ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டோட பெயர் ஆனைவனம். அந்த காட்ல ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தாங்க.
காட்டில் தேன் எடுத்து ஊருக்குள் போய் விற்றுவிட்டு வருவாங்க. அதோட அந்த காட்ல மட்டுமே கிடைக்கிற அரிய மூலிகைகளை சேகரிச்சு அதையும் விற்று அவங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப்பாங்க.
அந்த ஆதிவாசி குடியில ஒரு குட்டிப் பொண்ணு அவங்க அம்மா கூட வாழ்ந்துட்டு இருந்தா. அவ பெயர் ஆதினி.
ஆதினியோட அம்மா மூலிகைகள் பறிச்சு “இத போய் வித்துட்டு வாம்மா”னு ஆதினிய அனுப்புவாங்க.
அவகிட்ட போடுறதுக்கு செருப்பு கூட இல்ல. ஆனா அம்மா தினம் காட்ல மூலிகை பறிக்க போகனும். அதை ஆதினி வித்துட்டு வந்தா தான் அவங்களுக்கு உணவு கிடைக்கும்.
அதனால ஆதினி செருப்பில்லாம வெறும் காலோட நடந்து போவா. கால்ல முள்ளு குத்தினாலும் வலியை எல்லாம் தாங்கிப்பா.
ஒரு நாள் ஆதினி தன்னோட மூலிகை பையோட காட்ல நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது வழியில ஒரு தாத்தாவை பார்த்தாள்.
அவர் ரொம்ப சோர்வா கண்மூடி படுத்து இருந்தார். அப்ப அவர கடிக்கிறதுக்கு ஒரு ஓநாய் வர்றத ஆதினி பார்த்தாள்.
உடனே, தன்கிட்ட இருந்த ஊதுகுழலை எடுத்து அதிக சத்தம் வருவது போல அதை ஊதினாள். அதீதமான மாறுபட்ட சத்தத்த கேட்ட அந்த ஓநாய் பயந்து ஓடிடுச்சு.
சத்தம் கேட்டு தாத்தாவும் கண் விழிச்சார்.
“ரொம்ப சோர்வா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா தாயி” அப்டின்னு ஆதினிகிட்ட கேட்டார்.
ஆதினி தனக்கு அம்மா குடுத்து விட்ட தண்ணீர் போத்தலை எடுத்து தாத்தாகிட்ட குடுத்தா.
அதை வாங்கி தன் சோர்வு நீங்க குடிச்ச தாத்தா..
தன்னை ஓநாய்கிட்ட இருந்து காப்பாற்றி, நீரும் குடுத்த ஆதினிக்கு ஏதாவது செய்யனும்னு நினைச்சார்.
அதனால அவர் தன்கிட்ட இருந்த மரப்பட்டைய சீவி அவளுக்கு அழகான ஒரு செருப்பு செஞ்சு குடுத்தார்.
“தாயி நான் ஒரு செருப்பு தைக்கிற தாத்தா. பக்கத்துல இருக்கற ஊரோட தலைவர் மகளுக்கு செருப்பு தைக்கிறதுக்காக அதற்கேற்ற மரம் சீவ நான் இந்த காட்டுக்கு வந்தேன். வயசாகிட்டதால சோர்ந்து போய்ட்டேன். நீ எனக்கு செஞ்ச உதவிக்காக இந்த செருப்ப உனக்கு அன்பளிப்பா தரேன். இத போட்டுக்கிட்டு நீ நடந்தா உனக்கு காட்ல முள்ளே குத்தாது” அப்டின்னு சொன்னார்.
அதற்கப்பறம் மூலிகை விற்க தாத்தா குடுத்த செருப்ப போட்டுக்கிட்டு ஆதினி மகிழ்ச்சியா போய்ட்டு வந்தா.
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.