வினிஷா உமாசங்கர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி. இவர் 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்த COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வண்டியைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு, “எர்த்டே நெட்வொர்க் ரைசிங் ஸ்டார்” என்ற விருது கிடைத்தது. கூடவே பருவநிலை மாநாட்டில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன் செயல்படும் 12 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்புகள் இவ்விருது வழங்கி ஊக்குவிக்கின்றன.
“துணிகளை இஸ்திரி போடுவதற்காகக் கரி தேவைப்படுகின்றது. கரிக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. எரித்த கரியை மண்ணில் கொட்டுவதால் சூழல் மாசுபடுகின்றது. சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வண்டியின் மேற்புரம், சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்படுகின்றன. 5 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால், ஆறு மணிநேரம் இஸ்திரி பண்ண முடியும்” என்கிறார் இவர்.
தமக்குச் சிறு வயதிலிருந்தே அறிவியலில் ஆர்வம் அதிகம் என்றும் தந்தை வாங்கித் தந்த பொது அறிவுக் களஞ்சியப் புத்தகம் மூலம், அறிவியல் தகவல்கள் பல கற்றுக் கொண்டேன் என்றும் இவர் கூறுகிறார்.
ஏற்கெனவே தானாக இயங்கும் அறிதிறன் மின்விசிறியைக் கண்டுபிடித்து விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வினிஷா மென்மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தித் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்!
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.