இதுவரை:

ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் வரங்கள் தரும் கம்பளமும் நான்கு குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. அதை வைத்து அவர்கள் பல சாகசங்களைச் செய்ய, அதில் பல சாகசங்கள் சொதப்பலாக முடிந்துவிடுகிறது. ஒரு முறை வீட்டிற்குள் 199 பூனைகளைக் கொண்டுவந்து விட்டுவிடுகிறது ஃபீனிக்ஸ் பறவை. அந்த நேரம் பார்த்து வாயிலில் ஒரு போலீஸ்காரர் வந்து, ‘என்ன அது பூனைச் சத்தம்?’ என்று கேட்க, அவரை ஃபீனிக்ஸ் பறவை திசைமாற்றி விட்டுவிடுகிறது. இனி…

WhatsApp Image 2022 06 23 at 11.07.45 PM
ஓவியம் – அப்பு சிவா

அத்தியாயம் 7

 ஃபீனிக்ஸ் பறவை, ‘திருடன் திருடன்! பிடிங்க!’ என்று கத்திய சத்தத்தைக் கேட்டு விட்டு போலீஸ்காரர் அந்தப் பக்கமாக போய் விட்டார். குழந்தைகள், “அப்பாடா! நல்லவேளை போயிட்டாரு.. இப்ப இந்தப் பூனைகளை என்ன பண்றது?” என்று பேசிக்கொண்டிருக்க, பின்புறமாக ஏதோ சத்தம்.

 என்னவென்று போய்ப் பார்த்தால் அங்கு ஒரு திருடன் பெரிய சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தான். “வீட்ல உள்ள அவ்வளவு விலை மதிப்புள்ள பொருட்களும் எனக்கு வேணும். மரியாதையா கொடுத்துடுங்க. இல்லைன்னா கொன்னுடுவேன்” என்று அவன் கத்தியைக் காட்டி மிரட்ட, “அண்ணா அண்ணா! உங்க உதவி தான் எங்களுக்கு ரொம்பத் தேவை” என்றாள் ஆந்த்தியா.

ஒரு நிமிடம் குழம்பிப் போய்விட்டான் திருடன். “என்ன? என் உதவி தேவையா? எல்லாரும் என்னைப் பார்த்தா பயப்படத் தான் செய்வாங்க. நீங்க என்ன இப்படி சொல்றீங்க?” என்று அவன் ஆச்சரியமாகக் கேட்க, “தெரியாத்தனமா நிறைய பூனைகள் எங்க வீட்டுக்கு வந்துருச்சு.. இதெல்லாம் ரொம்ப விலைமதிப்புமிக்க பெர்ஷிய நாட்டுப் பூனைகள். இதையெல்லாம் எப்படியாவது வெளியே எடுத்துட்டு போறீங்களா? நீங்களே யாருக்காவது வித்து பணமாக்கிக்கோங்க.. இதெல்லாம் எங்க கிட்ட இருந்து போனாலே போதும்” என்றான் ராபர்ட்.

“அவ்வளவுதானே? நான் கொண்டு போறேன்.. என்னால இவ்வளவையும் தனியா தூக்க முடியாது. இருங்க, என்னோட நண்பனையும் வரச் சொல்கிறேன்” என்ற அந்தத் திருடன், வெளியே போய் பக்கத்து தெருவில் காத்துக் கொண்டிருந்த அவனுடைய கூட்டாளியை அழைத்து வந்தான். 

அவனும் நண்பனும் சேர்ந்து தங்களால் முடிந்த அளவு பூனைகளைப் பிடித்து இரண்டு மூன்று சாக்குப் பைகளில் அடைத்தனர். சென்று வருகிறோம் என்று வெளியேறினர்.

 அப்பாடா என்று குழந்தைகள் நால்வரும் நிம்மதியடைந்து பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது, மறுபடியும் படபடவென்று வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால் அதே திருடன். “போலீஸ்காரங்க என்னைப் பிடிச்சுக் கிட்டாங்க. ஏது உனக்கு இவ்வளவு பூனைன்னு கேட்டாங்க.. நான் சொல்லத் தெரியாம திருதிருன்னு முழிச்சேன். அவங்க மூட்டையைப் பிரிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்குறப்ப நான் ஓடி வந்துட்டேன்.. என் நண்பன் இன்னொரு திசையில் ஓடிட்டான். என்னை எப்படியாவது காப்பாத்துங்க” என்றான் அந்தத் திருடன்.

“இப்ப என்ன பண்றது?” என்று குழந்தைகள் யோசிக்க, “எல்லாரும் கம்பளத்தில் ஏறி உட்காருங்க.. சீக்கிரம்!” என்றது ஃபீனிக்ஸ் பறவை. திருடனையும் கூட்டிக்கொண்டு நான்கு குழந்தைகளும் கம்பளத்தில் ஏறி அமர, முதன் முதலில் இவர்கள் போனார்களே அந்தத் தீவுக்கு செல்லுமாறு கம்பளத்திடம் கூறியது ஃபீனிக்ஸ் பறவை. கம்பளம் ஃபீனிக்ஸ் பறவையின் சொல்லைத் தட்டாமல் ஜிவ்வென்று பறந்து போய் அந்தத் தீவில் தரையிறங்கியது.

 அங்கு இவர்களின் வீட்டுப் பணிப்பெண் அரசியாக பொறுப்பேற்று ஆட்சி செய்து மகிழ்ச்சியாக இருந்தாள். மீண்டும் குழந்தைகள் வரவும் ராணியின் விருந்தினர்கள் என்று தீவு மக்கள் இவர்களை மிகவும் அன்பாக கவனித்தனர். “இவர் யார்? எங்களுக்காக ராஜாவைக் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று தீவு மக்கள் திருடனைக் காட்டிக் கேட்க, குழந்தைகள், பணிப்பெண், திருடன் அனைவருக்கும் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.

“பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? நீங்களும் இங்கேயே இருந்துடலாம்” என்று திருடனிடம் கேட்டான் சிறில்.

“எனக்கு சம்மதம். இனிமே நான் திருந்தி வாழுறதா முடிவு பண்ணியிருக்கேன்” என்று திருடன் கூறினான். அவனுக்கு அந்த ஊரையும் ராணியாக இருக்கும் பணிப் பெண்ணையும் மிகவும் பிடித்துவிட்டது.

“எனக்கும் சம்மதம் தான். ஆனால் ஒரு பாதிரியார் வந்து முறைப்படி கல்யாணம் செஞ்சு வச்சா தான் நான் கல்யாணம் செஞ்சுக்குவேன்” என்றாள் பணிப்பெண்.

“இப்போ பாதிரியாருக்கு எங்கே போறது?” என்று தீவு மக்கள் குழம்ப, “கம்பளம் இருக்கக் கவலை ஏன்? நான் பறந்து நம்ம நாட்டுக்குப் போய் பாதிரியாரை அழைச்சிட்டு வர்றேன்” என்று ஃபீனிக்ஸ் பறவை கம்பளத்தில் ஏறிச் சென்றது. சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் ஒரு பாதிரியாருடன் வந்தது. அவர் வந்து உடனடியாக இரண்டுபேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

 தீவு மக்கள் கடலிலிருந்து ஒரு ராணியும் வானத்திலிருந்து ஒரு ராஜாவும் தங்களுக்குக் கிடைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குழந்தைகள் அவர்களிடமிருந்து விடைபெற்று ஊர் திரும்பி அந்த பாதிரியாரையும் அழைத்துக்கொண்டு அவர் வீட்டில் போய் விட்டார்கள். பாதிரியாருக்கு இங்கு நடந்த எல்லாமே ஏதோ கனவு போல் தெரிந்தது. குழந்தைகள் சோர்வுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 மறுநாள் அவர்களது அம்மாவும் அப்பாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களின் வேலை முடிந்து வீடு திரும்புவதாகத் தகவல் வந்திருந்தது. “அப்பாடா! போதும் போதும்.. இனிமே நாம கம்பளத்தை வெச்சுட்டு எங்கேயும் போகவேண்டாம். இனிமே எந்த சாகசமும் வேண்டாம்” என்றாள் ஜேன்.

“ஆமா. ஆசைப்பட்டு ஏதாவது வரம் கேக்குறதும் அப்புறம் குழம்பித் தவிக்கிறதுமே நம்ம வேலையாப் போச்சு. இந்தக் கம்பளத்தைச் சுருட்டி ஓரமா வச்சுடலாம்” என்றான் ராபர்ட்.

“நாம கம்பளத்தை சரியாவே பராமரிக்கலை. பாருங்க அங்கேயும் இங்கேயுமா கிழிஞ்சிருக்கு. நான் அதைப் பழுது பாக்குறேன்” என்று சொல்லி ஆந்த்தியா கம்பளத்தில் ஓட்டை விழுந்திருந்த இடங்களைத் தைத்தாள்.

 ஃபீனிக்ஸ் பறவை, “நானும் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.. சீக்கிரமா நெருப்பைத் தயார் பண்ணுங்க.. நான் ஒரு முட்டையிட்டுட்டு  அதுல குதிச்சிடுவேன். நீங்க இந்த முட்டையைக் கம்பளத்துக்குள்ள வச்சு சுருட்டி பாதுகாப்பா வைங்க‌. பல ஆயிரம் வருடங்கள் கழிச்சு அது யார் கையிலாவது கிடைக்கும் போது மறுபடியும் நான் அந்த முட்டையில் இருந்து பிறந்து வருவேன்” என்றது.

“போயிட்டு வா ஃபீனிக்ஸ்! உன்னோட இருந்த நாட்களை நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம்.. ரொம்ப நன்றி” என்று குழந்தைகள் ஃபீனிக்ஸ் பறவைக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

 ஃபீனிக்ஸ் பறவை சொன்னபடியே பளபளப்பான ஒரு முட்டையை இட்டு விட்டு அவர்கள் தயார் செய்திருந்த நெருப்பில் விழுந்து தன் உயிரை விட்டது. குழந்தைகளுக்கு ஃபீனிக்ஸ் பறவையைப் பிரிந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், நீண்ட நாள் கழித்து பெற்றோர் வர இருப்பதால் அவர்களை வரவேற்கத் தயாரானார்கள்.

(முற்றும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments