வணக்கம் குழந்தைகளே!
எதற்கெல்லாம் பணம் தேவைப்படுது குழந்தைகளே?
ஒரு நாள் அமுதனும் அவங்க அம்மாவும் கடைக்கு போனாங்க. அப்போ அமுதன் ஒரு விளையாட்டு பொருள் கேட்டான். அவங்க அம்மாவும் வாங்கி கொடுத்துட்டாங்க. ஆனால் அதுக்கப்புறம் அவனுக்கு இன்னொரு பொருள் ரொம்ப புடிச்சிட்டு, அதுவும் வேணும்னு கேட்டான். அப்போ அவங்க அம்மா இப்போ ஏதாவது ஒன்னு வாங்கதான் அம்மா கிட்ட காசு இருக்கு, நீ இது வாங்கினா அதை திருப்பி குடுத்துடுன்னு சொல்லிட்டாங்க. ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மான்னு சொல்லியும் அம்மா ரொம்பவே உறுதியா எதாவது ஒண்ணுதான் வாங்க முடியும் னு சொல்லிட்டாங்க. அவனும் வேற வழியில்லாம ஒரு பொருள் மட்டும் வாங்கிட்டு வந்தான்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அவங்க அம்மா பர்ஸ் எடுத்து வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கும்போது, அதுல பணத்தை பார்த்த அமுதன், “பணம் வச்சிக்கிட்டே எதுக்கு அம்மா அந்த பொம்மை கடையில இல்லன்னு சொல்லிட்டிங்க?” அப்படின்னு ரொம்ப கவலையா கேட்டான்.
அவங்க அம்மா அவன்கிட்ட, “பணம் எதுக்குலாம் பயன்படுதுன்னு நீ நினைக்கிற அமுதா?” அப்படின்னு கேட்டாங்க.
“எதாவது பொருள்கள் வாங்க…” அப்படின்னு சொன்னான்.
“வேற..” அப்படின்னு அம்மா கேட்டாங்க.
“நம்ம வெளியில சாப்பிடும்போது..”
“அப்புறம் நாம அன்னைக்கு அருங்காட்ச்சியாகம் போகும்போது உள்ளே போக காசு கேட்டாங்க..”
“நல்லது, இன்னும் பணம் எங்களாம் தேவைப்படுதுன்னு அம்மா சொல்றேன் கேளு.. வெளியில சாப்பிடும்போது மட்டும் இல்ல, வீட்ல சமைக்கவும் பணம் தேவை, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறி, காஸ் சிலிண்டர் , பால், சர்க்கரை, இன்னும் நிறைய பொருள்கள் சமையலறையில இருக்குள்ள, அது எல்லாம் ஒவ்வொரு முறை வாங்கும்போதும் நமக்கு பணம் தேவை. அம்மா சம்பளம் வந்ததும் இது எல்லாத்துக்கும் தேவையான பணத்தை எடுத்து வைப்பேன்.”
“ஓ அது வாங்குனப்புறம் எனக்கு பொம்மை வாங்கி தருவீங்களா” அப்படின்னு கேட்கிறான் அமுதன்.
“அம்மாவும் அப்பாவும் வாங்குற சம்பளத்துல சமையல் செலவு போக இன்னும் நிறைய விஷயங்களுக்கு பணம் தேவை, உன்னோட படிப்புக்கு, நம்மளோட மருத்துவ செலவுக்கு, வீட்டு வாடகைக்கு, நாம ஊருக்கு போக பஸ் க்கு, நம்மளோட சேமிப்புக்குன்னு எல்லாத்துக்கும் பணத்தை நாம திட்டமிட்டு செலவு பண்ணனும்” அப்படின்னு அம்மா சொன்னதும் அமுதன் ரொம்ப அமைதியா ஆகிட்டான்.
“அப்போ எனக்கு அந்த பொம்மை வாங்க பணம் இருக்காதா”ன்னு வருத்தமா கேட்டான் அமுதன்.
“இல்ல கண்ணா , அடுத்த மாதம் மறுபடியும் நமக்கு சம்பள பணம் கிடைக்கும் இல்ல, அப்போ அம்மா உனக்கு வாங்கி தர்றேன், அதுவரைக்கும் நம்ம வீட்ல எதுக்குலாம் பணம் தேவைப்படுதுன்னு நீ கவனி, எப்போலாம் பணம் கிடைக்குதுன்னும் கவனிச்சு அம்மா கிட்ட சொல்லு, நீ வளரும்போது நிதி மேலாண்மைன்னு சொல்ல கூடிய பணத்தை எப்படி சம்பாதிப்பது? சேமிப்பது, திட்டமிடுவது பத்திலாம் நாம நிறைய பேசலாம்” அப்படின்னு அம்மா சொன்னதும் அமுதனுக்கு எதோ புரிந்ததும், அடுத்த மாதம் பொம்மை கிடைத்து விடும், அதற்காக காத்திருக்கலாம் என்ற தெளிவும், புன்னகையாக மலர்ந்தது. புன்னகையின் நடு நடுவே அம்மா எங்க எல்லாம் பர்ஸை எடுக்குறாங்கன்னு கவனிக்க ஆரம்பித்து விட்டான். டிஜிட்டலில் பணம் செலவாகுறதையும் அவன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அம்மா , அதாவது ஆன்லைனில் எதற்கெல்லாம் பணம் குடுக்குறாங்கன்னும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க அமுதனின் அம்மா.
என்ன குழந்தைகளே உங்கள் குடும்பங்களில் எவ்வளவு பணம் செலவாகிறது என்று அம்மா அப்பாவை தொந்தரவு செய்யாமல் நீங்களே முடிந்த அளவு கவனிக்க தொடங்குங்கள், பணத்தை பற்றி தெரிந்து கொள்ளுதலும் வாழ்க்கைக்கு தேவையான படிப்புதான் தங்கங்களே.