நாம இந்த முறை பார்க்கப் போகிற பறவை “நத்தை குத்தி நாரை”. இதை ஆங்கிலத்தில் “Asian Openbill stork”ன்னு சொல்லுவாங்க. இதன் அறிவியல் பெயர் Anastomus oscitans. இந்த பறவை மற்ற நாரைகளைப் போலவே கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும். இந்திய துணைக் கண்டத்திலும் மற்ற ஆசிய நாடுகளிலும் காணப்படும். இதை நம்ம ஊர்ல கிராமப்புறங்களிலும் சரி நகரப்புறங்களிலும் சரி பரவலாக பார்க்கலாம். இது பொதுவா நீர் சார்ந்த இறை உண்ணி என்பதால் வயல்வெளிகளிலும் தண்ணீர் குறைவாக இருக்கிற நீர்நிலைகளையும் பார்க்கலாம்.

ஆண் பெண் பறவைகள் இரண்டுமே உருவத்தில் ஒத்திருக்கும். இதன் தலை கழுத்து மற்றும் உடம்பின் மேல்புறம் வெளிர் பழுப்பாக இருக்கும். இணை சேரும் காலத்தில் வெள்ளையாக இருக்கும். முதுகுப் பகுதியும் வால் பகுதியும் கருப்பாக இருக்கும். இளம் பறவைகளின் உடல் இளம் சாம்பல்/ பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆப்பிரிக்க வகை பறவைகள் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இந்த பறவையோட சிறப்பு அதோட அலகின் வடிவமைம்புதான். இப்பறவையின் மேல் அலகும் கீழ் அலகும் நடுவில் வளைந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். இந்த வடிவத்திற்கான பின்னணி காரணம் தெரியவில்லை. இளம் பறவைகளின் அலகுகளில் இந்தப் பிளவு காணப்படாது.
பொதுவாக நீர்நிலைகளில் இருக்கும் நத்தைகள் மற்றும் பூச்சிகளை உணவாக உண்ணும். நத்தைகளை பிரியப்பட்டு உண்பதால் நத்தை குத்தி நாரை என்று பெயர். கரையின் ஓரத்தில் நின்றுகொண்டு தலையைப் பக்கவாட்டில் சாய்த்து சாய்த்து நீரில் இருக்கும் உணவை கண்டுகொள்ளும். நத்தைகளையும் சிறிய பூச்சிகளையும் அலகுகளின் நுனியால் பிடித்து உண்ணும்.

பெரும்பாலும் கூட்டமாக காணப்படும். நீளமான இறக்கைகளை விரித்து நல்ல உயரத்தில் பறக்கக் கூடியவை. மற்ற நாரைகளைப் போலவே கழுத்தை முன் நீட்டியபடி பறக்கும். மழைக் காலத்திற்குப் பிறகு நவம்பர்முதல் மார்ச் வரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். மரங்களின் உச்சியில் குச்சிகளை கொண்டு பெரிய கூடாக கட்டும். பறவைகளில் ஆண் பெண் இரண்டுமே அடைகாக்கும். நீர்நிலைகளையும் அதை சார்ந்து இருக்கும் நீர் பறவைகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.