வணக்கம் பூஞ்சிட்டுகளே!
எல்லாரும் எப்படி இருக்கீங்க.
இப்போது கத்திரி வெயில் கன்னாபின்னான்னு வேலைப்பாத்துட்டு இருக்கிற வேளை இல்லையா?!
இந்த சமயத்துல நல்ல நீர் சத்துள்ள ஆகாரங்கள், சீரான இடைவெளி விட்டு முடிந்த அளவிற்கு தண்ணீர், இளநீர் மோர்ன்னு நீர்பானங்கள் சகிதமா வெயிலின் தாக்கத்தை சமாளிக்க குடையோட களத்துல குதிச்சா தான் இந்த கோடை நமக்கு கொடையா இருக்கும் . இல்லாவிட்டால் அடிக்கிற வெயிலுக்கு வேர்க்கிற வேர்வைல நம்ம எடையை தூக்கிடும் இந்த கோடை. சரி, எதுக்கு ஜாடை மாடையா பேசிக்கிட்டு.. நேரா விஷயத்துக்கு வாங்களேன்ங்கறீங்களா ?!
இதோ வந்தாச்சு..
குழந்தைகளே, இந்த முறை கதை கதையாம் காரணமாம் பகுதில நாம கதை கேட்க போறது ஒரு ஊர் இல்ல.. பல ஊர். அதுல முதல வரப்போறது நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஊர்.
இந்த ஊர் பேரைக்கேட்டாலே உர்ருன்னு இருக்கவங்களும் ஜில்லுனு ஆகிடுவாங்க.
அட அவ்வளவு ஏன்.. இந்த ஊருக்கு போகப்போறோம்ன்னு நினைச்சாலே சும்மா ஜிலுஜிலுன்னு நம்ம மனசுக்குள்ள காத்து அடிக்கும்..
அதிலும் கோடைக்காலம் வந்தாலே நம்மில் பல பேர் எப்போடா இந்த ஊருக்கு போகலாம்.. ஒரு குளியலை போடலாம்ன்னு காத்துக்கிடப்பாங்க..
என்ன கண்டுபிடிச்சிடீன்களா?
இல்லையா..?
சரி, நானே சொல்லிடறேன்..
இன்னைக்கு நாம கதை கேட்க போகிற ஊர்.. குளுகுளு குற்றாலம்!
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அகஸ்திய மலையோட பகுதியில தென்காசிக்கு மிக அருகில் இருக்கிற குளு குளு ஊர் தான் குற்றாலம்.
குற்றால அருவிகள் உலக பிரசித்தி.
குற்றாலீஸ்வரர் கோயிலோடு இங்கே இருக்கிற ஒன்பது அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்டஅருவி, சென்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவி அழகோ அழகு. இந்த அருவிகளில் ஒவ்வொன்றிலும் ஓரிரு நிமிடம் சும்மா ஜில்லுனு தலைக்கொடுப்பது பேரானந்தம்! அதிலும் இங்கே அடிக்கற அருவியின் சாரல் காற்று ஆளையே அலேக்காக சிலிர்க்க வைக்கும். நினைக்கவே ஜில்லுனு இருக்குல்ல.. சரி இப்போ இந்த ஜிலு ஜிலு குலு குளு ஊரோட பேருக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுப்போமா?
பொதுவா தமிழகத்துல இருக்கிற பல ஊர்களும் சரி, ஊரோட பெயர்களும் சரி இரண்டிற்கு பின்னாலயும் ஆன்மீக கதை இருக்கும்.
குற்றாலத்திற்கும் அப்படி ஒரு சாமி கதை உண்டு. அதன் அடிப்படையில் குற்றாலநாதர் கோயில் கொண்டுள்ளதால் இது குற்றாலம் என்று அழைக்கப்படுகிற குற்றாலத்திற்கு பேர் வந்ததிற்கு இன்னொரு காரணமும் இருக்கு.
அது தான் ஆல மரம்!
ஆல மரத்திற்கும் குற்றாலத்திற்கு என்ன சம்பந்தம்ன்னு தானே பார்க்கறீங்க!
இருக்கு.. தொடர்பிற்கு.. அடுத்து அங்க தான் வரேன்!
முன்னொரு காலத்தில இந்த பகுதியில நிறைய ஆல மரங்கள் இருந்துச்சாம். அதுவும் குறு ஆல் மரங்கள் என்று சொல்லப்படுகிற தனிவகையான குட்டையான ஆலமரங்கள்.
இப்படி குறு ஆல் மரங்கள் நிறைந்த பகுதிக்கு , குற்றாலம் என்று போகப்போக பெயர் நிலைத்ததாக சொல்லப்படுகிறது.
இது போல மரங்கள் அல்லது ஊரோட பகுதியில் இருக்கும் நீர்நிலைகளை மையமா வெச்சு நிறைய ஊர்கள் அதற்கான பெயர்களை பெற்றிருக்கின்றன.
உதாரணத்திற்கு, கச்சி மரங்கள் நிறைந்த ஊர் முதலில் கச்சி என்றாகி பிறகு கச்சிப்பேடு என்றாகி கடைசியில் காஞ்சீபுரம் என்றானதாம்.
மருத மரங்கள் நிறைந்த ஊர் பின்னொரு காலத்தில் மருவி மதுரை என்றானதாம்
தில்லை மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி ஒரு காலத்தில் தில்லை நகர் என்ற ஊராக ஆனது . அது தான் இப்போதைய சிதம்பரம்.
கோவில்பட்டி அருகே செண்பகப்பூ நிறைந்த ஏரி பகுதி பிற்காலத்தில் மருவி செண்பகப்பேரி என்றானது !
செங்கழுநீர் நிறைந்த ஏரி பின்னாளில் செங்கல்பட்டு ஆனது.
பெரிய குளத்தை மையமாக வைத்து அமைந்த ஊர் பெரியங்குளம் என்றானது
அப்போ சாத்தான் குளத்துல சாத்தான் இருக்குமா அப்படின்னு யாரோ கேட்கறது எனக்கு கேட்குது.
இதே சந்தேகம் எனக்கும் வந்தது 🙂 ஊருக்குள்ள விசாரிச்சு பார்த்ததில தான் விஷயமே தெரிஞ்சுது!
அதாவது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கோவில்பட்டி பகுதியில தண்ணீர் பஞ்சம் ரொம்ப பயங்கரமா இருந்துச்சாம். கொஞ்ச நஞ்சம் புஞ்சை நஞ்சைக்கூட தப்பிக்க வழியில்லாத நிலைமையாம். அப்போ அந்த பகுதியில இருந்த மரிக்கொழுந்து நல்லூர் அப்படிங்கிற ஊரை சேர்ந்த ஜமீன்தாரான சாத்தான் சம்பவர் ஊருல இருக்கிற தண்ணீர் பஞ்சத்தை போக்கிட அந்த பகுதியில நிறைய குளங்களை அமைச்சாராம் ! சில காலத்துக்கு பிறகு குளங்களால் நிறைஞ்சு இருந்த அந்த பகுதியை காலப்போக்கில் சாத்தான் குளம் அப்படின்னு பேராகி இன்னைக்கு வரைக்கும் அப்படியே அழைக்கப்படுதாம்!
ஊரோட நலத்திற்காக தனி ஒரு மனிதரின் செயல் இன்றும் காலம் தாண்டி, ஊரின் அடையாளமாக மாறி இருப்பது எத்தனை அழகு !
இதை தான் அவ்வையார் அறம் செய்ய விரும்புன்னு ஆத்திச்சூடியில சொல்லியிருக்காங்க போல!
என்ன குட்டீஸ்.. இன்னைக்கு சொன்ன ஊர் கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா.. மீண்டும் அடுத்த மாதம் இதே போன்றதொரு கதையோடு உங்களை சந்திக்கிறேன்! அது வரை அம்மா அப்பா சொல்பேச்சுக்கேட்டு உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் மனதில் எப்போதும் மகிழ்ச்சி போங்க கோடையைக் கொண்டாடுங்க குட்டீஸ்:) வரட்டுமா!