மலையடிவாரத்தில் இருந்த அந்த அரச மரத்தில் நிறைய பறவைகள் குடி இருந்து வந்தன. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஒரு குயிலின் குரலோசை அனைத்து பறவைகளின் காதுகளுக்கும் வந்து சேரும். இன்னமும் சொல்லப்போனால் அதனுடைய இனிமையான குரல் கேட்டு நிறைய பறவைகள் எழுந்து, பிறகு தன்னுடைய குரலால் அனைவரையும் எழுப்பும்.

  ஆனால் நிறைய நாட்கள் வரையிலும் யாருமே அந்தக் குயிலை பார்த்தது கிடையாது. எல்லோருக்குமே தெரியும் குயில் தங்களோடு தான் குடியிருக்கிறது என்று.. ஆனால் ரொம்ப நாள் கழித்து தான் அதனை மற்றவர்கள் பார்த்தனர். அப்போதும் குயில் மற்றவர்களுடன் பேசத் தயங்கியது. ஆரம்பத்தில் தங்களோடு சாதாரணமாகப் பேசும் என காத்திருந்த பறவைகள் கூட இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை.

 “அவளுக்கு குரல் ரொம்ப அழகா இருக்கு இல்லையா.. அந்த கர்வம் நம்ம கிட்ட எல்லாம் பேச மாட்டா..” இப்படி தங்களுக்குள் பேசிக்கொள்ளும்.

 ஏழு மணி ஆனால் போதும் அனைத்து பறவைகளும் மகிழ்ச்சியாக அந்த மரத்தை சுற்றி அழகாக விளையாடிக் கொண்டிருக்கும். குயில் ஒரு ஓரமாக அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும். குயில் தான் யாரிடமும் பேசுவது இல்லையே.. பிறகு எப்படி அவர்களோடு சேர்ந்து விளையாடுவது..

  ஆனால் உண்மையில் நிலைமை வேறு. குயில் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தது. மற்ற பறவைகள் எல்லாவற்றையுமே தூரத்திலிருந்து கண்டு ரசிக்கும். எல்லா பறவைகளுமே குயிலின் கண்களுக்கு அழகாகத் தெரியும். ஆனால் குயில் தன்னுடைய கருத்த நிறத்தைப் பார்த்து வெறுத்தது. மற்றவர்களை விடவும் தான் அதிக கருப்பாக இருப்பதினால் யாரும் தன்னிடம் வந்து நட்பு பாராட்ட மாட்டார்கள் என்று மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டது.

 சில வருடங்கள் கடந்துவிட்டது இன்னமுமே இதே நிலைதான்.. குயில் யாரிடமும் எதுவும் பேசுவது கிடையாது. ஆனால் தினமுமே முதலில் தன்னுடைய குரலால் அனைவரையும் எழுப்பும்.

kuyil
படம்: அப்புசிவா

அந்த வருடத்தில் கனமழை பெய்தது. இதனால் அந்த மலையில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து அரச மரத்தை வேரோடு சாய்த்து இருந்தது. இனி அந்த மரத்தில் யாரும் குடியிருக்க முடியாது என்கின்ற நிலை வரவும் அனைத்து பறவைகளுமே வேறு இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தன.

 ஒவ்வொரு பறவையும் தங்களோடு இருந்த பிற பறவைகளையும் இணைத்துக் கொண்டு நகர, குயில் மிகவும் சோகமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தது. புறப்பட்ட அனைத்து பறவைகளும் தங்களுக்குள் மாறி மாறி பேசிக்கொண்டனர்.

“இத்தனை வருஷமா அவளோட குரலைக் கேட்டு தான் நம்ம எல்லாம் எழுந்தோம்.. இப்போ நாம எல்லாருமே வேற இடத்துக்குப் போக போறோம்.

அவளை மட்டும் எதுக்காக விட்டுட்டுப் போகணும்?” என்று ஒரு பறவை கேட்க,

 இன்னொரு பறவையோ, “இது வரைக்கும் நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட அவ பேசியது கிடையாது. அப்படி இருக்கும் போது நாம அவளைப் போய் எங்க கூட வர்றியான்னு எப்படி கேட்க  முடியும்?” என்று இன்னொரு பறவை பதில் கூறியது.

 “தனியா போக கஷ்டமா இருந்ததுன்னா ஏன் நாம எல்லாரும் சேர்ந்து போய் கூப்பிட்டு பார்க்கலாம் என்ன சொல்றீங்க” என்று ஒரு பறவை கேட்க, அனைவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

 வேகமாக அனைத்து பறவைகளும் குயிலின் முன்னால் வந்து நிற்க, முதலில் தயங்கினாலும் பிறகு மெல்ல வாங்க என்று அழைத்தது. “நாங்க எல்லாருமே வேற ஒரு மரத்தில் கூடு கட்டலாம்னு முடிவு பண்ணி இருக்கிறோம். எல்லாரும் இன்னைக்கே கிளம்பிப் போறோம். தனியா நீ மட்டும் இங்க இருந்து என்ன செய்யப் போற.. நீயும் எங்களோட வந்துடு” என்று கேட்க குயிலுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அங்கேயே அழ ஆரம்பித்தது.

அழுத குயிலை எப்படி சமாதானப்படுத்துவது என்று எந்தப் பறவைக்கும் தெரியவில்லை. “இதுவரைக்கும் நீ யார்கிட்டயும் பேசினது கிடையாது முதன்முறை நாங்கதான் உன்னை தேடி வந்து இருக்கிறோம். நீ இப்படி அழுதா  நாங்க என்ன நினைக்கிறது உன் மனசுக்குள்ள ஏதாவது வருத்தம் இருந்தால் நீ சொன்னாதான எங்களுக்கு தெரியும்” என்று ஒரு பறவை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்க,

மெல்ல தன்னுடைய மனவருத்தத்தை கூறியது குயில். “நான் ரொம்ப கருப்பா இருக்கறேன். அதனால நீங்க யாருமே உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். அதனால்தான் இத்தனை நாளா நான் யார்கிட்டயும் பேசல.. எனக்குள் ஒரு வட்டத்தை போட்டு அதிலேயே இருந்துட்டேன்” என்று சொல்ல,

 அச்சோ.. என்பது போல இருந்தது மற்ற பறவைகளுக்கு..

  “நாம எல்லாருமே பறவையினம் தானே.. பெயர் வேணும்னா வேற வேறயா இருக்கலாம் ஆனால்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமையோடு தான் கடவுள் நம்மளை படைத்திருக்கிறார். உன்னோட குரல் எவ்வளவு அழகு தெரியுமா… நான் பார்க்க அழகா இருக்கிறதா சொல்றாங்க. ஆனா என்னோட குரல் எவ்வளவு மோசமாக இருக்கும் தெரியுமா கர்ண கடூரமா.. அதுக்காக நான் பேசாமலா இருக்கேன்.. இதுவரைக்கும் யாருமே என்கிட்ட அதைக் குறையா சொன்னது இல்ல.. அது போல தான் உன்னையும் தவறா எதுவும் சொல்ல மாட்டோம்”என்று ஒரு பறவை கூறியது.

  “இது மாதிரியெல்லாம் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு தான் நீ இத்தனை நாளா எங்க கிட்ட பேசாம இருந்தியா.. இந்த குணத்தை மாத்திக்கோ.. நிற பேதம் …இதெல்லாம் மனிதர்கள் கண்டுபிடிச்சது. முட்டாள்தனமான இதை கண்டுக்கவே கூடாது.மற்ற உயிரினங்களிடம் இந்த பேதமே கிடையாது. இனிமே நாம எல்லாருமே ஒரே இடத்துல இருக்கப் போறோம்.. எல்லாருமே மொத்தமா மகிழ்ச்சியா இருக்கலாம். இனிமே இப்படி தனியா இருக்கக் கூடாது. எங்களுக்கு நீ ரொம்ப அழகா தெரியற..” இப்படி ஒரு பறவை அருகில் வந்து கூறியபோது மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றது குயில்.

  இத்தனை நாள் இருந்த மனக்கவலை எல்லாம் ஓரமாகச் சென்று விட, மகிழ்ச்சியோடு அவர்களோடு புறப்பட்டது. இதோ இப்போதெல்லாம் விடியற்காலை கூவும்போது மட்டுமில்ல விடிந்த பிறகும் அனைத்து பறவைகளும் ஒன்றாகப் பறந்து விளையாடி  தன்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தன.

  என்ன குழந்தைகளா! குயில் மாதிரி நாமளும் மனசுக்குள்ளேயே எதையாவது வச்சுக்கிட்டு யார்கிட்டயும் பேசாம இருக்கக் கூடாது இல்லையா ..பேசினா தானே நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியும்..

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments