ம.ப. பெரியசாமித் தூரன் – (1908-1987)
கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர். முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் என்பதால், இவர் தமிழ் இலக்கிய வரலாற்றில், தனிப்பெரும் சாதனையாளராகப் போற்றப்படுகின்றார். பின்னால் வெளிவந்த பொது அறிவு சார்ந்த பல்லாயிரம் நூல்களுக்கு, இவர் தொகுத்த கலைக்களஞ்சியமே, அடித்தளமாக அமைந்தது..
இவர் சிறார் இலக்கிய முன்னோடிகளில் மிகவும் முக்கியமானவர். சிறுவர்க்கான கதை, நாவல், கவிதை எனச் சிறார் இலக்கியத்தில், இவரது பங்களிப்பு மிகவும் அதிகம். இவர் எழுதிய முக்கியமான சிறுவர் கதைகள் ‘ஓலைக்கிளி’, ‘தம்பியின் திறமை’, ‘நாட்டிய ராணி’, ‘கடக்கிட்டி முடக்கிட்டி’, ‘மஞ்சள் முட்டை’, ‘நிலாப்பாட்டி’ ஆகியவை.
“நத்தையாரே நத்தையாரே!
அத்தை வீடு பயணமோ?
அத்தை வீடு போக முதுகில்
தண்ணீர்க்க்குடம் வேணுமோ?”
என்று துவங்கும் பிரபலமான பாடல், இவர் எழுதியது தான்.
‘மாயக்கள்ளன்’, ‘சூரப்புலி’, ‘கொல்லி மலைக்குள்ளன்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்’, ‘தரங்கம்பாடித் தங்கப் புதையல்’ ஆகிய சிறுவர் நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்காக மூன்று கவிதை நூல்களையும், தூரன் படைத்துள்ளார். அவை ‘ஆனையும் பூனையும்’, ‘நல்ல நல்ல பாட்டு’, ‘மழலை அமுதம்’ ஆகியவை. இவருடைய படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளதால் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.