அப்போது வசந்த காலம். ஒரு பழத்தோட்டத்தில் இரண்டு ராபின் குருவிகள் வசித்தன.

ஒரு மரத்தில் சிறிய கூடு கட்டி, அதில் பெண் குருவி இரண்டு நீல முட்டைகள் இட்டது. குருவிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 

ஆனால் ஒரு நாள் ஒரு பையன் வந்தான். அவன் அந்த முட்டைகளை ஒரு மாத்திரைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு போய்விட்டான். அதனால் அந்தக் குருவிகள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தன.

மறுநாள் காலையில் அந்தக் கூட்டைப் பார்த்த போது, அதில் ஒரு சின்ன முட்டை இருந்தது. ஆப்பிள் மரப்பூ போல் அது ரோஸ் நிறத்தில் இருந்தது.

‘பாவம் இந்த முட்டை! இதை நான் அடை காப்பேன்!’ என்றது பெண் குருவி.

“கவனமாயிரு! இது குயில் முட்டையா இருந்துடப் போவுது” என்றது ஆண்குருவி.

(குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது; மற்ற பறவைகளை ஏமாற்றி அவற்றின் கூட்டில் குயில் முட்டை இட்டுவிடும். ஏமாந்த பறவை தன் முட்டை என்று நினைத்து அதை அடைகாத்துப் பொரிக்க வைத்து, உணவு ஊட்டிக் குயில் குஞ்சை வளர்க்கும்)  

அந்தப் பழத்தோட்டம் முழுக்க வெள்ளைப் பூக்களும் ரோஸ் நிறப் பூக்களும் பூத்த போது அந்த முட்டை பொரித்தது. 

அதில் இருந்து குயில் குஞ்சு வரவில்லை. ஆனால் ஒரு ரோஸ் நிற கவுனை அணிந்த ஒரு தேவதை வெளியே வந்தது. 

rose muttai
படம்: அப்புசிவா

அந்தத் தேவதை ராபின் குருவிகளை, மீண்டும், மீண்டும் முத்தமிட்டது.

“அன்பான ராபின் குருவிகளே! என்னை ஒரு மந்திரவாதி, இந்த ரோஸ் முட்டைக்குள் அடைத்துவிட்டான். இந்த முட்டையை அடைகாத்துப் பொரிக்க வைக்க வேண்டும். அது தான், நான் முட்டையில் இருந்து வெளியே வர ஒரே வழி. நீங்கள் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று சொல்லிவிட்டுத் தன் மெல்லிய சிறகுகளை விரித்துப் பறந்து விட்டது.   

திடீரென்று ‘ட்வீட், ட்வீட்’ என்று மெல்லிய குரலில், சத்தம் கேட்டது. உடனே அந்தக் குருவிகள் கூட்டுக்குச் சென்று பார்த்தன.

அங்கு இரண்டு ராபின் குஞ்சுகள் இருந்தன. கூட்டின் ஓரத்தில் ரோஸ் தேவதை உட்கார்ந்து இருந்தது. அதைச் சுற்றி, நூற்றுக்கணக்கான ஆப்பிள் பூ நிறத் தேவதைகள் இருந்தன. 

“இரண்டும் உங்கள் சொந்தக் குஞ்சுகள் தான்” என்றது, ரோஸ் தேவதை. 

“என் சகோதரர்களும் சகோதரிகளும், அந்தப் பையனிடம் இருந்து உங்கள் முட்டைகளைத் திருடி விட்டனர். நீங்கள் என்னை அடைகாத்த போது, தேவதைகளின் உலகில் இவற்றை அடை காத்துப் பொரிக்க வைத்தனர்” என்றது தேவதை.

அந்தப் பழத்தோட்டத்தில் இருந்த ராபின்களின் பாட்டு மற்ற எல்லாக் குருவிகளின் பாட்டை விடவும் மிகவும் இனிமையாக இருந்தது.

ஏன் தெரியுமா உங்களுக்கு?

அந்த ராபின் குஞ்சுகள் தேவதை உலகில் பொரித்து, வெளியே வந்தன அல்லவா? அதனால் தான்!

(ஆங்கில மூலம்- ஈ.நெஸ்பிட்)

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments