“ஹாய் பூஞ்சிட்டுக்களே! வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று ஓடி வந்தாள் அனு.

“ஹாய் அனு, இன்னிக்கு ரொம்ப ஈசியான ரொம்ப சூப்பரான ஒரு விஷயம் செய்யப் போறோம். சீக்கிரம் ஓடிப் போய் நான் சொல்லுற பொருட்களை எடுத்துட்டு வா” என்றது பிண்டு.

“ம்ம் சரி பிண்டு”

தேவையான பொருட்கள்

1. கண்ணாடி அல்லது நெகிழி பாட்டில்

2. தண்ணீர்

3. பேக்கிங் சோடா

4. வினீகர்

5. அரிசி( நல்ல தடிமான அரிசி குறிப்பாக சிவப்பு அரிசியை எடுத்துக் கொண்டால் நல்லது)

6. ஸ்பூன்

7. கேசரி பவுடர்

அனு, “பிண்டு நீ சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன். அடுத்து என்ன செய்யணும்”

செய்முறை

1. ஒரு கப் தண்ணீரை பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்

2. ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும்

3. அரிசியைக் கொஞ்சமாக எடுத்து அந்த தண்ணீரின் மேல் தூவவும். பொதுவாக அரிசியைப் போட்டதும் அது தண்ணீரில் மூழ்கிவிடும். உங்களுடைய அரிசி மூழ்கவில்லை எனில் சேமியா அல்லது காய்ந்த திராட்சை போட்டுப் பார்க்கவும்.

4. இப்போது ஒரு ஸ்பூன் வினீகரை சேர்க்கவும்‌.

5. வீனிகரும், பேக்கிங் சோடாவும் சேர்ந்து குமிழிகளை உண்டாக்கும். அதில் அரிசி சிக்கும் போது அரிசி ஆடுவது போல் தெரியும்.

6. மெதுவாக ஆடிக் கொண்டே அரிசி மேலே வந்து, பிறகு மறுபடி தண்ணீருக்கு அடியில் சென்றுவிடும்.

dancing rice 1

பிண்டு, “உங்களுக்கு விருப்பம் இருப்பின் கேசரி பவுடரையோ அல்லது ஃபுட் கலரையோ தண்ணீரில் சிறிது கலந்து அரிசியின் நடனத்தை ரசிக்கலாம்”.

அனு, “ஹைய்யா பிண்டு! எப்படி இந்த அரிசி டான்ஸ் ஆடுதுன்னு சொல்லேன்”

அறிவியல் உண்மைகள்.

பேக்கிங் சோடா காரத்தன்மை வாய்ந்தது. வினீகர் அமிலத்தன்மை வாய்ந்தது. இரண்டும் கலக்கும் பொழுது வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கரியமிலவாயு நீர்க்குமிழிகளாக (கார்பன் டை ஆக்சைடு) வெளியே வரும். அந்த குமிழிகள் அரிசை மெல்ல மேலே கொண்டு வரும். அதை நாம் பார்க்கும் போது அரிசி நடனமாடுவது போல் தெரியும்.

“வாவ் இவ்வளவு விஷயம் இதுல இருக்கா பிண்டு” என்று ஆச்சரியப்பட்டாள் அனு.

“ஆமாம் அனு, நாம் தினமும் பயன்படுத்தும் விஷயங்களில் எல்லாம் இந்த வேதியியல் மாற்றம் நிகழ்கிறது. குறிப்பாக சோப்பில் உள்ள காரத்தன்மை அழுக்குத் துணியில் உள்ள அமில அழுக்கை வெளியே எடுக்கிறது. செல்லக்குட்டீஸ் நீங்க உங்க அப்பா அம்மாக்கிட்ட கேட்டு எங்கே எல்லாம் அமிலமும், காரமும் சேர்கிறது என்று கண்டறியுங்கள். மறுபடியும் அடுத்த மாதம் வந்து உங்களை சந்திக்கிறேன்”.

அனு, “பாய் பூஞ்சிட்டுக்களே! இந்தப் பகுதியில் வரும் எக்ஸ்ப்ரிமெண்ட்களை நீங்க செய்து பார்த்தீங்களானு மறக்காமல் சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்”.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments