ஜான் ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டான். அவன் விழித்தவுடன் அவன் கண்ணில் முதலில் பட்டது, மூலையில் இருந்த ஒரு பெரிய பட்டம் தான். அவன் பெரிய அண்ணன் அதை அவனுக்காகச் செய்திருந்தான். 

பட்டத்தின் வால் கணஅடுப்பு வரை நீண்டிருந்தது. அதற்குப் புன்னகை சிந்தும் முகம். ஆனால் அன்று காலை அது ஜானைப் பார்த்துப் புன்னகைக்கவில்லை.  மிகவும் கவலையுடன் அது இருப்பது போல் காணப்பட்டது. “என்னை எதற்குச் செய்தார்கள்?  மூலையில் நிற்பதற்காக அல்ல என நினைக்கிறேன்” என்று அது, அவனிடம் சொல்வது போல் இருந்தது.

ஏனெனில் அதைச் செய்து முடித்து இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனால் வானத்தில் ஒரு பறவை போல், அதைத் தூக்கிச் செல்லும் காற்று வீசவே இல்லை.   

ஜான் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான். சட்டையைப் போட்டுக் கொண்டு கதவுக்கருகில் ஓடி, குன்றின் மேலே இருந்த காற்றாலை வேலை செய்கிறதா எனப் பார்த்தான்.  ஏனெனில் முதல் நாள் இரவு காற்று வீசத் துவங்கும் என அவன் நம்பியிருந்தான். 

ஆனால் காற்றாலை அமைதியாக அப்படியே சிலை போல் இருந்தது.  முற்றத்திலிருந்த மரத்தில் ஒரு இலை கூட அசையவில்லை.

எல்லாரும் பார்க்கக் கூடியவாறு ஒரு உயரமான குன்றின் மீது அந்தக் காற்றாலை இருந்தது.  அதன் நீண்ட இறக்கைகள் சுழல ஆரம்பித்தால் யாரும் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். 

காற்றாலை மில்லை வைத்திருப்பவர் காலையிலிருந்து இரவு வரைக்கும், உழவர்கள் கொண்டு வரும் தானியங்களை மாவாக அரைத்துக் கொண்டு பரபரப்பாக இயங்குவார்.

kaatrin velai
படம்: அப்புசிவா

ஜான் வெளியே பார்த்த போது, அந்த மில்லின் சொந்தக்காரர், செய்வதற்கு வேலை எதுவும் இல்லாமல் வீட்டு வாசலில் நின்றார்.

“ஓ!  இந்தக் காற்று அடித்தால்

என் காற்றாடி இறக்கைகள் சுழலும்

கனமான கற்களைச் சுற்ற வைக்கும்

சோளத்தையும், கோதுமையையும் அரைக்கும்

இந்தக் காற்று அடிக்கவில்லை என்றால்

இவற்றை எப்படி அரைப்பது என எனக்குத் தெரியவில்லை”

என்று அவர் மேலே மேகத்தைக் கவனித்தவாறு சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார். 

கீழே கிராமத்தைக் குனிந்து பார்த்த போது, அங்கு ரொட்டி செய்பவர் தொப்பியும், ரொட்டி சுடுவதற்கான கவச உடையும் நேர்த்தியாக அணிந்து கொண்டு, வேலை எதுவுமின்றிச் சும்மா நின்று கொண்டிருந்தார்.  

இவருடைய ரொட்டி சுடும் சூளை அடுப்பு குளிர்ந்து போய் இருந்தது. ரொட்டி சுடும் தட்டுகள் சுத்தமாக இருந்தன. 

வானத்தைப் பார்த்தபடியே.

“ஓ! இந்தக் காற்று வீச வேண்டுமென்று, எவ்வளவு ஆசைப்படுகின்றேன். காற்று அடித்தால் காற்றாலை மில் வேலை செய்யும். மிருதுவான ரொட்டியும், கேக்கும் செய்ய நன்றாக மாவை அரைத்துக் கொடுக்கும். அந்தப் பனி போன்ற வெள்ளை மாவு இல்லாமல் நான் எப்படி ரொட்டி சுடுவது என்று தெரியவில்லை” என்று ரொட்டிக்காரர் சொன்னார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், ஜான் காதில் விழுந்தது.  ஏனெனில் அவர் பக்கத்து வீட்டில் தான் வசித்தார். ஜான் அவருக்குத் தன் வருத்தத்தைத் தெரிவிக்க விரும்பினான். அவன் பேசத் துவங்குவதற்கு முன், தெருவிலிருந்து யாரோ அவனைக் கூப்பிட்டார்கள்.

தெருவில் துணியைச் சலவை செய்யும் பெண்மணி தான் அவனைக் கூப்பிட்டார். 

“இன்றைக்கு நிச்சயம் காற்று வீசும் என நம்புகிறேன்;

ஏனெனில் இன்று துணி துவைக்கும் நாள்;

வாளி சோப்பு நுரையில் துணிகளைக் கசக்கித் தேய்த்துத்  துவைத்திருக்கிறேன். என் துணிகள் வெள்ளைப் பனி போல் காய

இப்போது காற்று வீசவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.

கொடியில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தவர், “வா தம்பி! வந்து எனக்கு உதவி செய்” என்று ஜானைக் கூப்பிட்டார். அவர் கொடியில் காய வைத்த துணிகளில் பனி போல் வெள்ளை வெளெரென்று துவைத்த அவனுடைய ஒரு சட்டையும் தொங்கியது.

ஜான் காலை உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன் அவரிடம் ஓடினான்.  அவருடைய துணிக்கூடையைத் தூக்க அவருக்கு உதவி செய்தான். அது மிகவும் கனமாக இருந்தது ஆனால் அவன் அதற்காகக் கவலைப்படவில்லை.

அவன் வேலை செய்த போது, யாரோ சத்தமாகப் பாடினார்கள்.

“ஓ! காற்று வீசினால்

யே ஹோ!  சிறுவனே! யே ஹோ! யே ஹோ!

மகிழ்ச்சியுடன் என் கப்பல் போகும்

நீல அலைகள் நடனமாடும் கடலில் போகும்

ஆனால் கப்பல் போக காற்று வீச வேண்டும்

யே ஹோ என் சிறுவனே! யே ஹோ”

ஜானும், சலவை பெண்ணும், அங்கிருந்த மற்றவர்களும் யார் இவ்வளவு மகிழ்ச்சியாகப் பாடுகிறார்கள் என்று பார்த்தார்கள்.  அவர் ஒரு கப்பலின் காப்டன்.  அவருடைய வெள்ளை கப்பல் காற்று வீசாததால் துறைமுகத்தில் நின்றிருந்தது. அவர் காத்திருந்து பொறுமை இழந்துவிட்டார்.  அவர் நகருக்குள் நடந்து போன போது, இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே சென்றார். 

அது மிகவும் அழகான பாடல் என்று ஜான் நினைத்தான். வீட்டுக்குப் போய் அதைப் பாட முயன்றான். ஆனால் அவனுக்கு அதிலிருந்த எல்லா வார்த்தைகளும் தெரியவில்லை.  அதனால் அவன் கைகளைச் கால்சட்டை பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு தன் சின்ன நெஞ்சை நிமிர்த்தி எவ்வளவு சத்தமாகப் பாட முடியுமோ, அவ்வளவு சத்தமான குரலில் பாடினான்.

“யே ஹோ! சிறுவனே! யே ஹோ!”

அவன் பாடிய போது யாரோ அவன் கன்னத்தில் முத்தமிட்டார்கள்.  அவன் திரும்பி பார்க்க முற்பட்ட போது, அவன் தொப்பி பறந்து போய் முற்றத்தில் விழுந்தது.

அவன் அதை எடுக்க ஓடிய போது,   ஊர் முழுக்க  யாரோ கிசுகிசுக்கும் சத்தம் கேட்டது. அவன் மேலேயும் கீழேயும், சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் அங்கு யாருமேயில்லை.

அது வேறு ஒன்றுமில்லை! கிழக்கிலிருந்து வீசிய காற்று!

காற்று வீசுவதை மரங்கள் தாம் முதலில் தெரிந்து கொண்டன. கிளைகளை வளைத்தும், தாழ்த்தியும் காற்றை வரவேற்றன. குன்றுக்குக் கீழே கிளைகளில் இருந்த இலைகள் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடின.

காற்றாலையின் நீண்ட விசிறிகள் சுழலத் துவங்கின. அவை ரொட்டி சுடுபவர்க்குக் கோதுமையை வெள்ளை மாவாக அரைக்க ஆரம்பித்தன.  கண்கள் மின்ன அவர் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, ரொட்டிக்காக முட்டைகளை உடைத்து ஊற்றி அடிக்க ஆரம்பித்துவிட்டார். 

கப்பலின் காப்டன் தன் கப்பலைக் காற்றில் செலுத்தத் துவங்கிவிட்டார்.  அவர் கப்பலில் வெளிநாட்டுக்குப் போவதாகச் சொல்லியிருந்தார்.

ஜான் அவர் போவதைப் பாத்தான்.  பிறகு வேகமாக ஓடிப் பட்டத்தை எடுத்தான்.  சலவைப் பெண்  கொடியில் காய வைத்த பாவாடைகள் பலூன் போல காற்றில் உப்பின.  ஊர் முழுக்கச் செயல்பட துவங்கியது.

வீட்டுக் கூரையையும் மரங்களின் உச்சியையும் தாண்டிப் பட்டம் பறந்தது.  அச்சமயம், “இப்போது நான் சரியான இடத்தில் இருக்கிறேன்” என்று பட்டம் சொன்னது. 

காற்றாலையைத் தாண்டியும் பட்டம் பறந்தது. அதற்குச் சிறகுகள் இருந்தது போல் உயர உயரப் பறந்து சென்றது.  நூல் அறுபட்டு அது பறந்து போன பிறகு, ஜான் அதை மீண்டும் பார்க்கவில்லை.

கடைசியில் அது எங்கே போய் இறங்கியது என்று காற்றுக்கு மட்டுமே தெரியும்.   

(ஆங்கிலம் – மாட் லிண்ட்சே)

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments