“ஹாய் பூஞ்சிட்டூஸ்! எல்லாரும் லீவ்ல நல்லா என்ஜாய் பண்றீங்களா?” என்று கேட்டது பிண்டு.

“ஆமாம் பிண்டு, ஸ்கூல் லீவு அதோட மழை வேற இந்த மழைக்கு சூடா பஜ்ஜி சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல” என்று ஆர்வமுடன் கேட்டாள் அனு‌.

“பஜ்ஜியா அது எப்படி இருக்கும். எனக்கு மழைன்னு சொன்னதும் ஒரு எக்ஸ்பரிமெண்ட் தான் ஞாபகம் வருது அனு”

“சரி பிண்டு, அம்மா பஜ்ஜி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள நம்ம எக்ஸ்பரிமெண்ட் செஞ்சுடுவோம்!” என்றாள் அனு ஆர்வமுடன்.

“அனு நான் சொல்ற பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா!” என்று வழக்கம் போல் கட்டளையிட்டது பிண்டு.

தேவையான பொருட்கள்:

1. பெரிய ப்ளாஸ்டிக் பாட்டில் – முனை கூம்பு வடிவில் இருத்தல் வேண்டும். (கோக், பெப்ஸி, ஃபாண்டா பாட்டில்கள் இருப்பின் சிறப்பு)

2. கத்தரிக் கோல்/ ஆக்ஸா ப்ளேட்

3. பெர்மனெண்ட் மார்க்கர்

4. கூழாங்கற்கள் சில

5. ஸ்கேல்

Rain gauge

செய்முறை:

1. பெரியவர்களின் உதவியோடு ப்ளாஸ்டிக் பாட்டிலை அடிப்பாகத்தில் இருந்து 2/3 அளவு வெட்டிக் கொள்ள வேண்டும்.

2. பாட்டிலின் அடியில் கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு, ஸ்கேலின் உதவியோடு செ.மீ அளவினை குறித்துக் கொள்ள வேண்டும்.

3. பிறகு பாட்டிலின் அடிப்பகுதியில் கூழாங்கற்களையும் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி 0 அளவில் கொண்டு வந்து நிறுத்தவும்.

4. அதன் பிறகு, பாட்டிலின் கூம்பு வடிவிலான மேல் பகுதியைத் தலைகீழாக நாம் செய்து வைத்துள்ள அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது மேல் பகுதி ஃபில்டர் போன்ற அமைப்பினைப் பெறும்.

5. பிறகு மழை பொழியும் பொழுது நம் உபகரணத்தை வெட்டவெளியில் வைத்து விடவும்.

6. மழை நின்ற பிறகு நாம் பாட்டிலில் உள்ள நீரின் அளவினை வைத்து அந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதினைக் கணக்கிடலாம்.

“அட பிண்டு சூப்பரான எக்ஸ்ப்ரிமெண்ட. ஈசியா செய்யலாமே!” – அனு.

அறிவியல் உண்மைகள்:

இந்த எக்ஸ்பரிமெண்டின் பெயர் ரெயின் காஜ் என்பதாகும். இதை வைத்து ஒரிடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைக் கணிக்க முடியும்.

நீங்கள் உங்கள் பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது, அதன் சராசரி அளவு எவ்வளவு என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

வடக்கு கிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையைப் பற்றியெல்லாம் மேலும் தெரிந்து கொள்ளுங்கள் பூஞ்சிட்டுக்களே! அடுத்த மாதம் வேறு ஒரு எளிதான அறிவியல் முயற்சியில் ஈடுபடலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments