கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் 16/06/1926 அன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.  

95 வயதாகும் இவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது 09/11/2021 அன்று ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.  ஏற்கெனவே 1989 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இது தவிர இன்னும் ஏராளமான விருதுகளுக்குச் சொந்தக்காரர். 

கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும், சமூக அநீதிகளுக்கெதிராகக் காந்திய வழியில் போராடிய போராளிகள் ஆவர்.  துவக்கத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் பின்னர் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் சேர்ந்து உழைத்தனர்.  கணவரின் மறைவுக்குப் பிறகு, கிருஷ்ணம்மாள் தொடர்ந்து தம் சமூகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

நிலமற்ற ஏழை வேளாண்மைக் கூலிகளுக்குச் சொந்தமாக நிலத்தைப் பெற்றுத் தந்ததில், இவர் உழைப்பு மகத்தானது. அதற்காக உழவனின் நிலவுரிமை இயக்கம் என்ற இயக்கத்தைத் துவங்கினார்.  அரசிடமிருந்தும், நில உரிமையாளர்களிடமிருந்தும் நிலத்தைப் பெற்று, அதை நிலமற்ற ஏழை உழவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  இதன்படி லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை இவர் மீட்டுக் கொடுத்திருக்கிறார். தாம் தானமாகப் பெற்ற 10000 ஏக்கர் விளைநிலத்தை ஏழைகளுக்கே பகிர்ந்து கொடுத்தார்.

குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாகவும், கல் வீடுகளாகவும் மாற்றுவதில் முனைப்பு காட்டினார்.  ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் உயர்கல்வி கற்கவும், சொந்த தொழில் செய்யவும் பல அமைப்புகளுடன் சேர்ந்து பாடுபட்டு வருகிறார்.

தாம் கொண்ட லட்சியத்துக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்து, அதற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சமூகப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்!

1 Comment

  1. Avatar

    padikkave pirammippaa iruku amma, Thank you for introducing such a great person

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *