“வணக்கம் பூஞ்சிட்டுக்களே! ஹாய் அனு!” என்றபடி வந்தது எந்திர ரோபோட் பிண்டு.

“ஹாய் பிண்டு” என்று சோகமாகச் சொன்னாள் அனு.

“என்னாச்சு அனு, இவ்வளவு சோகமா இருக்க?”

“அதுவா! அப்பா காலையில என்னை மீன் பிடிக்கக் கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாரு, இப்ப வெயில் ரொம்ப அதிகமா இருக்கு வெளியே போக வேண்டாம்னு சொல்லிட்டாரு பிண்டு!” என்று வருத்தத்துடன் கூறினாள் அனு.

“இப்ப என்ன உனக்கு மீன் பிடிக்கணும் அவ்வளவுதானே! நம்ம வீட்டுலயே மீன் பிடிக்கலாம்!”

“வீட்டுலயா! ஹா ஹா வீட்டுல என்ன‌ ஆறு, குளம் எல்லாம் இருக்கா! இல்ல மீன் இருக்கா, என்ன பிண்டு நீ!”

“நான் சொல்ற எக்ஸ்ப்ரிமெண்டுக்கு ஆறும் வேண்டாம், மீனும் வேண்டாம். நீ உடனே போய் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு வா அனு!” என்று தேவையான பொருட்கள் அனைத்தையும் கூறியது பிண்டு.

தேவையான பொருட்கள்

1. கிண்ணம்

2. ஒரு டம்ளர் நிறைய தண்ணீர்

3. தடிமனான நூல்- 30cm நீளம்

4. சின்ன குச்சி

5. உப்பு சிறிதளவு

6. ஐஸ்கட்டிகள் நான்கு அல்லது ஐந்து

“எல்லாத்தையும் டேபிள் மேல எடுத்து வெச்சுட்டேன் பிண்டு. சீக்கிரம் வா!” என்று கத்தினாள் அனு.

செய்முறை

1. முதலில் கிண்ணத்தில் தண்ணீரை சேர்த்து, அதில் ஐஸ்கட்டிகளைப் போடவும்.

2. ஐஸ்கட்டிகள் தண்ணீரில் மேலும் கீழும் மிதக்கத் தொடங்கும். அப்போது நூலின் ஒரு நுனியை ஒரு ஐஸ்கட்டியின் மீது வைத்து அதில் சிறிதளவு உப்புத் தூளினை சேர்க்கவும். மறுமுனையை கையில் வைத்துக் கொள்ளவும்.

3. உடனே ஐஸ் கட்டி லேசாக உருகத் தொடங்கி மறுபடி கட்டியாகும்

4. பத்து நொடிகள் காத்திருந்து, மெதுவாக கையில் பிடித்திருக்கும் நூலை மேலே தூக்கவும்.

5. இப்போது ஐஸ்கட்டி தூண்டிலில் மாட்டிய மீன் போல் நூலோடு ஒட்டிக் கொண்டு மேலே வரும்.

6. இது போல் ஒவ்வொரு ஐஸ்கட்டியிலும், நூலை வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து மீன் பிடிக்கலாம் குழந்தைகளே!

Meen

“அய்யா ஜாலி பிண்டு! என்னால ரொம்ப ஈசியா மீன் பிடிக்க முடியுது” – அனு.

“இதுக்கு பின்னாடி உள்ள அறிவியல் உண்மையைத் தெரிஞ்சுக்க வேண்டாமா அனு”- பிண்டு.

அறிவியல் உண்மை

சாதாரண தண்ணீர் 32°Fஇல் உறையும் தன்மை கொண்டது. அதில் சிறிதளவு உப்பு சேர்க்கும் பொழுது, உறையும் டெம்ப்பரேச்சேர் மேலும் குறையும். அதனால் ஐஸ்கட்டி மெல்ல உருகத் துவங்கும். இந்த தண்ணீரில் நூல் ஒட்டிக் கொள்ளும், உப்பு நன்றாக தண்ணீரில் கலந்த பிறகு மறுபடி தண்ணீரின் உறையும் தன்மை இயல்பு நிலைக்குத் திரும்பி, ஐஸ்கட்டி உறையும். இதனால் நூல் நன்றாக ஐஸ்கட்டிக்குள் மாட்டிக் கொள்ளும். இதுவே இதன் பின் இருக்கும் அறிவியல் உண்மை.

“என்ன குழந்தைகளே! அறிவியலோடு சேர்ந்து ஒரு சின்ன எக்ஸ்ப்ரிமெண்டும் கத்துக்கிட்டீங்களா! மறுபடியும் அடுத்த மாதம் சந்திக்கலாம் பை!” என்றது பிண்டு.

அனு, “பை ஃப்ரெண்ட்ஸ், நீங்களும் வீட்டுல இதை செஞ்சு பாருங்க!”

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments