அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.

“சர்க்கஸ் போய்ப் பாக்கலாம்பா. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே போயிட்டு வந்துட்டாங்கப்பா” என்று தன் அப்பாவிடம் அம்மு கேட்டுக் கொண்டே இருந்ததால், அன்று மாலை சர்க்கஸ் பார்க்க அவர்கள் மூன்று பேரும் கிளம்பினார்கள்.

அம்மு என்று அம்மா, அப்பாவால் அழைக்கப்படும் அமுதவல்லி, அவளுடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை. அதுவும் செல்லக் குழந்தை.

சர்க்கஸ் வந்த நாளில் இருந்து பெற்றோரை, அம்மு அனத்திக் கொண்டேயிருந்ததால் ஒரு விடுமுறை நாளன்று எல்லோருமாக சர்க்கஸ் பார்க்கக் கிளம்பினார்கள். அம்முவுக்கோ ஒரே கொண்டாட்டம்.

சர்க்கஸ் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து விட்டு அம்மு அதிக சந்தோஷம் அடைந்து விட்டாள். பலவித விலங்குகளையும், சர்க்கஸ் கோமாளிகள் அடித்த கூத்தையும் பார்த்து விட்டு ஆனந்தத்தில் குதித்தாள் அம்மு. ஆறே வயதான அம்முவிற்கு சிங்கம், புலி, கரடி எல்லாம் முதல் தடவையாகப் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. அன்று இரவு மனநிறைவுடன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள். வீட்டை அடைந்த பிறகு கூடத் தனது சர்க்கஸ் அனுபவங்களை மனதில் அசை போட்டுக் கொண்டே தான் அம்மு தூங்கினாள்.

அடுத்த நாள் விடுமுறை. பகல் நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்த குடும்பம் சர்க்கஸ் பார்க்கக் கிளம்பிய போது அம்முக் குட்டியும் மீண்டும் அவர்களுடன் கிளம்பி விட்டாள். அதற்குக் காரணம் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் உறவினர் ஒருத்தர் சர்க்கஸில் வேலை பார்ப்பதாக அவர் சொன்னார்.

“என்னோட கஸின் அந்த சர்க்கஸ் கம்பெனியில் மேனேஜரா இருக்கான். அதுனால குழந்தைகளை உள்ளே கூட்டிட்டுப் போய் சர்க்கஸில் இருக்கும் விலங்குகளை எல்லாம் அவற்றின் கூண்டுகளுக்குப் பக்கத்திலேயே போய்க் காமிக்கப் போறேன். இந்த சான்ஸ் எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்காது. அதுனால அம்முவையும் நாங்க, எங்களோடயே கூட்டிட்டுப் போறோம்” என்று சொல்லி அவர் அழைத்ததால், அம்முவும் பயங்கர சந்தோஷத்துடன் கிளம்பி விட்டாள்.

சர்க்கஸ் ஷோ ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னாலேயே போய்விட்ட அவர்கள், கூடாரத்தைச் சுற்றிக் கொண்டு வந்து விலங்குகளை அவற்றின் கூண்டுகளுக்கு மிகவும் அருகில் சென்று பார்த்தார்கள்.

ammu
படம்: அப்புசிவா

அப்போது தான் அம்முவும் அங்கே ஓரமாக நின்றிருந்த அப்பு என்ற அந்த யானைக்குட்டியைப் பார்த்தாள். அம்முவுக்கு அந்த யானைக் குட்டியைப் பார்த்ததும் மனதிற்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுடன் வந்த எல்லோரும் முன்னால் நகர்ந்து போய் விட, அம்மு மட்டும் அப்பு யானையின் அருகே நின்று அதனுடைய தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தாள். அப்புவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவளுடைய கையில் பட்டதும் அம்மு திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள்.

அப்பு அழுது கொண்டிருந்தது. “அச்சச்சோ, எதுக்கு அழறே யானைக்குட்டி? பசிக்குதா? நான் ஓடிப் போய், உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று பரிவுடன் கேட்டாள்.

அன்பு ததும்பிய அந்தக் குழந்தை மனதிற்கு யானைக்குட்டியால் மனிதர்கள் பேசும் மொழியைப் புரிந்து கொள்வதோ இல்லை பதிலளிக்கவோ முடியாது என்பது புரியவில்லை. நீண்ட நாட்களாக மனிதர்களால் வளர்க்கப்படும் யானைகள் ஒருவேளை தன்னைப் பழக்குபவர்களின் மொழியை மற்றும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அப்பு யானையை இப்போது தான் புதிதாகக் காட்டில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த யானை அம்முவிடம் பேச ஆரம்பித்தது.

“எனக்கு எங்க அம்மா கிட்டப் போகணும். காட்டில் அங்கேயும் இங்கேயும் ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்த என்னை இவங்க இங்கே பிடிச்சுட்டு வந்துட்டாங்க” என்று சொன்னது.

“அப்படியா? ஐயோ பாவமே! உன்னைப் பாத்தா எனக்கு ரொம்பப் பாவமா இருக்கு. நான் உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன். இரு” என்று சொல்லி விட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தாள்.

சரியாக அந்த நேரத்தில் ஒரே பரபரப்பு. எல்லோரும் பதற்றத்துடன் ஓடினார்கள். எங்கேயோ கூடாரத்தில் ஓரிடத்தில் தீப் பிடித்ததால், பயந்து போய் அனைவரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சர்க்கஸ் ஊழியர்கள் விலங்குகள் இருந்த கூண்டுகளை நகர்த்திப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போக ஆரம்பித்தார்கள். சந்தடிச் சாக்கில் அம்முக்குட்டி அப்புவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அப்பு தனது தும்பிக்கையால் அம்முவைத் தூக்கித் தன் மேல் கவனமாக உட்கார வைத்தது. அம்மு காடு இருக்கும் வழியைக் காண்பித்தாள். இரண்டு பேருமாகக் காட்டுக்குள் புகுந்து விட்டார்கள்.

காட்டுக்குள் போனதும் அப்பு யானைக்குத் தனது குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு வழி தெரிந்து விட்டது. வேகமாக ஓடித் தன் அம்மாவிடம் போய்ச் சேர்ந்தது. அப்புவின் அம்மா, அப்பாவிற்கு அப்பாவைப் பார்த்து ஒரே சந்தோஷம். அம்முவிற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறினார்கள்.

“நீ எப்போ வேணும்னாலும் காட்டுக்கு வந்து அப்புவோட விளையாடலாம்” என்று சொல்லி விட்டு, அவளைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டின் எல்லையில் அவர்கள் ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் அந்த யானைகள் கொண்டு வந்து விட்டன. அம்முவும் சந்தோஷமாக வீட்டுக்குப் போனாள்.

அங்கே அம்முவின் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் எல்லோருமாகச் சேர்ந்து அம்முவைக் காணோமென்று தேடிக் கொண்டிருந்தார்கள். அம்முவைப் பார்த்ததும் அவர்களும் நிம்மதி அடைந்தார்கள். தீ விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து அவர்களுக்கு அம்மு தீயில் மாட்டிக் கொண்டு விட்டாளோ என்று ஒரே பயம். அம்மு நடந்த விஷயங்களைச் சொன்னதும்,

அம்முவின் அப்பா,

“நீ செஞ்சது நல்ல காரியம் தான். ஆனால் அந்த சர்க்கஸ் முதலாளி கிட்ட நாம போய்ப் பேசிச் சொல்லிடலாம். அவரிடம் உண்மையைச் சொல்றது தான் நல்லது” என்று சொல்லி விட்டார்.

அம்முவை அழைத்துக் கொண்டு போய், சர்க்கஸ் முதலாளியை நேரில் சந்தித்து நடந்த விஷயங்களை அப்படியே சொன்னார்.

“என் மகள் செஞ்ச காரியத்தால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பணத்தை நான் கொடுத்திடறேன்” என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்.

“இல்லை. இல்லை. அம்மு செய்தது சரியே. மிருகங்களைப் பிடித்து வைத்து வித்தை காட்டிப் பணம் சம்பாதிப்பது தவறு தான். நான் எல்லா விலங்குகளையும் விடுதலை செய்து விட்டு வேறு தொழில் செய்யப் போகிறேன். அம்முவுக்கு நான் நன்றி தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய தவறு எனக்குப் புரிந்து விட்டது” என்று சொல்லி விட்டார்.

அம்முவின் அப்பா, மகளின் கையைப் பிடித்துக் கொண்டு பெருமையுடன் வீட்டுக்கு நடந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments