கடந்த வாரச் சுருக்கம்

சென்னையில் நீலாங்கரைப் பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியான யாஷினி வீட்டிற்கு அவளது சித்தி சித்தப்பா அவர்களது ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் விச்சு ஆகியோர் டெல்லியிலிருந்து விடுமுறைக்காக யாஷினி வீட்டிற்கு சென்னை வருகிறார்கள்.‌ ‌ அவளது அப்பா சங்கர், அம்மா சுகந்தி ஆகியோருடன் அனைவரும் மாமல்லபுரம் சுற்றிப் பார்க்க காரில் பயணப்படுகிறார்கள். வழிப் பயணத்தில் அம்மா சுகந்தி மாமல்லபுரத்திலிருக்கும் தாவரங்களைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார். புலிக் குகை அருகே வரும் பொழுது காரை நிறுத்துகிறார்கள்.

இனி…

இதமான காலைப்பொழுதில் சில்லென்ற காற்று வீச புலிக்குகை அருகே உள்ள புல்வெளியில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டுச் செல்லலாம் என்ற முடிவிற்கு அனைவரும் வருகிறார்கள். சுகந்தி மாமல்லபுரத்தில் சோழ மண்டலக் கடற்கரையின் அரிதான தாவரங்களைப் பற்றி விச்சுவிற்கும் யாஷினிக்கும் தொடர்ந்து விளக்க ஆரம்பித்தாள்.

“மாமல்லபுரத்திலிருக்கிற தாவரங்களில் தொண்டை மற்றும் ஈர் கொல்லி பற்றி பார்த்தோம். இன்னும் சில செடிகளை பற்றியும் சொல்றேன். கோனேரி மண்டபம் எதிர்ப்புறத்தில 200 ஆண்டுகளா வாழ்கிற கொடித் தாவரம் ஒன்று இருக்கு. அதற்கு கொடிப்புனலி (Derris scandens) அப்படின்னு பேரு. இது மிக அரிய வகை தாவரம்.

maamallapuram1 1

அப்புறமா ராமானுஜம் மண்டபத்துக்கு எதிரே வீரமரம் ( Drypetes sepiaria) ஒன்னு இருக்கு. இது மிக வலிமையாக இருக்கிறதால கோடாரி போன்ற கருவிகளுக்கு கைப்பிடி செய்யப் பயன்படுது.

குமிழம் (Gmelina asiatica) அப்படின்னு மஞ்சள் நிறப் பூ பூக்கும் குறுந்தாவரமும் இங்க இருக்கு. இலக்கியங்களில் பெண்ணோட மூக்கை ஒப்பிட இந்தப் பூவைச் சொல்லுவாங்க.”

maamallapuram1 2

“ஈச்ச மர வகைகள்ல ஒன்று சிற்றீசை (Phoenix pusilla). இது கோனேரி மண்டபத்துக்கு பக்கத்துலயும் ராஜகோபுரத்தின் எதிரிலேயும் இருக்கு. சுமார் 200 ஆண்டுகளுக்கு அதிகமா வாழுற இந்த மரம் 4 அடி உயரம் தான் இருக்கு. இயற்கையிலேயே வளரும் போன்சாய் தாவரம் இது.”

maamallapuram1 3

“அப்புறம் மாமல்லபுரத்தில் ஆதிவராக மண்டபத்துக்கு போற பாதையில மேற்கு வாயில் கதவு பக்கத்துல ஒரு கொடி இருக்கு. ஃபிகஸ் என்ற ஆலமர குடும்பத்தில கொடிவகைத் தாவரம் இது மட்டும் தான். அசினங்கொடி (Plecospermum spinosum) அப்படின்னு பேரு. இந்தக் கொடியோட இலைய உடைச்சா வர்ர பால், நம்ம உடம்புல இருக்குற காயங்கள, கட்டிகள குணப்படுத்த உதவுது. முன்னொரு காலத்துல தமிழகத்தோட வறண்ட பகுதிகளா இருக்கிற நீலகிரி ஆனைமலை பிரதேசத்தில 4000 அடி உயரம் வரை இந்த தாவரம் பரவலாக இருந்தது. ஆனா இப்போ இது வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள்ல மட்டுமே இருக்கு.”

maamallapuram1 4

“கடைசியா ஒரு தாவரத்தைப் பற்றி சொல்லப் போறேன். ராவணன் மீசை (Spinifex littoreus). இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

இப்படி ஒரு செடியின் பேரா? இருவரும் வியந்தனர்.

ஆமாம், வேறு எங்குமே காணப்படாம மணற்பாங்கான உலர்நிலங்கள்ல மட்டுமே இருக்கு. கடல் பகுதியில மண்ணரிப்பைத் தடுக்க பரிணாம வளர்ச்சியில தோன்றிய தாவரம் இது. இதனுடைய தோற்றத்தினால தமிழ்நாட்டுல ராவணன் மீசை அப்படின்னு நகைச்சுவையா அழைக்கிறாங்க. மாமல்லபுரத்தில கடற்கரை மணல்ல பரவலா இந்தச் செடி காணப்படுது.

maamallapuram1 5

“இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்ச மாமல்லபுரத்தில இருக்கிற செடிகளைப் பற்றி சொல்லிட்டேன். சங்கர் நீங்க புலிக்குகை பத்தி கொஞ்சம் விளக்கமா பிள்ளைகளுக்கு சொல்லிடுங்க” என்றவாறு சுகந்தி புன்னகைத்தாள்.

சரி வாங்க! அருகே சென்று பார்க்கலாம். என்றவாறு அனைவரும் சில அடிகள் அருகே இருந்த புலிக்குகைக்கு நகர்ந்தார்கள்.

மாமல்லபுரத்தில் ஆங்காங்கே பாறைகளால் ஆன குறுங்குன்றுகள் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. பல்லவர் காலத்தில் கற்கோவில்கள் கட்டப்பட்ட தொடக்க காலங்களில் இந்த குன்றுகளைக் குடைந்து சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். முழுவதுமாகச் செதுக்கப்படாமல் காலத்தை சுமந்து இன்றும் கம்பீரமாக நிற்கிறது. அரங்கம் போல் இருக்கும் இந்த அமைப்பின் முகப்பு, அரைநீள வட்ட வடிவில் அமைந்து, வெவ்வேறு விதமான வடிவமைப்பிலுள்ள அரங்கில் மேடையை நோக்குவது போல 11 யாளிகளின் தலைகளை அதனைச் சுற்றி கொண்டுள்ளது. அதன் இருபக்கமும் பாயும் புலிகள் மீது அமர்ந்திருக்கும் காவலாளிகளின் சிலைகள் அமைந்துள்ளது.

maamallapuram1 6

இந்த பாறையின் தெற்குப் பகுதியில் தும்பிக்கையைச் சுருட்டி, பெரிய காதுகளுடன் இருக்கும் யானை மீது உள்ள அம்பாரியில் தெய்வ உருவங்கள் அமர்ந்திருப்பது போல இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முடிக்கப்படாத குதிரை உருவமும் இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் சிம்ம உருவமும் அதன் வயிற்றுப் பகுதியில் ஒரு பிறையும் இருக்கிறது. இவை யாவுமே முழுமையாகச் செதுக்கப்படாமல் ஆரம்ப நிலையிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. தனித்து நிற்கும் இந்தக் குகை கட்டப்பட்டதன் நோக்கம் அறிய முடியவில்லை. ஆனால் இதனைக் கட்டியவர் அத்யந்த காமன் எனும் மன்னன் என்பதை இப்பகுதியிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது.

இந்த தகவல்களையெல்லாம் சங்கர் மூலம் அறிந்து கொண்ட அனைவரும் புலிக்குகை அமைந்துள்ள அதே சாளுவக் குப்பத்தில் மற்றொரு குகையான அதிரணசண்ட மண்டபம் எனும் குகைக் கோவிலையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று அவ்விடம் நோக்கி நகர்ந்தார்கள்.

                ‌      

நகரும்…      

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments