rainbow

தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது.

தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும்

அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.

ஆனாலும் வான்மதிக்கு இரையை சிதறுவது தான் மிகவும் பிடிக்கும். கோழிக்குஞ்சுகளை எடுத்து கைகளில் வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கோழி கிட்டவே விடாது. கொத்துவது போல பறந்து வரும். ஆனால் அவளை ஒரு நாளும் கொத்தியதில்லை.

கோழி கொத்த வரவும் வான்மதி சிரித்துக் கொண்டே ஓடுவாள். சிறிது தூரம் கோழி துரத்தும். பின் தன் குஞ்சுகளை நோக்கிப் போய்விடும். மீண்டும் வான்மதி கோழிக்குஞ்சுகள் பிடிக்கச் சென்றால் மீண்டும் கோழி துரத்தும்.

கோழி துரத்துவதைக் கண்டால் வான்மதியின் அம்மா தான் பதறி விடுவார். கோழி தன் குஞ்சை இறக்கைகளுக்குள் அடைத்து காப்பது போல அவரும் வந்து வான்மதியை இறுக்கிப் பிடித்துக் கொள்வார். கோழியை போ போ என விரட்டுவார். அம்மா அடைகாப்பதும் அம்மாவின் அந்த கதகதப்பும் வான்மதிக்கு மிகவும் பிடிக்கும்.

இன்றும் அப்படித்தான் கோழியோடும் தாயோடும் விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. அப்போது எங்கிருந்தோ வானத்தில் கருமேகங்கள் திரண்டன. மேகங்களும் மின்னலும் இடியும் ஒன்றுகூட அத்தோடு வானவில்லும் கூட வந்துவிட்டது.

தெருவில் இருந்த எல்லோரும் “அங்க பாரு வானவில், அங்க பாரு வானவில்” என்று வானத்தையே பெரிய வண்ணச் சிறகாக மாற்றிய பெரிய வானவில்லை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வான்மதிக்கும் வானவில் பிடிக்கும். ஆனால் அன்று அவள் கோழியோடு விளையாடுவதில் ஆர்வமாக இருந்ததால் வானவில்லை கவனிக்கவில்லை. அந்த பெரிய வானவிலுக்கு அருகே ஒரு குட்டி வானவில்லும் நின்று கொண்டிருந்தது.

அனைவரும் பெரிய வானவில்லையே கவனித்துக் கொண்டிருக்க குட்டி வானவில்லை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அந்தக் குட்டி வானவில்லுக்கு பூமியில் இருந்த எல்லோரும் தெரிந்தார்கள். அதுவும் கோழியோடு போட்டி போட்டு தாயின் மடியில் போய் விழும் வான்மதியை ரொம்பவே பிடித்து விட்டது வானவில்லுக்கு.

அதனால் தானும் வான்மதியுடன் விளையாட தரைக்கு இறங்கி வந்துவிட்டது வானவில்.

குட்டி வானவில்லைப் பார்த்து வான்மதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

“வான்மதி நானும் உன்னோடு விளையாடட்டுமா” எனக் கேட்டது வானவில்.

“வா வா நாம போய் கோழிக் குஞ்சுகளை பிடிச்சிட்டு வரலாம், அது அவ்வளவு மென்மையா இருக்கும்” எனக் கூறினாள் வான்மதி.

வானவில்லும் வான்மதியும் கோழிக்குஞ்சுகளை ஒவ்வொன்றாக பிடித்தார்கள்.

அந்த வெள்ளை நிறக் கோழியின் அத்தனை குஞ்சுகளும் வெண்மையாக இருந்தன. இந்த கோழிக் குஞ்சுளுக்கு பெயர் வைக்க வான்மதி விரும்பியிருக்கிறாள். ஆனால் எல்லாம் ஒரே நிறம் எப்படி கோழிக்குஞ்சுகளையும் பெயர்களையும் அடையாளம் காண்பது என்ற குழப்பத்திலேயே பெயர் வைக்காமல் இருந்தாள்.

வான்மதி கோழியை ஏமாற்றி ஒவ்வொரு கோழிக்குஞ்சாக எடுத்து வானவில்லிடம் கொடுத்தாள். வானவில் அவற்றைத் தன் வண்ணங்களுக்குள் ஒளித்து வைத்தது.

மிகவும் மகிழ்வாக கோழிக்குஞ்சுகள் வண்ணங்களில் நீந்துவதைப் பார்த்த தாய்ப்பறவையும் மகிழ்ந்தது.

எங்கிருந்தோ பெரும் காற்று வீசவும் மேகங்களோடு சேர்ந்து பெரிய வானவில்லும் மறைய ஆரம்பித்தது. அது தன் குட்டி வானவில்லைத் தேடுவதைப் பார்த்த வான்மதி “உங்க அம்மா தேடுறாங்க நீ இப்பவே போறியா?” என அழ ஆரம்பித்தாள்.

“அழாத வான்மதி என் நியாபகமா உன் கூட இந்த கோழிக்குஞ்சுகள் இருக்கும்” என்ற குட்டி வானவில் தன் வண்ணங்களில் இருந்து கோழிக்குஞ்சுகளை எடுத்துக் கொடுத்தது.

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகிய ஏழு நிறங்களில் மட்டுமல்ல சிவப்பில் தலையும் பச்சை உடலுமாக ஒரு கோழிக்குஞ்சு, முழு உடலும் மஞ்சள் நிறத்திலும் கால்கள் மட்டும் கருநீலத்திலுமாக ஒரு கோழிக்குஞ்சு என பல வண்ணக்கலவைகளில் வந்தன கோழிக்குஞ்சுகள்.

அவற்றைப் பார்த்து துள்ளிக்குதித்தாள் வான்மதி. தன் கோழிக்குஞ்சுகளின் அழகழனாக நிறங்களைக் கண்டு தாய்க்கோழியும் வானவில்லுக்கு நன்றி சொன்னது.

அனைவரும் “டாட்டா” காட்ட காற்றோடு காற்றாக தன் கரத்தில் குட்டி வானவில்லை பிடித்துக் கொண்டு மறைந்தது அம்மா வானவில்.

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments