இதுவரை: நான்கு சகோதர சகோதரிகளுக்கு ஒரு மந்திரக் கம்பளமும் மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் கிடைக்கிறது. அதன் மூலம் தினமும் மூன்று வரங்களை அவர்களால் பெற முடியும். அவற்றால் அவர்கள் பல சாகசங்களைப் புரிகிறார்கள். சில நாட்கள் கழிந்த பின்னர், இதை வைத்து யாருக்காவது நல்லது செய்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுகிறது. இனி..

அத்தியாயம் 5

ஃபீனிக்ஸ் பறவையை அழைத்து, “இன்னிக்கு நாம யாருக்காவது உதவி பண்ணனும்.. அதுக்கு ஏத்த மாதிரி எங்க போகலாம்னு நீயே சொல்லு”, என்று குழந்தைகள் கூறினர்.

கம்பளத்தை விரித்து அனைவரும் அதில் ஏறி அமர்ந்தவுடன் ஃபீனிக்ஸ் பறவை ஏதோ சொல்ல, உடனே வானத்தில் ஜிவ்வென்று பறந்தது கம்பளம். அது சென்று சேர்ந்த இடத்தைப் பார்த்தவுடன் குழந்தைகளுக்கு ஆச்சரியம். “ஏய்! இது நாம முதல்நாள் போனோமே அந்த பழமையான கட்டிடம் தானே!”, என,

“ஆமா! அது தான்!”, என்றது ஃபீனிக்ஸ் பறவை.

கம்பளம் கிடைத்த முதல் நாள் அவர்கள் சென்ற கூரை இல்லாத கோபுரத்திற்குள்ளாக அவர்கள் பயணித்தார்கள். அன்று அவர்கள் கண்டுபிடித்து விட்டு எடுக்காமல் போன தங்க நாணயங்கள் நிரம்பிய பை கண்ணுக்கு எதிரில் கிடந்தது. “அப்ப இந்தக் காசை வச்சுத் தான் நாம யாருக்கோ உதவி பண்ண போறோமா?”, என்று சிறில் கேட்க,

“ஆமா! சரியா சொல்லிட்டே!”, என்றது ஃபீனிக்ஸ் பறவை. பின் மீண்டும் கம்பளம் உயரப் பறந்து அந்தக் கட்டிடத்தின் அருகிலிருந்த தெருவிற்குள் நுழைந்து, அங்கு ஒரு வீட்டின் முன்னே தரையிறங்கியது. குழந்தைகளும் அதிலிருந்து இறங்கினர். ஃபீனிக்ஸ் பறவையை ராபர்ட் தன் கோட்டிற்குள் மறைத்து வைத்துக் கொண்டான்.

அவர்கள் அந்த வீட்டின் கதவைத் தட்ட, அழுத முகத்துடன் ஒரு பெண் வந்து கதவைத் திறந்தாள். உள்ளே சோகமாக ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான்.

“யார் நீங்க?”, என்று அந்தப் பெண் கேட்க,

“நாங்க சும்மா இந்தப் பக்கம் வந்தோம்.. கொஞ்சம் தண்ணி குடுங்க” என்று கேட்டாள் ஜேன். அந்தப் பெண் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு இவர்களுக்கு குடிப்பதற்காகத் தண்ணீர் கொண்டு வந்தாள்.

“ஏன் அழறீங்க? நாங்க காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா?”, என்று ஆந்த்தியா அன்பாகக் கேட்க, அந்தப் பெண் மேலும் கண்ணீர் விட்டாள்.

“இந்தப் பையன் என் அண்ணனோட மகன். பக்கத்துல ஒரு பெரிய அரண்மனை இருக்குதே.. அது எங்களோடது தான்.. கெட்ட நேரம் வந்துருச்சு.. அவங்க சொத்துக்கள் எல்லாம் எங்களை விட்டுப் போயிடுச்சு.. எங்க அண்ணனும் அவன் மனைவியும் இறந்து போயிட்டாங்க.. நானும் இவனும் சாப்பிடக் கூட பணமில்லாமல் கஷ்டப்படுறோம்”, என்று வருத்தத்துடன் கூறினாள்.

“அப்ப நாங்க சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கோம்”, என்ற ஆந்த்தியா, அங்கிருந்து எடுத்து வந்த தங்க நாணயங்கள் நிரம்பிய பையை நீட்டினாள். “இந்தாங்க இது அந்த அரண்மனையில் இருந்து எடுத்தது தான். அதோட உண்மையான உரிமையாளர்கள் கிட்டேயே அது வந்து சேர்ந்துடுச்சு.. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்”, என்று ஆந்த்தியா கூற,

“அந்த அரண்மனைக்குள்ள எங்கேயோ ஒரு புதையல் மறைஞ்சிருக்குன்னு நானும் எங்க முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.. அதை எப்படி எடுக்கணும்னு இவ்வளவு நாள் தெரியாம இருந்துச்சு.. இப்ப உங்க மூலமா கிடைச்சிருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி! இதை வச்சு நாங்க ஏதாவது தொழில் செஞ்சு சமாளிச்சுக்குவோம்!”, என்றாள்.

விரும்பியபடியே ஒரு நல்ல காரியத்தைச் செய்த மகிழ்வுடன் குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பினர்.

அடுத்த நாள் பீனிக்ஸ் பறவைக்கு ஒரு ஆசை தோன்றியது. “உங்க ஊர்ல பீனிக்ஸ் பறவைக்குக் கோவில் இருக்குதா? அப்படி ஒரு கோவிலுக்கு என்னைக் கூட்டிட்டுப் போங்க”, என்று குழந்தைகளிடம் கேட்டது.

“ஃபீனிக்ஸ் பறவைக்குக் கோவிலா? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே என்று ஜேனும் சிறிலும் சொல்ல,

ராபர்ட், “அங்கே மெயின் ரோட்ல ஒரு பெரிய கட்டடத்தில் ஃபீனிக்ஸ் பறவையோட படம் போட்டிருக்கும்.. அதுதான் ஃபீனிக்ஸ் கோவில்னு நினைக்கிறேன்”, என்றான்‌.

“இருக்கும் இருக்கும்.. வாங்க நாம போய்ப் பார்க்கலாம்”, என்று ஆந்த்தியா கூறினாள். நான்கு பேரும் ஃபீனிக்ஸ் பறவையை அழைத்துக் கொண்டு அந்தக் கட்டிடத்திற்குச் சென்றனர். உண்மையில் அது ஒரு பெரிய அலுவலகம். அதன் உரிமையாளர் அழகிற்காக முகப்பில் ஃபீனிக்ஸ் பறவையின் உருவத்தைப் பெரிதாக வரைந்து வைத்திருந்தார்.

உள்ளே சென்றவர்கள் அங்குள்ள மேலாளரைச் சந்தித்து, ஃபீனிக்ஸ் பறவையை அறிமுகப்படுத்தினர். “இது எங்களோட மந்திர ஃபீனிக்ஸ் பறவை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை பூமிக்கு வரும். இப்ப அப்படி வந்திருக்குது.. அது கோவிலுக்குப் போகணும்னு சொன்னதால இதைக் கோவில்னு நினைச்சு வந்தோம். ஆனா இது பெரிய ஆஃபிஸா இருக்குதே!”, என்றனர்.

அப்போது ஃபீனிக்ஸ் பறவை, “இதுதான் ஃபீனிக்ஸ் கோவில்.. எங்கள் இனத்தைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாடுங்க பார்ப்போம்!”, என்றது. எல்லாப் பணியாளர்களுக்கும் இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

“அவ்வளவுதானே! பாடிட்டா போச்சு!”, என்றார் மேலாளர். உடனே எல்லாரும் சேர்ந்து வட்டமேஜை மாநாடு நடக்கும் அறையில் வைத்து ஒரு வாழ்த்துப் பாடலைப் பாடினார்கள். ஃபீனிக்ஸ் பறவை பெருமையுடன் அந்த மேஜையின் நடுவில் நின்று அவர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டது. பின் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.

அந்தப் பணியாளர்களுக்கும் மேலாளருக்கும் இவர்கள் வந்து சென்றபின் எதுவுமே தெளிவாகவே நினைவில்லை. நடந்தது ஒரு கனவாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டனர். ஃபீனிக்ஸ் பறவையின் ஆசையை நிறைவேற்றியதில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், ஃபீனிக்ஸ் பறவைக்கு இன்னொரு ஆசையும் வந்துவிட்டது! அது என்ன?

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments