பாரம்பரியக் கதைகள்
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அந்த அரசனுக்கு ஏழு அழகான இளவரசிகள் பிறந்தார்கள். பாசத்தோடும், பரிவோடும் அவர்களை அரசன் வளர்த்து வந்தான். இளவரசிகள் வளர வளர அவர்களுடைய குறும்புத்தனமும் கூடி வந்தது. அரசனும் அரசியும் எதற்கும் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அளவில்லாத அன்பு செலுத்தினார்கள். இளவரசிகள் என்ன கேட்டாலும் பெற்றோர் உடனடியாகக் கொடுத்து விடுவார்கள்.
இளவரசிகள் அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்றாகத் தான் எப்போதும் தூங்குவார்கள். தினமும் காலையில் எழுந்து வரும்போது மிகவும் களைப்புடனும் கசங்கிய, கிழிந்த உடைகளுடன் கொட்டாவி விட்டபடி வருவார்கள்.
ஆடைகளை தினமும் அவர்கள் பாழாக்கி விடுவதால் தினமும் புதிய ஆடைகள் அவர்களுக்காக நெய்யப்பட்டன. ஆடைகள் என்றால் உயர்தரப் பட்டில் நெய்யப்பட்டுத் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளால் அலங்கரிக்கப்படும் ஆடைகள். நவரத்தினக் கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகள்.
அவர்களுடைய காலணிகளும் தினமும் பிய்ந்து போயிருக்கும். காலணிகள் என்றால் சாதாரணக் காலணிகள் இல்லை. முத்து, பவழம் போன்ற விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட உயர்தரமான காலணிகள். இளவரசிகள் இல்லையா? அதற்கேற்ப அவர்களுடைய காலணிகளும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. இளவரசிகளும் அவ்வளவு விலை உயர்ந்த காலணிகளை அணிந்து கொள்ளத் தான் பிரியப்பட்டார்கள்.
அரசனும் தன்னுடைய அரண்மனையில் ஆடை நெய்யும் நெசவாளர்கள் மற்றும் காலணிகளைச் செய்து தரும் தொழிலாளிகளையும் தினமும் வரவழைத்து இளவரசிகளுக்குப் புதிய ஆடைகளையும், காலணிகளையும் செய்து தரச் சொல்லிக் கட்டளை இடுவான்.
தினந்தோறும் தொடர்ந்தது இந்தக் கதை. ஆடைகள் மற்றும் காலணிகளைச் செய்து செய்து அலுத்துப் போனார்கள் அந்தத் தொழிலாளிகள். அரசனுக்கும் அரசிக்கும் மனதில் பெரும் கவலை வாட்டியது.
” போகிற போக்கில் இளவரசிகளுக்குப் புதிய ஆடைகளையும் செருப்புகளையும் செய்து செய்து கஜானாவே காலியாகி விடும் போல இருக்கிறது. இரவில் அப்படி என்ன தான் செய்கிறார்களோ தெரியவில்லையே? தினமும் எப்படி ஆடைகளும் காலணிகளும் பாழாகும்? கேட்டாலும் சரியான பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி விடுகிறார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை ” என்று தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
” தானாகவும் சொல்ல மாட்டார்கள். எப்படிக் கண்டுபிடிப்பது? சரி, முதன்மந்திரியைக் கூப்பிட்டுக் கேட்கலாம். அவர் நல்ல புத்திசாலி. நிச்சயமாக ஏதாவது யோசனை சொல்லுவார் ” என்று அரசி சொல்ல, அரசரும் தனது நெருங்கிய நண்பரான முநன்மந்திரியை அழைத்து ஆலோசனை கேட்டார்.
” அரசே, நாட்டு மக்களுக்கு ஒரு போட்டி வைத்துப் பரிசு அறிவிக்கலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் அறிவுத்திறனை உபயோகித்துக் கண்டு பிடித்து விடுவார்கள் ” என்று சொல்ல, அரசருக்கும் அந்த யோசனை சரியென்று பட்டது. அடுத்த நாளே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது.
” பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. நமது அரசருடைய ஒரு பிரச்சினைக்கு விடை கண்டுபிடிக்கும் இளைஞர்களுக்கு அற்புதமான பரிசு கிடைக்க உள்ளது. அரிய வாய்ப்பு ஒன்று நம் நாட்டு இளைஞர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் அரண்மனைக்குச் சென்று மற்ற விவரங்களைக் கேட்டுக் கொள்ளலாம் ” என்று அறிவிக்கப்பட்டது.
பல இளைஞர்கள் ஆர்வத்துடன் அரண்மனையை நோக்கிப் படையெடுத்தார்கள். போட்டியின் நிபந்தனைகளைக் கேட்டு சிலர் பின் வாங்கினார்கள். சிலர் துணிச்சலுடன் கலந்து கொள்ளத் தயாரானார்கள்.
” இளவரசிகளுடைய அறையில் மூன்று நாட்கள் தங்கி இரவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்கிறவருக்கு இளவரசிகளில் ஒருத்தியை மணம் முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மூன்று நாட்கள் கழித்து, விடை கண்டுபிடிக்கத் தெரியாதவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்” இது தான் அந்த நிபந்தனைகளின் சாராம்சம்.
தினமும் ஓர் இளைஞன் அரண்மனையில் இளவரசிகளின் அறையில் தங்கினான். நல்ல விருந்துச் சாப்பாடு. வகை வகையான பதார்த்தங்கள் மற்றும் இனிப்புகளை உண்டு நன்றாக உறங்கிப் போவான். காலை எழுந்து வரும்போது தூக்கக் கலக்கத்துடன் தான் வருவான். மூன்று நாட்கள் முயற்சி செய்த பிறகு தன் தோல்வியை ஒப்புக் கொள்வான்.
ஒவ்வொரு முறையும் இதே நிலைமை தொடர, போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அரசனும், அரசியும் தங்கள் கேள்விக்கு விடை தெரியாமல் தவித்தார்கள்.
அரசரின் படையைச் சேர்ந்த இளம் போர்வீரன் ஒருவன், அரசர் அறிவித்திருந்த போட்டியில் கலந்து கொள்ள அரண்மனையை நோக்கிக் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான்.
வரும் வழியில் பசியால் மயங்கிக் கிடந்த ஒரு மூதாட்டியைப் பார்த்தான். தன்னிடம் இருந்த உணவையும், நீரையும் அவளுக்குக் கொடுத்து உதவி செய்தான். பசி மயக்கம் தீர்ந்த அந்த மூதாட்டி, வீரனை மனதார வாழ்த்தினாள்.
” எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் தம்பி? ” என்று கேட்க,
” அரண்மனைக்குப் போய் அரசர் அறிவித்த போட்டியில் கலந்து கொள்ளப் போகிறேன். இளவரசிகள் இரவில் தூங்காமல் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டுமாம்” என்று அந்த வீரன் பதிலளித்தான்.
” நான் உனக்கு உதவி செய்கிறேன். நான் சொல்வதை கவனமாகக் கேள். தினமும் இரவு உனக்கு விருந்துணவு தருவார்கள். இறுதியாகப் பாயாசம் கொடுப்பார்கள். அதை மட்டும் குடிக்க வேண்டாம். அதில் தூங்குவதற்கு மருந்து கலந்திருப்பார்கள். ஏதாவது போக்குக் காட்டி அதைக் குடிக்காமல் தவிர்த்து விடு. அப்புறம் இந்த அங்கியை மடித்து உன் ஆடைக்குள் ஒளித்து வைத்துக் கொள். இதை அணிந்து கொண்டால் நீ யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாய். இந்த யோசனைகளைப் பயன்படுத்தி நீ போட்டியில் வெற்றி அடையலாம் ” என்று சொல்லிவிட்டு, வீரனிடம் அந்தக் கறுப்பு அங்கியை அளித்தாள்.
வீரனும் அரண்மனையை அடைந்தான். அன்றே போட்டியில் கலந்து கொண்டான். முதல் நாள் இரவு ஆரம்பித்தது. இளவரசிகள் புதிய ஆடைகளையும், காலணிகளையும் அணிந்து கொண்டு உற்சாகமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். விருந்துணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அந்த வீரன் மிகவும் கவனத்துடன் தனக்கு வேண்டிய அளவு உணவை மட்டுமே உண்டான். இறுதியாகப் பாயாசம் பரிமாறப்பட்ட போது தனது இருக்கையிலேயே அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, ஒரு கிண்ணத்தில் பாயாசத்தைக் கொடுத்தார்கள்.
” தூக்கம் வந்து விட்டது. அப்புறமாகக் குடிக்கிறேன்” என்று சொல்லி விட்டுப் படுக்கையில் படுத்துத் தூங்கிப் போனான்.
சிறிது நேரம் கழித்து ஒரு கண்ணை லேசாகத் திறந்து இளவரசிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். மூத்த இளவரசி தரையில் ஓரிடத்தைத் தன் கையில் இருந்த தடியால் தட்ட, ஒரு சிறிய கதவு திறந்தது. அதற்குள் இருந்த படிகளில் இளவரசிகள் ஒவ்வொருவராக இறங்கிப் போனார்கள். வீரனும் தன்னுடைய அங்கியை அணிந்து கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தான்.
அந்தப் பாதை அழகான ஒரு நந்தவனத்தில் சென்று முடிந்தது. நிறைய மரங்கள், செடிகள், கொடிகளும் இருந்தன. மரங்களின் கிளைகளில் நகைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
அற்புதமான அந்தச் சூழ்நிலையில் பல்வேறு நாட்டு இளவரசர்களும், இளவரசிகளும் , வானத்தில் இருந்து இறங்கிய தேவதைகளும் சேர்ந்து இரவு முழுவதும் பேசிச் சிரித்தபடி நடனமாடினார்கள். காலைப் பொழுது விடியும் போது தான் தங்களுடைய அறைக்குத் திரும்பினார்கள். அவர்கள் கிளம்புவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னால் வீரன், அங்கிருந்த மரக்கிளைகளில் ஒன்றை வெட்டித் தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பி வந்து படுக்கையில் படுத்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல நடித்தான்.
மூன்று நாட்களும் இதே போல் நடந்து முடிந்தன. மூன்று நாட்களின் முடிவில், வீரன் அரசனைச் சந்தித்துத் தான் பார்த்த காட்சியை விவரித்ததான். ஆதாரமாகக் தான் எடுத்து வைத்திருந்த மரக்கிளைகளைக் காட்டினான்.
தனது கேள்விக்கு விடை கிடைத்ததால் அரசரும் மகிழ்ந்து போனார். வீரன், கடைசி இளவரசியை மணக்க விருப்பம் தெரிவிக்க இளவரசியும் வீரனை மணந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்தாள். துணிச்சலுடன் புத்திசாலித்தனமும் சேர்ந்த வீரனை அவளுக்கும் பிடித்திருந்தது.
இளவரசிகளும் அதற்குப் பிறகு தங்களுடைய குறும்புத்தனத்தைக் குறைத்துக் கொண்டார்கள். ஆடைகளுக்கும், காலணிகளுக்குமான செலவு குறைந்தது.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் அரண்மனையில் வாழ்ந்தார்கள்.
தங்களுக்குக் கிடைத்து வந்த முக்கியத்துவமும், வருமானமும் குறைந்ததால் எரிச்சல் அடைந்த தொழிலாளர்கள், இளவரசியை மணந்த வீரனுக்கு மட்டும் சரியான அளவில் ஆடையும் நெய்யவேயில்லை. காலணியும் அவனுக்கேற்றபடி செய்து தரவில்லை.
வீரன், சிரித்த முகத்துடன் தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொண்டான்.
நிறைவு.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.