முன்னொரு காலத்தில் காட்டுக்கு நடுவே ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் தான் நெடுநாட்களாக ஒரு முதலை வாழ்ந்து வந்தது.
ஆரம்ப காலத்தில் குளத்தில் தண்ணீர் தளும்ப தளும்ப இருந்தது. ஆதலால் அந்தக் குளத்திற்கு நிறைய மிருகங்கள் தண்ணீர் குடிக்க வரும்.
முதலை அவற்றைப் புசித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. வெயில் காலம் வந்ததும் தண்ணீர் வற்றத் துவங்கியது. அதன் பிறகு அந்தப் பக்கம் வேறு மிருகங்கள் வருவது குறைந்து போனது. பருவகால மழையும் பொய்த்துப் போனதால், அந்தக் காட்டில் இருந்த பாதி மிருகங்கள் நீர் வளம் தேடி பக்கத்து காட்டிற்கு போய்விட்டன.
ஆதலால் முதலைக்கு சாப்பிட எந்த மிருகமும் கிடைக்கவில்லை. வழிதவறி ஏதாவது மிருகம் வரும் வரை முதலை பல நாட்கள் பசியும் பட்டினியுமாய் கிடக்கும். அப்படி வரும் மிருகங்கள் தான் முதலைக்கு உணவு.
அந்த நேரம் பார்த்து அப்பகுதிக்கு புதிதாய் ஒரு குரங்கும் வந்து சேர்ந்தது. காரணம் அந்த குளத்தைச் சுற்றி ஏகப்பட்ட தென்னை மரங்கள் இருந்தன. வேறு எங்கும் சாப்பாடு கிடைக்காததால் குரங்கு இங்கு வந்து வாழ ஆரம்பித்துவிட்டது.
குரங்கு தினமும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து வருவதை முதலை பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கும். முதலையும் தன் சுற்றத்தான் என்பதால் குரங்கு தினம் ஒரு இளநீரை குளத்து வாசலில் வைத்துவிட்டுச் செல்ல ஆரம்பித்தது.
எதுவும் இல்லாமல் இருப்பதைவிட, இருப்பதை உண்டு உயிர் வாழலாம் என்று நினைத்த முதலையும் இப்போது தினமும் இளநீர் குடிக்கப் பழகிக் கொண்டது.
இருவருக்கும் பல நாட்களாக இந்த பழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் குரங்கு தென்னை மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்து விட்டது.
அதை தூரத்தில் இருந்து பார்த்த முதலை வேகமாக அது இருக்கும் இடத்திற்கு வந்தது.
ரத்தம் வழிய தரையில் கிடந்த குரங்கு, “நண்பா என்னை காப்பாற்று” என்று முதலையிடம் கெஞ்சியது.
ஆனால் ரத்தத்தைப் பார்த்ததும் ஆசை கொண்ட முதலை குரங்கினை கடித்துத் தின்று விட்டது. கடைசியில்தான் முதலைக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது…
‘குரங்கு இல்லை என்றால், இனிமேல் எனக்கு எப்படி இளநீர் கிடைக்கும்?’