malaipppoo FrontImage 182
https://www.commonfolks.in/books/d/malaipppoo

மலைப்பூ – சிறார் நாவல்

ஆசிரியர் –  விழியன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (8778073949)

விலை:-₹ 95/-

மாஞ்சாலை எனும் மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமி, ஏழாம் வகுப்பு மாணவி.  அக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. ஐந்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், ஆறாவது படிக்க வேண்டுமென்றால், மலையிலிருந்து பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க வேண்டும். எனவே லட்சுமி தினமும் காலையில், மலையிலிருந்து கிளம்பும் பேருந்தைச் சரியான நேரத்துக்குப் பிடிக்க வேண்டும்.  அந்த ஒரு பேருந்தைத் தவற விட்டால், அன்று அவள் பள்ளிக்குச் செல்ல முடியாது. 

இறங்கும் இடத்திலிருந்து பள்ளி இருக்கும் இடமோ வெகு தூரம்.  எனவே லட்சுமி சமவெளியில் இறங்கி, அங்கிருந்து தோழியின் உதவியோடு சைக்கிளில் பயணம் செய்து, பள்ளிக்குச் செல்கிறாள்.  மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தினமும் பள்ளி சென்று வருவதே பெரிய பாடு என்பதை லட்சுமியின் வாயிலாக நாம் தெரிந்து கொள்கிறோம். மலைக்கிராமங்களில் படிக்க ஆசையிருந்தும் பள்ளி இல்லாக் காரணத்தால், எத்தனை லட்சுமிகள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்களோ?

“எல்லாருக்கும் அதே 24 மணி நேரம் எனும் போது, “அது எப்படி எல்லாருக்கும் ஒரே நேரம்?  நான் பள்ளி செல்ல 2 மணி நேரம் தினமும் செலவு செய்கிறேன். எனக்கு இருக்கும் நேரமும், பள்ளிக்கு அருகில் இருப்பவரின் நேரமும் ஒன்றா?”, என்று லட்சுமி கேட்பது, சரியான கேள்வி!

மாணவர்களுக்கிடையே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு லட்சுமிக்குக் கிடைக்கின்றது.  “அறிவியல் என்பது வானத்தில் இருந்து குதிப்பதல்ல; நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து துவங்க வேண்டும்”, என்று அவளுடைய ஆசிரியை முத்துக்குமாரி லட்சுமியை வழி நடத்துகிறார்.  

பனையைப் பற்றிய ஆய்வை எடுத்துக் கொள்கிறாள் லட்சுமி.  நாவலில் பனையைப் பற்றி வரும் குறிப்புகள், மாணவர்க்கு, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்

இந்த அறிவியல் தேசிய விழா, அவளுக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கின்றது.  முதன்முதலாய்ச் சமவெளியில் தங்குகின்றாள்.  இது வரை பயன்படுத்தியிராத மேல் நாட்டுக் கழிப்பறைகளைப் பார்க்கிறாள்.  அதை எப்படிப் பயன்படுத்துவது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

மாநிலத் தலைநகர் சென்னையைப் பார்க்கிறாள். பல அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்க்கிறாள்.  தொடர் வண்டியில் பயணம் செய்கிறாள்.  கடல் போல் ஆர்ப்பரிக்கும் கங்கையைப் பார்க்கிறாள். பல மாநிலங்களிலிருந்து விழாவில் பங்கேற்கும் தோழர்களின், நட்புக்குப் பாத்திரமாகிறாள்.

பட்டிக்காட்டான் பட்டணத்தை முதன்முதலாய்ப் பார்க்கும் போது என்னென்ன உணர்வுகள் ஏற்படுமோ, அதே பிரமிப்பு இவளுக்கும் ஏற்படுகின்றது.  அந்தக் காட்சிகளை ஒரு மலைக்கிராமத்துச் சிறுமியின் கோணத்தில், ஆசிரியர் அழகாகப் படமாக்கியிருக்கிறார்.  நாமும் அவளுடன் காசிக்குச் சென்று வந்த உணர்வு தோன்றுகிறது.

மேடையில் பிரதம மந்திரியைப் பார்த்து, அவள் இரண்டு கேள்விகளைக் கேட்கிறாள்.  அரங்கமே சில நிமிடங்கள், அதிர்ந்து, பயங்கர அமைதி நிலவுகின்றது.  பிறகு ஒட்டுமொத்த அரங்கமும், எழுந்து நின்று அவளைக் கைதட்டிப் பாராட்டுகின்றது.  அப்படியென்ன, அவள் கேட்டாள்?,  தெரிந்து கொள்ள, அவசியம் கதையை வாசியுங்கள்.

விடுதலை பெற்று, இத்தனை ஆண்டுகள் ஆகியும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கூட பெறாத, நம் பள்ளிக்கூடங்களின் அவல நிலையை, அவளின் கேள்விகள், வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..  கதை புனைவென்றாலும், உண்மையான ஆளுமைகள் பலரை, ஆசிரியர் குழந்தைகளுக்கு  இந்நாவலில் அறிமுகம் செய்திருக்கிறார். 

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள், “குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ‘மலைப்பூ’. ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சுக்குரலின் உரத்த முழக்கம். கண்கள் கலங்காமல் வாசித்துவிட முடியாது”, என்று இந்நாவல் குறித்துக் கூறியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு அறிவியலிலும், இயற்கையிலும் நாட்டம் ஏற்படுத்தும், சுவாரசியமான இளையோர் நாவல். 

அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

https://www.commonfolks.in/books/d/malaipppoo

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments