ஒரு காட்டில் சிவி என்கிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்போதும் மிகவும் சோகத்துடன் காணப்பட்டது.
“சிவி, ஏன் எப்போதும் சோகமா இருக்க?” என்று அதன் அம்மா கேட்டார்.
“அம்மா எனக்கு ஏன் கழுத்து இவ்வளவு நீளமா அசிங்கமா இருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் குரங்கு ரங்குவும், குருவி ருவியும் என்னை ரொம்ப கிண்டல் பண்றாங்க அம்மா” என்று அழுதது.
“ரங்குவோட வாலு ரொம்ப நீளமாத்தானே இருக்கு, ருவியோட வாலு ரொம்ப குட்டியா இருக்கு. அவங்கள்ளாம் சந்தோஷமாத் தானே இருக்காங்க” என்றார் தாய்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது எனக்கு இந்த நீளமான கழுத்து வேண்டாம் புஹு புஹு” என்று அழுதது.
“சிவி! நம்ம கழுத்து நீளமா இருந்தா தான் உயரத்துல இருக்குற இலை தழையெல்லாத்தையும் பறிச்சு சாப்பிட முடியும். கடவுள் எது கொடுத்தாலும் அது சரியாகத் தான் இருக்கும். கவலைப்படாம சந்தோஷமா இரு” என்று சமாதானம் சொன்னது.
“ஓ கடவுள் தான் என் கழுத்தை நீளமா ஆக்குனதா? நான் போய் அவர்கிட்ட கேட்டுக்குறேன்” என்று வேகமாக மலை உச்சியை நோக்கி சென்று கடவுளை அழைத்தது.
“கடவுளே! எங்க இருக்கீங்க? சீக்கிரம் வந்து என் நீளமான கழுத்தை சின்னதா மாத்துங்க!” என்று கத்திக் கத்திக் கடவுளைக் கூப்பிட்டது.
சின்ன ஒட்டகச்சிவிங்கி அழுது கொண்டே கூப்பிட்டதால் கடவுள் இரக்கப்பட்டு அங்கே வந்துவிட்டார்.
“என்ன சிவி? எதற்காக என்னை அழைத்தாய்? உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்! எனக்கு நிறைய வேலை இருக்கிறது” என்றார் கடவுள்.
“கடவுளே, எனக்கு இந்த நீளமான கழுத்துப் பிடிக்கவே இல்லை தயவு செய்து அதை குட்டியா மாத்திடுங்க” என்ற வரம் கேட்டது.
கடவுள், “சிவி ஒருமுறை வரம் தந்தால் அதைத் திரும்பப் பெற இயலாது. நன்றாக யோசித்துச் சொல்”.
“அய்யோ! நிறைய தடவை யோசிச்சுட்டேன். கடவுளே! சீக்கிரம் எனக்கு அந்த வரத்தை குடுத்துடுங்களேன்”.
“சரி அப்படியே ஆகட்டும்! இன்று முதல் உன்னுடைய கழுத்தும் மற்ற விலங்குகளின் கழுத்தினைப் போல் சின்னதாக மாறட்டும்” என்று ஆசிர்வாதம் செய்தார்.

அதன்படியே உடனே சிவியின் கழுத்து சின்னதாய் ஆனதில் சிவிக்கு பயங்கர மகிழ்ச்சி. மறுநாள் தங்கள் நண்பர்களிடம் மகிழ்ச்சியுடன் தன் கழுத்தினைக் காட்டிக் கொண்டது. ஆனால் அதன் மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.
மான்களைப் போல் சிவியால் புற்களை மேய்ந்து பசியாற முடியவில்லை. அதன் பசிக்கு நிறைய இலை, தழைகள் தேவைப்பட்டது.
“அம்மா, அம்மா! தயவுசெய்து மேலே உள்ள இலைகளை பிய்த்துக் கீழே போடுங்களேன் எனக்கு பயங்கரமாய் பசிக்கிறது” என்று சிவி தன் தாயிடம் கெஞ்சியது.
“சிவி, நீ இப்போது பெரியவனாக மாறிவிட்டாய் அதனால் என்னால் உனக்கு உதவ இயலாது. உனக்கு வேண்டுமான உணவினை நீ தான் தேடிக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார் தாய்.
சிவியும் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க, யாருமே உதவி செய்ய முன்வரவில்லை.
“சிவி உனக்கு நீளமான கழுத்து தான் அழகு, அதன் மூலம் தான் உன்னால் இலைகளை சாப்பிட முடியும். யாராவது அந்த அழகான கழுத்தை சின்னதாக்கிக் கொள்வார்களா!” என்று ரங்கு குரங்கும், ருவி குருவியும் கேலி செய்தனர்.
அன்று வேறு மாதிரி கேலி செய்தவர்கள் இன்று இப்படிப் பேசுகிறார்களே என்று தன் தாயிடம் சென்று அழுதது சிவி.
“யாராவது எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். நம் தேவை என்ன என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார்.
உடனே சிவி மறுபடியும் கடவுளைத் தேடி சென்று ஓடி அழுது கொண்டே முறையிட்டது.
“கடவுளே! நான் தெரியாமல் தப்பு செஞ்சுட்டேன்.தயவுசெஞ்சு என்னை எப்படியாவது பழையபடி மாத்திடுங்க!” என்று மன்றாடி அழுதது. கடவுளும் அதன் மேல் பாவப்பட்டு அதை பழையபடி மாற்றிவிட்டார்.
தன் நீளமான கழுத்து மறுபடி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நிறைய இலை தழைகளை உண்டு மகிழ்ந்தது. இனி அதன் கழுத்தைப் பற்றி யார் கேலி செய்தாலும் அது கவலை இல்லாமல் தன் வேலை தனைச் செய்யும்.
அருமையான கதைகள். குழந்தைகளுக்கு படிக்க குதூகலமான பக்கங்கள் வெகு அருமை.
அருமையான கதை..👌👌