ஒரு சிறிய கிராமத்தில் முத்து என்கிற விறகு வெட்டி வசித்து வந்தான். அவனுக்குத் தமிழ்ச்செல்வன் என்ற எட்டு வயது மகன் இருந்தான். முத்து தினமும் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்று, விறகுகளை வெட்டி வந்து அதைச் சந்தையில் கொண்டு போய் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வன் மிகவும் புத்திசாலியான பையன். வகுப்பிலேயே அவன் தான் முதல் மாணவனாக வருவான். எல்லோரிடமும் அன்பாகவும், பெரியவர்களிடம் மரியாதையுடனும் பழகுவான். அப்பா, அம்மாவிடம் மிகவும் பாசம் வைத்திருந்தான்.
அப்பா காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் போது விடுமுறை நாட்களில் அவனும் கூடச் செல்வதுண்டு. அப்படிப் போகும் போது பெரிய மரம் ஒன்றில் தன் அம்மாவின் புடவையால் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மர நிழலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மரத்தில் உள்ள பறவைகள் கத்தும் இனிமையான சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் பறவைகளின் அழகில் மயங்கிப் போய் நின்றான். மைனா, கிளிகள், காகம், குருவிகள், மஞ்சள் கழுத்து சிட்டு, தவிட்டுக் குருவி இவைகள் தவிர மரம் கொத்தி மற்றும் அணில்கள் கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து அதில் வாழ்ந்து வருவதைக் கண்டான்.
தமிழ்செல்வனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு பெரிய மரம் எத்தனை உயிரினங்களுக்கு இடம் கொடுக்கின்றது. அவைகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக வாழ்கிறது என்று எண்ணியபடியே மரம் தந்த நிழலிலும், சில்லென்ற காற்றிலும் அப்படியே உறங்கிப்போனான்.
வழக்கம் போல் ஒரு நாள் தன் அப்பாவுடன் காட்டிற்கு வந்தவன், எப்போதும் அவன் ஊஞ்சல் கட்டி விளையாடும் பெரிய மரத்தை வெட்ட ஆரம்பிக்கும் போது அவன் மனம் வேதனை அடைந்து, அப்பாவின் கைகளைப் பிடித்து நிறுத்தினான். என்னடா என்று அவன் அப்பா கேட்க, அப்பா தயவு செய்து இனிமேல் எந்த மரத்தையும் வெட்டாதீங்க. நேத்து தான் எங்க டீச்சர் காடுகளைப் பத்திப் பாடம் நடத்தும் போது மரங்களோட பயன்களைப் பத்தி சொன்னாங்க.. நமக்கெல்லாம் மழை வேணும்னா மரங்கள் இருக்கணும் அப்பா. அது மட்டும் இல்லப்பா, மரம் நல்ல நிழல் தருது, சுத்தமான காத்து கிடைக்கிறது., எத்தனையோ பறவைங்களுக்கு கூடு கட்டி வாழறதுக்கு இடம் கொடுக்குது என்றான்.
இதைக் கேட்ட அவனின் அப்பா, எவ்வளவு புத்திசாலி என் மகன் தமிழ்ச்செல்வன். இத்தனை நாட்கள் நாம தப்பு செய்து விட்டோமே என்று வருந்தி, தமிழ், இனிமே நான் எந்த மரத்தையும் வெட்ட மாட்டேண்டா கண்ணு. வேற ஏதாவது வேலை செஞ்சி உன்னை இன்னும் நிறையப் படிக்க வைப்பேன். அதைக் கேட்ட தமிழ்ச்செல்வன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு பறவைகளைப் பார்த்து தன் கைகளை ஆட்டியபடியே வீட்டிற்கு சென்றான்.