வீசு காற்றே வீசு
விரைந்து வந்து வீசு
வீசு காற்றே வீசு
உள்ளம் குளிர வீசு
பக்குவமாய் செய்து வைத்த
பனையோலைக் காற்றாடிகள்
பரபரவெனச் சுழலவே
பாங்குடனே நீ வீசு
நூல் கொண்டு கோத்திருக்கும்
வால் கொண்ட பட்டங்கள்
வானில் உயரப் பறக்கவே
வேகமாக நீ வீசு
உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும்
அழகுவண்ணப் பச்சைக்கிளி
ஊஞ்சலாடி மகிழவே
உற்சாகமாய் நீ வீசு
வெப்பமான கோடையிலே
தொப்பலாக நனைந்திடும்
தேகம் யாவும் குளிரவே
தென்றலாக நீ வீசு
காற்றாலை இறக்கைகள்
கடகடவெனச் சுற்றிச்சுற்றி
ஆற்றல் மிகத் தந்திடவே
அபாரமாய் நீ வீசு
களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்
நெல்மணிகளோடிருக்கும்
பதரைத் தூற்றி விரட்டவே
பலமாக நீ வீசு
எட்டாத உயரந்தனில்
ஏற்றிவைத்த தேசக்கொடி
படபடத்துப் பறக்கவே
பீடுடனே நீ வீசு
வீசு காற்றே வீசு
விரைந்து வந்து வீசு
வீசு காற்றே வீசு
உள்ளம் குளிர வீசு