இதுவரை:

நான்கு குழந்தைகள் தங்கள் குட்டித்தம்பியுடன் கடற்கரைக்குப் போக, அங்கு அவர்கள் சந்தித்த மணல் தேவதை தினமும் இவர்களுக்கு ஒரு வரம் கொடுப்பதாக ஒத்துக் கொண்டது. நான்கு நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரத்தை வாங்கிய குழந்தைகள், அவற்றை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் வீணாக்கி விட்டார்கள். அதனால் சில தொல்லைகளும் பேர், ஐந்தாவது நாள் அவர்களை எங்கும் வெளியில் செல்லக்கூடாது என்று அவர்களது வீட்டு பணிப்பெண் மார்த்தா தடுத்துவிட்டார். இனி..

 அத்தியாயம் 5

 வீட்டிலேயே இருங்கள் என்று திட்டவட்டமாக மார்த்தா கூறி விட்டாலும் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்கள் மனம் மணல் தேவதையான ‘சாமீடை’யே (Psammead) சுற்றி வந்தது.

ராபர்ட், “எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு. ஒரு அரைமணி நேரம் மட்டும் போயிட்டு வரேன்” என்று மார்த்தாவிடம் கெஞ்சிக் கேட்டு அனுமதி வாங்கி விறுவிறுவென்று கடற்கரைக்கு ஓடினான்.

அங்கு மணல் தேவதையைப் பார்த்து அதனிடம், “எல்லாராலயும் வர முடியல.. நான் மட்டும்தான் வந்திருக்கேன். எனக்கு ஒரு வரம் குடுங்களேன்” என்று கேட்டான்.

 அது மிகவும் வெப்பமான நாள். அதனால் மணல் தேவதையாய் வெயில் தாங்க முடியவில்லை. இருந்தாலும், “சீக்கிரம் கேளு! நான் என்னோட குழிக்குள்ள போய் பதுங்கிக்கணும்” என்றது மணல் தேவதை.

 திடீரென்று என்ன கேட்பது என்றே ராபர்ட்டுக்குத் தெரியவில்லை. “ஐயோ என்ன கேக்குறதுன்னே தெரியலையே.. ஒரு பத்து நிமிஷம் இருங்க, நான் போய் மத்தவங்க கிட்ட கேட்டுட்டு வரேன்” என்றபடி மீண்டும் வீட்டுக்கு ஓடினான்.

 ஆனால் அங்கு அவன் வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. ‘நம்ம வீடு எங்கே?’ என்று ஆச்சரியத்துடன் அவன் செல்ல, கோட்டை வாயிலுக்கு சற்று தூரத்தில் இருந்த சில போர்வீரர்கள் அவனைத் தடுத்தனர். “நீ யாரு? எங்கே போறே?” என்று மிரட்டலாகக் கேட்டனர்.

“இது எங்களோட வீடுதான். இதுல தான் என்னோட சகோதரர்கள், சகோதரிகள் இருக்காங்க” என்று கூறிவிட்டு மணல் தேவதை, அது கொடுத்த வரம் பற்றிய மற்ற கதைகளையும் விளக்கமாகக் கூறினான் ராபர்ட். ஆனால் அந்த வீரர்கள் அவன் கூறியதை நம்பவில்லை.

“நல்லா கதை விடுற.. இங்கே நிக்கக் கூடாது. சீக்கிரம் வீட்டுக்குப் போ.. சாயங்காலம் அஞ்சு மணிக்கு நாங்க இந்தக் கோட்டையைத் தாக்கப் போறோம். அதுல நிறைய சண்டை நடக்கும். நீ சின்னப் பையன். இங்கே இருக்கக்கூடாது” என்று விரட்டி விட்டனர்.

‘அடடா! எப்படி நம்ம வீடு கோட்டையா மாறிச்சு? ஒருவேளை மத்தவங்க யாரும் ஆசைப்பட்டு இருப்பாங்களோ? அதை மணல் தேவதை நிறைவேத்தி இருக்கோ, என்னமோ?’ என்று மனதுக்குள்ளேயே கூறிக் கொண்டான்.

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், மணல் தேவதையிடம் ஓடி, “எனக்கு இந்த ஒரு உதவியை மட்டும் பண்ணுங்க.. நானும் என் சகோதர சகோதரிகள் கூட இருக்கணும்” என்று கேட்டுக்கொண்டான்.

“சரி போ!” என்றது மணல் தேவதை. அடுத்த நொடி இவன் கோட்டைக்குள் இருந்தான்.

“என்னாச்சு?” என்று ராபர்ட் மற்றவர்களைக் கேட்க, அவர்கள்,

“இன்னிக்கி, நம்ம வீடு ஒரு கோட்டை மாதிரி இருந்தா எப்படி இருக்கும் அப்படின்னு நாங்க ஆசைப்பட்டோம்.. இங்கே வச்சு நாங்க பேசிக்கிட்டது எப்படியோ மணல் தேவதைக்கு கேட்டுடுச்சு போல. அதனால நம்ம வீடு உடனடியா ஒரு கோட்டையா ஆயிடுச்சு. ஆமா! நீ எங்கே போனே?” என்று அவர்கள் ராபர்ட்டைக் கேட்டனர்.

“நான் வெளியில் இருந்து வந்தேனா, நம்ம கோட்டையை சில பேர் தாக்கப் போறதா சொல்லி தயாரா இருக்காங்க.. மணல் தேவதை கிட்ட கேட்டு ஒரு சின்ன வரம் வாங்கி திருப்பி இங்க வந்தேன்” என்றான்.

“ஐயோ! இப்ப என்ன பண்றது?” என்று ஆந்த்தியா கேட்க,

“வாங்க வெளிய என்ன நடக்குதுன்னு போய்ப் பார்க்கலாம்” என்று கூறி அவர்கள் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கு மார்த்தாவும்  லேம்ப்பும் ஒரு திறந்த வெளியில் அமர்ந்திருப்பது போல் இவர்களுக்குத் தெரிந்தது. லேம்ப் நாற்காலியில் இருப்பது போல் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாலும் அவனுக்குக் கீழ் எந்த நாற்காலியும் இல்லை. அப்படியே அந்தரத்தில் அமர்ந்திருந்தான். சுற்றிலும் சுவரோ, தரையோ வீட்டு உபயோகப் பொருட்களோ எதுவுமே இல்லை.

“என்ன இது வித்யாசமாக இருக்கிறதே?” என்று நினைத்து சமையல்காரரைப் பார்க்க, அவரோ சமைப்பது போல், காய் நறுக்குவது போல், அரைப்பது போல் பல செயல்களைச் செய்துகொண்டிருந்தார். ஆனால் கையில் கத்தி, காய்கறிகள், பாத்திரங்கள் எதுவுமே இல்லை.

“என்ன இது வித்யாசமா இருக்கே?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் ஜேன்.

“எனக்குப் புரிஞ்சிடுச்சு.. நாம மணல் தேவதை வரமா கொடுத்த கோட்டைக்குள்ளே இருக்கோம். அதனால நமக்கு அது கண்ணுக்குத் தெரியுது. ஆனா அவங்க எல்லாம் நம்ம பழைய வீட்டிலேயே தான் இருக்காங்க. நாம அந்த வரத்துக்குள்ளே இருக்கறதால, நமக்கு அவங்க மட்டும் தான் தெரியிறாங்களே ஒழிய, அவங்களோட சுற்றுப்புறம் எதுவும் தெரியல” என்றான் சிறில்.

“ஐயோ! எனக்குத் தலையே சுத்துது.. அப்ப எப்படி இவ்வளவு நாள் மணல் தேவதை கொடுத்த வரத்தால் வந்த காசு, லேம்ப் அழகானது அதெல்லாம் மத்தவங்க கண்ணுக்குத் தெரிஞ்சுது? எனக்குப் புரியவே இல்லை!” என்றால் ஆந்த்தியா.

இதற்கிடையில் வெளியே ஏதோ அரவம் கேட்டது. இவர்கள் அனைவரும் ஜன்னலுக்கு வெளியே பார்க்க, அந்தப் படை வீரர்கள் ஒன்று திரண்டு ஆயுதங்களுடன் கோட்டையை நோக்கி வருவது தெரிந்தது. “நாம நிஜமான தைரியசாலிங்களா இருந்தா இவங்களை உள்ளே வர விடக்கூடாது” என்றான் ராபர்ட்.

“ஆமா! நாம எல்லாரும் வீரமானவங்கதான்!” என்றனர் மற்றவர்கள். அந்த கோட்டையின் ஒரு பகுதியில் நிறைய கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கற்களை எடுத்து மறைவாக நின்று காவலர்களை நோக்கி வீசினர்.

அந்த கோட்டைக்கு வெளிப்புறம் ஒரு பெரிய அகழி போன்ற அமைப்பு இருந்தது. அதில் சில வீரர்கள் தங்கள் குதிரைகளுடன் பயங்கர ஆயுதங்களுடன் முன்னேறி வந்தனர்.

“அச்சச்சோ! அவங்க உள்ளே வந்துட்டா போச்சு!” என்று இவர்கள் நினைக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிலிருந்து வந்த சத்தங்கள் குறைந்தன.

“அப்பாடா! சாயங்காலம் ஆகப்போகுது. அப்போ தேவதை கொடுத்த வரமும் போயிடும்!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.  சரியாக ஆறு மணி ஆனவுடன் அவர்கள் நினைத்தபடியே கோட்டை, வீரர்கள் அனைவரும் மறைந்து அவர்களுடைய பழைய வீடு மட்டும் எஞ்சியிருந்தது.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments