ஓர் அழகான காடு. அந்த காட்டில் இருந்த முயலுக்கும் ஆமைக்கும் எப்போதும் போல யார் பெரிய திறமைசாலி என்று போட்டி வந்தது. வழக்கம் போல ஓட்டப்பந்தயம் வைத்து யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்க்கலாம், என்று முடிவு செய்தார்கள்.
போட்டி நாள் வந்தது. அனைத்து விலங்குகளும் கூடி விட்டார்கள். சிங்க ராஜா துப்பாக்கியை, ‘டுமீல்’ என்று சுட, போட்டி ஆரம்பமானது. முயல் துள்ளி துள்ளி ஓடியது. ஆமை நான்கு மெத்தை கால்களையும் மெல்ல மெல்ல எடுத்து வைத்து ஊர்ந்து சென்றது.
போட்டி பாதையில் ஒரு பெரிய மரத்தின் நிழல் வந்தது. முன்னே சென்ற முயல் திரும்பி, தூரத்தில் வந்து கொண்டிருந்த ஆமையையும் இந்த பக்கம் இருந்த நிழலையும் பார்த்தது. ‘சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாமா?’ என்று மனதுக்குள் யோசிக்கும் போதே அதன் தலைக்குள், ‘டொயிங்’ என்று ‘பல்ப்’ எரிந்தது. ‘அச்சோ! என் தாத்தாவோட தாத்தாவோட தாத்தா இதே போல ரெஸ்ட் எடுத்துட்டு ஓடியதால் தான் போட்டியில் தோற்றார். அதே தப்பை நான் செய்ய மாட்டேன்..’ என்று நினைத்து தொடர்ந்து துள்ளி ஓடியது. வெற்றிக்கோட்டைத் தாண்டி வெற்றி பெற்றது. ஆமையோ கால்பகுதி தூரத்தைக் கூட கடந்திருக்கவில்லை.
எந்த விலங்கும் இந்த ட்விஸ்ட் டை எதிர்பார்க்கவில்லை. காடே அமைதியாக இருந்தது. அப்போது, சிங்க ராணி முன்னே வந்து நின்று, சிங்க ராஜாவிடமிருந்து மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தார், “ஹலோ! இது 2022. இன்னும் பழைய கேமே விளையாடுறீங்களே? அப்டேட் ஆக வேண்டாமா? அப்டேட்டட் கேம்ல இது லெவல் ஒன்றுதான். வாங்க.. லெவல் இரண்டுக்கு போகலாம்.” என்றார். சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தார்.
‘என்ன! லெவல் இரண்டா!” என்று எல்லா விலங்குகளும் வாயைத் திறந்து ஆச்சர்யமாகப் பார்த்தன. பின்னர் உற்சாகமாக அனைத்தும் சிங்கராணி பின்னே சென்றன. சிங்கராணி நேரே காட்டில் இருந்த குளத்திற்குப் போனார். “ம்.. இதுதான் இரண்டாவது லெவல் போட்டி.. நான் துப்பாக்கி சுட்டதும், இருவரும் தண்ணீருக்குள் குதிங்க. யார் முதலில் நீந்தி அந்த பக்கம் வர்றாங்க என்று பார்க்கலாம்.”
“என்னது!” என்று சிங்க ராஜாவே அதிர்ச்சியாகி விட்டார். சிறு சிறு சலசலப்புக்குப் பின், முயல்களின் தலைவர் முன்னே வந்து, “அதெப்படி ராணி? ஆமையால் நன்கு நீச்சலடிக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரியும். அதோடு எப்படி நீச்சலில் போட்டியிடுவது? எப்படியும் ஆமைதானே ஜெயிக்கும?” என்று சொன்னார்.
உடனே சிங்க ராணி, “ஹாஹா!” வென இடி போல சிரித்தார். பின், “அதே போலத்தானே முயல்களுக்கும் துள்ளி ஓட முடியும், ஆமையால் ஊர்ந்துதான் செல்ல முடியும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இத்தனை வருடம் ஆமை தன் திறமையை நிருபிக்க ஓடத்தானே சொன்னீங்க?” என்றார்.
முயல் தலைவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லா விலங்குகளும் அமைதியாக இருந்தன. முயலும் ஆமையும், சிங்க ராணி புல்லட் சுட, நீரில் குதித்தன. ஆமை அழகாய் நீரில் நீந்தி, முதலில் அந்த பக்கம் வந்துவிட, முயல் சிறிது நேரம் பின், கரை சேர்ந்தது.
சிங்கராஜாவுக்கு சந்தேகம், “லெவல் ஒன்றில் முயல் ஜெயித்தது. லெவல் இரண்டில் ஆமை ஜெயித்துள்ளது. அப்போ, யார் திறமைசாலி என்று தீர்ப்பு சொல்வது?” என்று கேட்டார்.
“அச்சோ!” என்று தலையில் கைவைத்துக் கொண்ட சிங்க ராணி, “முயல் துள்ளி ஓடுவதில் திறமைசாலி; ஆமை நீந்தி செல்வதில் திறமைசாலி. இவர்கள் இருவரையும் கம்பேர் செய்து யார் திறமைசாலி என்று முடிவெடுக்க நினைப்பவர்கள் புத்திசாலிகள் இல்லை. இதுதான் என் தீர்ப்பு” என்று சொல்ல காட்டில் உள்ள யானை, குதிரை, மான், கரடி, குரங்கு எல்லாவற்றுக்குமே சந்தோசம். அனைத்தும் ஆரவாரத்தோடு ஓடி, குதித்து, பாடி, ஆடி, நீந்தி, பறந்து தங்கள் திறமையைக் கொண்டாடின.
கருத்து: உங்களுக்குத் தெரிந்த ஒன்று மற்றவரால் செய்ய முடியவில்லை என்று யாரையும் குறைச்சி எடை போடாதீங்க குட்டீஸ்! அவர்களுடைய களம் வேறாக இருக்கலாம்☺️☺️
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.