அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.

நிறைய பேர் பூவை தொட்டுப் பார்க்க முயன்றார்கள். நல்லா இருக்கே, எனக்கு ஒரு ரோஸ் தருவியா?,

 உங்க வீட்டிலேயே பூத்ததா? இப்படிப் பல கேள்விகள்.

okra

“ஆமா எங்க வீட்ல பூத்தது தான். இதே மாதிரி இன்னும் நிறைய கலர்ல எங்க வீட்ல ரோஜா செடிங்க இருக்கு” என்றாள் பூர்ணா.

அதைப் பார்த்த ஆதிக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ‘எங்க வீட்ல ஏன் இந்தப் பூ இல்ல?’ என்று யோசித்தான்.

மாலை அவனுடைய வீட்டிற்குப் போய் அவன் அம்மாவிடம், “அம்மா அம்மா! பூர்ணா வீட்ல அழகழகான பூக்கள் இருக்கும்மா.. அதுக்கு பேரு ரோஜாப்பூவாம். இன்னிக்கி மஞ்சள் கலர்ல அடுக்கடுக்காக ஒரு ரோஜாப் பூ தலையில வச்சிருந்தா” என்று கூறினான்.

“நீ வேணா போய் நம்ம வீட்டு மொட்டை மாடியில் பாரேன். அதுலயும் ஒரு செடில மஞ்சள் கலர்ல அழகா நாலு பூக்கள் இருக்கு” என்றார் அவனது அம்மா.

“அப்ப நான் அதைப் பறிக்கலாமா?” என்றான் ஆதி.

“அதைப் பாத்துட்டு மட்டும் வா! தொடக் கூடாது. ரொம்ப அழகா இருக்கும்” என்றார் அவனது அம்மா.

“சரிம்மா!” என்றபடி குடுகுடுவென்று மாடிக்கு ஓடினான். அங்கிருந்த பத்துப் பதினைந்து தொட்டிகளில் எதில் மஞ்சள் நிறப் பூ இருக்கிறது என்று தேடிப்பார்த்தான்.

 அவன் உயரத்தில் கால்வாசி வளர்ந்திருந்த ஒரு செடியில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் பூக்கள் இருந்தன. நடுவில் இலேசான அரக்கு நிறத்தில் பஞ்சு போல் ஏதோ இருந்தது.

‘அழகா இருக்கே! தொட்டுப் பாக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா அம்மா தொடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க’ என்று நினைத்து அதை ரசித்துப் பார்த்தான். அந்தச் செடியையும் அதன் அருகில் இருந்த பிற செடிகளையும் சில வண்டுகள் சுற்றிக் கொண்டிருந்தன.

 அவை அந்தப் பூவுக்கு நடுவில் போய் அமர்வதும் பின் எழுந்து போவதுமாக இருந்தன. ‘நாம மட்டும் தொடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா இந்த வண்டுகள் போய் தொட்டுக்கிட்டு இருக்கு.. ஒரு வேளை அது குட்டியா இருக்கிறதுனால வண்டு தொட்டா பூ கீழே விழாதா இருக்கும்.. இருக்கட்டும்’ என்று நினைத்தவன் கீழே ஓடிவிட்டான்.

 மறுநாள் அவனது பள்ளியில் போய், “எங்க வீட்லயும் மஞ்சக் கலர் பூ இருக்கு!” என்று அனைவரிடமும் பெருமையாகச் சொன்னான் ஆதி.

 அதன்பின் நான்கு நாட்கள் ஆகின. ஆதிக்கு மாடிக்குப் போவதற்கு நேரமே இல்லை. ஆனால் தினமும் அந்த மஞ்சள் நிறப் பூ பற்றி நினைத்துக் கொண்டே இருந்தான்.

இரண்டு நாட்கள் தேர்வு இருந்தது, அதன்பின் இரண்டு நாட்கள் வெளியூர் போய் விட்டான். நான்கு நாட்கள் கழித்து வேக வேகமாக மாடிக்கு சென்று பார்த்த ஆதிக்கு அதிர்ச்சி! ஏனென்றால் அவனது நான்கு பூக்களையுமே காணவில்லை.

 எங்கேயாவது உதிர்ந்து விழுந்திருக்கிறதா என்று கீழே தேடிப் பார்த்தால் அதுவும் இல்லை. “அம்மா அம்மா, என் பூவைக் காணும்மா!” என்றபடி ஓடி வந்தான்.

அம்மா அந்த மஞ்சள் பூ விஷயத்தையே மறந்து விட்டார். “எந்தப் பூ?” என்று அவர் கேட்க,

“இங்கே வாங்கம்மா!” என்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் ஆதி.

மஞ்சள் நிறப் பூ இருந்த செடியைச்  சுட்டிக்காட்ட, அம்மா கலகலவென்று சிரித்தார்.

“ஏன்மா சிரிக்கிறீங்க?” என்று ஆதி கேட்டான்.

“இதுலயாடா பூவைக் காணோம்னு சொன்ன?” என்றார் அம்மா.

“ஆமா! அன்னிக்கு நிறைய வண்டுகள் இது மேல சுத்திக்கிட்டு இருந்தது. அதுங்க தான் பூவைத் திருடி இருக்கணும்” என்று ஆதி சொல்ல,

“நல்லா உத்துப் பாரு.. சின்ன சின்னதா பச்சை கலர்ல அந்தப் பூ இருந்த இடத்துல காய் விட்டு இருக்கு பாரு.. அதெல்லாம் வெண்டைக்காய் பிஞ்சுகள்” என்றார் அம்மா.

“அப்படியா அம்மா?” என்றான் ஆதி ஆச்சரியத்துடன்.

“ஆமா! வெண்டைக்காயை காய வெச்சு அதுல இருந்த விதைகளை எடுத்து இதுல போட்டேன்.. அப்படி வளர்ந்ததுதான் இந்தச் செடிகள். மஞ்சள் நிறப் பூக்களா இருந்ததுல அந்த வண்டுகள் வந்து உட்கார்ந்து மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, இப்ப காய் ஆயிடுச்சு.. தினமும் வந்து இதுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு அந்தக் காயை கவனிச்சுப் பாரு.. 5 அல்லது 6 நாள்ல நீளமான வெண்டைக்காய் கிடைக்கும். அதை பறிச்சு நாம சமைச்சு சாப்பிடலாம்” என்றார் அம்மா.

“அப்ப இதை ரோஜாப்பூ மாதிரி தலையில் வைக்க முடியாதா?” என்று ஆதி கேட்டதற்கு,

“ரோஜாப் பூ அழகுக்காக வளர்க்கிறது.‌ அது ஒரு விதமான அழகு. இது ஒரு விதமான அழகு. இதுல நமக்கு காய் கிடைக்குது. சுத்தமான இயற்கை முறையில விளைஞ்ச வெண்டைக்காய். இன்னும் பக்கத்துல உள்ள செடிகளைப் பாரு” என்று காட்ட, அருகில் இருந்த மிளகாய் செடியில் வெள்ளை நிறத்தில் சின்னச் சின்னதாகப் பூக்கள் இருந்தன. அதே மாதிரி புடலங்காய் செடியிலும் வெள்ளைப் பூக்கள் தான். ஆனால் அது வேறு மாதிரி இருந்தது.

“இது எல்லாமே வண்டு வந்து உட்காரும் போது மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு காயா மாறிடும். அதனால வண்டு நம்மளோட நண்பன் தான்.. திருடன் இல்லை!” என்றார் அம்மா.

“அப்படியா? இதைப் போய் என் நண்பர்களுக்கெல்லாம் சொல்றேன். காய் பெரிசாகி சமைச்சதும் எல்லாருக்கும் கொண்டு போய்க் கொடுப்பேன்!” என்று சொன்னான் ஆதி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments