இன்றிலிருந்து, பல நூறு வருடங்கள் கழிந்த பின் நடக்கும் கதை இது. இது ஜோம்பிக்கள் உலகை ஆட்சி செய்யுற காலம். நம்ம பூமியை ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகையான உயிரினம் ஆக்ரமிச்சிருந்தாங்க. பல ஆயிரம் வருடங்கள் டைனோசர்கள்; பல நூறு வருடங்கள் மனிதர்கள்; இந்த கதை நடக்குற காலத்துல ஜோம்பிக்கள். பல்லாயிரம் தடவை பெரிதாக்கினாதான் கண்ணுக்கே தெரியக்கூடிய ஒரு வைரஸால் மனிதகுலமே மனிதத்தை இழந்து சுத்திக்கிட்டு இருந்தாங்க.
பசி மட்டுமே ஜோம்பிக்களால் உணரக்கூடிய ஒரே உணர்வு.. நட்பு தெரியாது; கோபம் தெரியாது; அன்பு தெரியாது; நேசம் தெரியாது; வலி தெரியாது; ஏன், சுவை கூடக் தெரியாது. பசி.. பசி.. பசி மட்டுமே..
வைரசிடமிருந்து தப்பியிருந்த சில கோடி மனிதர்கள் ஆங்காங்கே எலிப்பொந்தைப் போல ஒளிவதற்கு இடம் கண்டுபிடிச்சி, அதில் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. ஒரே இடத்துல இருந்தா, ஜோம்பிக்கள் எப்படியாவது கண்டுபிடிச்சிடுமே அதனால் ஆங்காங்கே இடம்பெயர்ந்து நாடோடி வாழ்க்கைதான் வாழ்ந்தாங்க. யாராவது ஆராய்ச்சி செய்து இந்த வைரசுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சிட மாட்டாங்களா என்ற ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.
தானாக வளருகிற மரம் செடிகளில் இருந்து தனக்கு வேண்டியதை சேகரிச்சிகிட்டு வாழ்க்கையை ஓட்டுனாங்க.
அங்கே ஒரு வயசான பாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு பேரப்பையனும் பேத்தியும் இருந்தாங்க. இரண்டு பேருக்கும் உளுந்தவடைன்னா ரொம்ப பிடிக்கும். பாட்டிகிட்ட எப்பவுமே கேட்டுகிட்டே இருப்பாங்க. அவங்க ஆசையை எப்பவுமே நிறைவேத்துற பாட்டி என்ன பண்றதுன்னு ரொம்ப யோசிச்சாங்க. ஒரு முடிவோடு பாட்டி ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு காட்டுக்குள்ளே போனாங்க.
அங்கே காட்டாறு ஓடுற பக்கமா, தான் கொண்டு வந்த சில நெல், உளுந்து விதைகளைத் தூவினாங்க. கஷ்டப்பட்டு அந்த செடிகளை, அங்கே வளர்த்தாங்க. அது ஒன்றும் எளிதானகாரியம் கிடையாது.. ஜோம்பி வந்தா ஒளிஞ்சிடனும்; விளைஞ்ச பயிரை பார்த்தா, சில மனுசங்களே வந்து கதிரறுத்துட்டுப் போயிடுவாங்க. அவங்ககிட்ட சண்டை போட்டு பயிர்களைக் காப்பாத்தனும்; காட்டு விலங்குகள்கிட்டே இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றனும். பெரிய போராட்டத்துக்குப் பிறகு, அவங்க அந்த சில விதைகளை, சில ஆயிரம் விதைகளா மாத்தினாங்க.
அந்த தானியங்களை உரல் போன்ற கல்லைக் கொண்டு அரைச்சி, மாவு எடுத்துகிட்டாங்க. ஒரு ஆட்டை அடிச்சி, அதன் கொழுப்பை வைச்சி வடை சுடலாம்னு அவங்க எப்பவும் வைத்திருக்கிற பாத்திரத்தை எடுத்துகிட்டாங்க. பேரனும் பேத்தியும் பதுங்கு குழியில் மறைவா இருக்க வச்சிட்டு வெளியே வந்தாங்க.
அடுப்பு செஞ்சி, அதில் நெருப்பு மூட்டி, பாத்திரம் வைச்சி, காட்டிலே மரத்துக்கடியில் உட்கார்ந்து வடை சுட ஆரம்பிச்சாங்க.
அப்போ நெருப்பைப் பார்த்துட்டு, அந்த பக்கமா ஒரு ஜோம்பி வந்துச்சி.. அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சி அந்த ஜோம்பி.. பாட்டி, “காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” ன்னு கத்துனாங்க. அது காடு இல்லையா? அந்த பாட்டியோட சத்தத்தில் அங்கே ஒரு சிங்கம் வந்துச்சி.
‘ஒரு மனுசனை மனுசன் போலவே இருக்கிற இன்னொரு மிருகம் சாப்பிடப் போகுதே’, அப்படின்னு ஆச்சர்யமா பார்த்துச்சி அந்த சிங்கம். மனுசங்க டேஸ்ட் அந்த சிங்கத்துக்குத் தெரியும். ‘மனுசங்களே எவ்வளோ டேஸ்ட்டா இருப்பாங்க.. அப்போ, மனுசங்களைச் சாப்பிடுற இந்த மிருகம் எவ்வளோ டேஸ்ட்டா இருக்கும்!’னு அந்த சிங்கத்துக்கு மனசுக்குள்ளே எண்ணம் ஓடுச்சி. உடனே பாய்ந்து போய் அந்த ஜோம்பியின் கழுத்தை லபக்குன்னு கடிச்சிடுச்சி.
சிங்கத்தோட அட்டாக்ல ஜோம்பி கை தவறி பாட்டி மேல் இருந்த பிடியை விட்டுடுச்சி . பாட்டி பாறை மேல் இருந்து கீழே விழுந்துட்டாங்க. கீழே விழுந்தவங்க அடிச்சி பிடிச்சி ஓடினாங்க.. ஓடிப்போய் தான் அதுவரை சுட்டு வச்சிருந்த பத்து உளுந்து வடையை எடுத்துகிட்டு பேரன், பேத்தி ஒளிஞ்சிருக்கிற பொந்துக்குள்ளே ஓடிப் போயிட்டாங்க.
இரத்தம் வரும்னு எதிர்பார்த்து கழுத்தைக் கடிச்சா, அது காய்ந்து போன ‘பன்’ போல இருக்க, “ச்சீ!” என்று துப்பியது சிங்கம் அந்த ஜோம்பியை. ‘ஆஹா.. இந்த ‘யக்கி’ ஜோம்பிக்கு ஆசைப்பட்டு கிடைக்க இருந்த பாட்டியை மிஸ் பண்ணிட்டேனே!’ என சோகமாக சிங்கம் காட்டுக்குள் தன் குகை தேடிப் போக, கழுத்தில் கடி வாங்கிய ஜோம்பி , கவலை எதுவும் இல்லாமல் அடுத்த ஆள் தேடி நடக்க, பாட்டி, தான் சுட்ட வடைகளைப் பேரன் பேத்தியோடு சேர் பண்ணி சாப்பிட்டு சந்தோசமா இருந்தாங்க” என்று ரொம்பவும் சீரியசான குரலில் அப்பா கதை சொல்லி முடிக்க, அம்மா தலையில் அடித்துக் கொள்ள, “வாவ்!! சூப்பர் கதைபா!!” என்று அனு துள்ள, “அப்பா!! இதெல்லாம் ஒரு கதையா!!” என்று வினு பொங்கினான்.
“ஏன்? இந்த கதைக்கு என்ன குறைச்சல்?” படைப்பைக் குறை சொன்னால் படைப்பாளியால் தாங்க முடியுமா?
“கதையா இது? நேத்து பார்த்த ஜோம்பி படத்துல இருந்து ஒரு சீன், பாட்டி வடை சுட்ட கதையில் இருந்து ஒரு சீன், முதலை, குரங்கு கதையில் இருந்து ஒரு சீன், அப்புறம் மான் ஆமை கதையில் இருந்து ஒரு சீன்னு எல்லா கதையில் இருந்தும் ஒவ்வொரு சீன் சுட்டு சொல்றதுக்கு பேர் கதையா?” வினு இரவு விளக்கின் வெளிச்சத்தில் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து வாதிட்டான்.
“பாட்டி பல வருடங்களா வடை சுடுறாங்க. நான் ஒரே தடவை பாட்டிகிட்டே இருந்து கதை சுட்டுட்டேன். அதுவுமில்லாம எத்தனை நாள்தான் பாட்டி சுட்ட வடையைக் காக்கா தூக்கிட்டு போகும். அதான் ஒரு சேஞ்சுக்கு பாட்டியையே தூக்கிட்டு போக வச்சிட்டேன். ஹாஹா!” என்று அப்பா பெருமையாய் சொல்லிச் சிரித்தார்.
அம்மாவும், வினுவும் இருட்டில் முறைத்துக் பார்க்க, “ஹாஹா” வென அப்பாவோடு சேர்ந்து சிரித்த அனுவைத் தூக்கிக் கையில் போட்டுக் கொண்டவர், “வாடா செல்லம்! நாளைக்கு அப்பா உனக்கு தாகத்துக்கு தண்ணி தேடுற காக்கா கதையையும் தண்ணிக்குள்ளே நீச்சலடிக்கிற காட்சில்லா கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு மிக்ஸி கதை சொல்றேன்..” என்க, அனு, “ஹேஏஏஏ! சூப்பர்பா!” என்று உற்சாகமாய்க் கைதட்டினாள்.
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.