிலிருந்து எட்டிப் பார்த்து, “உன் சத்தியத்தை நினைவில் வைத்துக் கொள்” என்றது.
“சரி” என்று சொன்னவள், “ஒரு தவளையால் எனக்கென்ன தீங்கு வந்துவிடப் போகிறது” என்று நினைத்தாள்.
அவள் சல்லடை நீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் சித்தியிடம் கொடுத்தாள். சித்திக்கு அவளைப் பார்த்தவுடன் கோபம் வந்தது, ஆனால் எதுவும் சொல்லவில்லை.
அன்று மாலை வாசல் கதவின் அடிப்பக்கத்தில், யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
“என் அன்பே! கதவைத் திற. கிணற்றடியில் நீ சொன்ன சத்தியத்தை நினைவில் கொள். கதவைத் திற என் அன்பே!” என்ற குரல் கேட்டது.
“யாரது?” என்று சித்தி அப்பெண்ணிடம் கேட்டாள். அவள் கிணற்றடியில் தவளைக்குத் தான் செய்து தந்த சத்தியம் பற்றிச் சொன்னாள்.
“அப்படியானால் பெண்கள் கண்டிப்பாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீர வேண்டும்; உடனே போய்க் கதவைத் திற” என்றாள் சித்தி.
அழுக்கான ஒரு தவளைக்கு அப்பெண் கீழ்ப்படிய வேண்டியிருப்பதை நினைத்துச் சித்திக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
சரியென்று அவளும் போய்க் கதவைத் திறந்தாள். அந்தக் கிணற்றில் பார்த்த தவளைத் தாவிக் குதித்து, அவளிடம் வந்தது.
“என் அன்பே! என்னை உன் மடியில் தூக்கி உட்கார வை. கிணற்றடியில் நீ செய்த சத்தியத்தை நினைவில் கொள்” என்றது
அவள் தவளையைத் தூக்க விரும்பவில்லை. ஆனால் சித்தி “உடனே தூக்கு” என்று அவளிடம் சொன்னாள்.
அப்பெண் தவளையைத் தூக்கித் தன் மடியில் உட்கார வைத்தவுடன், அங்கேயே சிறிது நேரம் அது படுத்துக் கொண்டது.
“என் அன்பே! எனக்கு இரவு சாப்பாடு கொடு. கிணற்றடியில் நீ செய்த சத்தியத்தை நினைவில் கொள்” என்றது.
அவள் சென்று ஒரு கிண்ணத்தில் பாலையும், ரொட்டியையும் எடுத்து வந்து, அதற்கு ஊட்டி விட்டாள். தின்று முடித்தவுடன் தவளை தன்னை அவள் படுக்கைக்கு அழைத்துப் போகச் சொன்னது. கிணற்றடியில் அவள் செய்த சத்தியத்தை நினைவில் கொள்ளச் சொன்னது..
அவளுக்கு அதைப் படுக்கைக்கு அழைத்துச் செல்ல விருப்பமில்லை. ஆனால் சித்தியோ “பெண்கள் கண்டிப்பாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்; அதனால் தவளையை உன் படுக்கைக்கு அழைத்துப் போ” என்றாள்.
தவளையைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அதனிடமிருந்து வெகு தூரம் தள்ளி, அப்பெண் படுத்துக் கொண்டாள்.
விடியற்காலையில் தவளை அவளைக் கூப்பிட்டது.
“என் அன்பே! என் தலையை வெட்டிவிடு! கிணற்றடியில் நீ செய்த சத்தியத்தை நினைவில் கொள்!” என்றது.
அவளுக்குச் செய்ய விருப்பமில்லாவிட்டாலும், சல்லடையில் நீர் நிரப்ப தவளை உதவி செய்ததால், ஒரு கத்தியை எடுத்து வந்து அதன் தலையை வெட்டினாள்.
உடனே அங்கு ஒரு அழகான இளவரசன் தோன்றினான். தன்னை ஒரு கெட்ட மந்திரவாதி தவளையாக மாற்றி விட்டதாகச் சொன்னான்.
“ஒரு பெண் இரவு முழுக்க, தவளை சொன்னதைக் கேட்டு நடந்து விடியற்காலையில் அதன் தலையை வெட்டினால், மறுபடியும் இளவரசனாக மாற முடியும் என்று மந்திரவாதி அவனிடம் சொல்லியிருந்தான்.
ஒரு அழுக்குத் தவளை இளவரசனாக மாறியது கண்டு, சித்திக்கும் வியப்பாய் இருந்தது.
அப்பெண்ணை அழைத்துச் சென்று, இளவரசன் திருமணம் செய்து கொண்டான். அரசராயிருந்த அவன் அப்பாவின் அரண்மனையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
(ஆங்கிலத் தேவதை கதை)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.