eleph mon

காட்டில் குட்டி யானை ஒன்றும், குரங்கு ஒன்றும் நண்பர்களாக இருந்தது.

  குட்டி யானையின் பெயர் ராமு குரங்கின் பெயர் பிங்கி..

  ராமு தன் தாயார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும். தாயார் மட்டுமல்ல வயதில் முதிர்ந்தவர்கள் யார் என்ன கூறினாலும் சரியென அப்படியே கேட்டு நடக்கும்.

  ஆனால் பிங்கி குரங்கு அப்படி கிடையாது .மிகவும் சேட்டைக்காரி தாய் என்ன சொன்னாலும் எப்போதுமே கேட்பது கிடையாது அதற்கு நேர்மாறாக ஏதாவது செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது .

  சென்ற வாரத்தில் கூட சொன்ன பேச்சை கேட்காமல் சகதி குட்டைக்குள் சிக்கிக் கொண்டது. பிறகு யானை கூட்டம் மொத்தமும் வந்து சிரமப்பட்டு வெளியே காப்பாற்றி எடுத்தனர்.

  ஒரு கட்டத்திற்கு மேல் இதனுடைய சேட்டைகளை தாங்க முடியாமல் குட்டி யானையிடம் உதவி கேட்டது.

  “ராமு எங்க போறதா இருந்தாலும் இவளையும் கூடவே கூப்பிட்டுட்டு போ .ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்க போறா” இப்படி சொல்லி கூடவே அனுப்பி வைத்தது .

  பிங்கியும், ராமுவும் அதன் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக காட்டில் விளையாடியபடி வளம் வந்து கொண்டிருந்தது.

  அந்த காட்டில் பெரிய ஓடை ஒன்று இருந்தது .அதன் ஓரத்தில் பெரிய நாவற்பழமரம் ஒன்று இருந்தது.

  அந்த மரத்தில் நிறைய நாவற்பழம் பழுத்து கீழே நிறைய விழுந்து கிடந்தது.

  நாவல் பழம் என்றால் பிங்கிக்கு மிகவும் இஷ்டம்.. ஆனால் பழுத்த பழங்கள் நிறைய தண்ணீரில் விழுந்தது.

  ஒன்று இரண்டு பழங்கள் மட்டுமே கரையின் ஓரத்தில் விழுந்து கிடந்தது ஆனால் அதையும் யாரும் வந்து விரும்பி எடுத்து சாப்பிடுவது கிடையாது ஏனென்றால் அந்த நீரோடையில் பெரிய முதலை ஒன்று நீண்ட நாட்களாக வசித்து வந்தது.

  அதனுடைய வேலையே நாவற்பழம் சாப்பிட வரும் உயிரினங்களை பிடித்து உண்பதுதான் .

  முதலில் நிறைய நாட்கள் வரைக்குமே அங்கிருந்த விலங்குகளுக்கு தெரியவில்லை அந்த மரத்திற்கு அருகே செல்லும் விலகினங்கள் எங்கே போகிறது என்று தெரியாமல் இருக்க, ஒரு நாள் காணாமல் போகும் சிறு உயிரினங்கள் முதலையால் தான் மரணம் ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டனர் .அதன் பிறகு அந்தப் பக்கமாக எந்த விலங்குகளும் வருவதில்லை.

  தினமுமே அந்த வழியாக யானை குட்டியும், குரங்கு குட்டியும் சென்று கொண்டிருந்தனர் .

  அந்த பழங்களை பார்க்கும் போது எல்லாமே குரங்கிற்கு எடுத்து சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது ஆனால் யானை குட்டி ஒரு நாளுமே அதற்கு அருகே செல்ல அனுமதித்ததே இல்லை.

  “அங்கே போக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. எக்காரணத்தைக் கொண்டும் அந்த பக்கம் நீ போகக்கூடாது. போனால்  வீட்ல சொல்லிடுவேன் “இப்படி மிரட்டியை அழைத்து வந்தது.

  தினமுமே அந்த பாதையை தாண்டும் போதெல்லாம் குரங்கின் கண்கள் அதையும் அறியாமல் நாவற்பழங்களை கவனிக்கும். குண்டு ,குண்டாக பெரியதாக விழுந்து கிடக்கும் பழங்களை பார்க்கும் போதெல்லாம் எடுத்து உண்ண ஆசை தோன்றும்.

  குரங்கு குட்டி மனசுக்குள் நினைத்துக் கொண்டது.” நாளைக்கு கட்டாயமா இந்த பழங்களை எடுத்து சாப்பிட்டாகணும்” இப்படி முடிவு செய்துவிட்டது.

  ஆனால் தண்ணிருக்கு அடியில் இருக்கும் ஆபத்து துளி கூட தெரியவில்லை அந்த குரங்கிற்கு.. அதனுடைய ஆசை மட்டுமே பெரியதாக இருந்தது.

  குரங்கு குட்டி காலையிலேயே தன் தாயரிடம் சொல்லிவிட்டு  ஓடி விட்டது. “நான் ராமு கூட போய் விளையாடறேன் என்னை தேடாதீங்க” இப்படி சொல்லியது.

  ஆனால் ராமு கொஞ்ச நேரத்தில் எல்லாம் குரங்கு குட்டியை தேடி வீட்டிற்கு வந்தது .

  அப்போதுதான் தாயாருக்கு புரிந்தது தன்னிடம் பொய் சொல்லி விட்டு பிங்கி வேறு ஏதோ வேலை செய்ய புறப்பட்டு விட்டது என்று..

  “பிங்கி உன்கூட தான் விளையாடறேன்னு காலைல புறப்பட்டு போனா..அவ எங்க போயிருப்பான்னு உனக்கு தெரியுமா? சீக்கிரமா போய் தேடலாம்” .இப்படி சொல்லவும்  ராமுவிற்கு உடனே ஞாபகத்தில் வந்தது அந்த நீரோடைக்கு அருகே இருக்கின்ற நாவற்பழமரம் தான்.

  “ஒருவேளை அந்த மரத்து பக்கம் போய் இருக்கலாம் ஆன்டி நான் போய் பார்க்கிறேன் “என்று சொன்னபடி வேகமாக சென்றது ராமு .ஆனால் அதற்கு முன்பாகவே பிங்கி குரங்கு நீர் ஓடைக்கு அருகில் வந்திருந்தது.

  கீழே விழுந்து இருந்த நாவல் பழங்களை ஆனந்தமாக எடுத்து உண்ண ஆரம்பித்தது .

  பிங்கி ஓடைக்கு அருகே வந்த போதே நீருக்கடியில் இருந்த முதலை பார்த்து விட்டது. அது மெல்ல நீந்தி கரைக்கு அருகே வந்து, அதனை பிடிப்பதற்காக நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தது .

  முதலில் நான்கைந்து பழங்களை சாப்பிடும் போது சற்று பயந்து பயந்து சுற்றிலும் பார்த்தபடி உண்டது..

  சற்று நேரத்தில் எல்லாம் பயம் அதனிடமிருந்து அகன்று விட்டது. தன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உலகத்தை மறந்தபடி ரசித்து உண்ண ஆரம்பித்தது .

  மொத்தமாக கையில் பத்து பழங்களை பொறுக்கி ஓரமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது முதலை மெல்ல கரைக்கு ஏறியது.

  கரை ஏறிய முதலை யோசிக்காமல் குரங்கின் காலை தன்னுடைய கோரை பற்களால் பிடித்திருந்தது அப்போதுதான் விபரீதம் புரிந்தது குரங்கிற்கு ..

  “அய்யோ.. அம்மா காப்பாத்துங்க” என சத்தமிட ,அங்கே காப்பாற்ற வருவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை .

  பிங்கிக்கு இப்போது தான் தன்னுடைய தவறு புரிந்தது. பெரியவர்கள் சொன்னது கேட்காமல் வந்ததால் நடந்த விபரீதம் புரிய, பயத்தில் இன்னும் சத்தமாக கத்தியது.

  அதே நேரத்தில்  ராமுவும் அந்த ஓடையை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது .அருகே வரும் போது குரங்கின் சத்தம் கேட்க, இன்னும் வேகமாக ஓடி வந்தது.

  அருகே வரும் போதே பார்த்து விட்டது குரங்கின் காலை முதலை கவ்வி இருப்பதை.. வேகமாக ஓடி வந்து கடைசி நிமிடத்தில் முதலையின் உடல் மீது வேகமாக ஏறி இறங்க, வலியில் முதலை “ஆ”என கத்தியபடி குரங்கின் காலை விட்டிருந்தது.

  தப்பித்தால் போதும் என்று முதலை வேகமாக நீருக்கு அடியில் சென்று மறைந்தது.

  பிங்கியை இழுத்துக் கொண்டு ராமு வேகமாக அங்கிருந்து நகர்ந்தது.

  தனக்கு நல்ல இரை கிடைக்கும் என ஆனந்தமாக காத்திருந்த முதலை சோகமாக, உடல் வலியோடு பழையபடி தண்ணீருக்குள் அமிழ்ந்தது.

  “உனக்கு எத்தனை தடவை சொல்றது பெரியவங்க சொல்றது எதுக்குன்னு உனக்கு புரியவே புரியாதா.. எப்ப தான் நீ புரிஞ்சுக்க போற ..அந்த தண்ணிக்குள்ள முதலை இருக்கு அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரியும் .யாருமே இந்த பக்கம் வருவதே கிடையாது. பெரியவங்க எதுக்காக சொல்லறாங்க .நம்ம நல்லதுக்கு தானே ..இதை என்னைக்கு தான் புரிஞ்சுக்க போற..” இப்படி திட்டியபடி குரங்கை அழைத்துச் சென்றது.

  இப்போதுதான் பிங்கிக்கு விபரமே புரிந்தது. பெரியவர்கள் என்றைக்கும் தவறாக சொல்லி வைப்பதில்லை என்று.. மனப்பூர்வமாக ராமுவிடம் மன்னிப்பு கேட்டது .

  “இனிமே இது போல காரியம் எப்பவுமே செய்யமாட்டேன் .என்னை மன்னிச்சிடு நல்லவேளை சரியான நேரத்தில் வந்து காப்பாத்தின..”

  இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் இன்னமும் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். இப்போது அந்த காட்டையே இருவரும் மகிழ்ச்சியாக சுற்றி வருகின்றனர்.

  குழந்தைகளா இந்த கதை உங்களுக்கு பிடிச்சதா!! நல்ல நட்பு இருந்ததால இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்ம பிங்கி குரங்கு தப்பிச்சிருச்சு ..

  அதே நேரத்துல ராமுவை போல  பெரியவங்க சொல்லுறதையும் குழந்தைங்க நாம சரின்னு கேட்கணும் சரியா!!

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments