திலீபன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான். அப்பாவைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து ஓடி வந்தார்கள் பாவனாவும் கவினும்.

பாவனா எட்டு வயது தேவதை. கவின், ஆறு வயது குறும்புப் பட்டாசு. படபடவென்று பொரிந்து தள்ளும் உற்சாக மூட்டைகள் இரண்டு பேரும்.

” அப்பா, அப்பா, நாம பக்கத்தில் இருக்கற மார்க்கெட்டுக்குப் போய் இன்னைக்கு விளக்குகள் வாங்கிட்டு வரலாமா? தீபாவளிக்கு வீடு முழுவதும் விளக்கு ஏத்தணுமே? அப்படியே தீபாவளி ஸ்வீட், பட்டாசு எல்லாம் கூட வாங்கிட்டு வரலாமா? ” என்று ஆரம்பித்தாள் பாவனா. ” ஆமாம், ஆமாம், நாங்க ரெடியா இருக்கோம்” என்று ஒத்துப் பாடினான் கவின்.

” நாள் பூரா சண்டை போட வேண்டியது. ஆனா இந்த மாதிரித் தேவையான சமயத்தில் ஒற்றுமை திலகங்களா மாற வேண்டியது” என்று அவர்களைக் கலாய்த்தபடி அங்கு வந்தாள் அந்த வீட்டுத் தலைவியான மாதங்கி.

” சரி, இதோ அரை மணி நேரம் டயம் கொடுங்க அப்பாவுக்கு. அப்பா ரி ஃப்ரெஷ் ஆயிட்டு ஒரு கப் டீ குடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான் திலீபன்.

சென்னையில் இருந்து சென்ற வருடம் தான் தில்லிக்கு வந்திருக்கும் தமிழ்க் குடும்பம் அது. தில்லியில் அவர்கள் கொண்டாடப் போகிற முதல் தீபாவளி. தில்லி வாழ் மக்கள் தீபாவளி அன்று மாலை, தங்களுடைய வீடுகளில் தீபங்களை ஏற்றிப் பண்டிகையைக் கொண்டாடுவது பற்றித் தெரிந்ததில் இருந்து விளக்குகளை வாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

siruvar kadhai
படம்: அப்புசிவா

” விளக்கு எதுக்கும்மா ஏத்தறாங்க? நம்ப ஊரில் கார்த்திகைக்குத் தானே வீடு பூரா விளக்கு ஏத்துவோம்? ” இந்தக் கேள்வி பாவனாவிடம் இருந்து வந்தது.

” அது வந்தும்மா, இங்கே வட இந்தியாவில், ஸ்ரீராமர் பதினான்கு வருஷங்கள் வனவாசத்தை முடிச்சிட்டு அயோத்திக்குத் திரும்பி வருகிற தினத்தை தீபாவளியாக் கொண்டாடறாங்க. அதுனால மக்கள் தங்களோட வீடுகளை நல்லா அலங்கரிச்சு விளக்கெல்லாம் ஏத்திப் பட்டாசு வெடிச்சு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கறாங்க” என்றாள் மாதங்கி.

” எல்லா வீட்டிலும் ஸீரியல் லைட் போட்டு அலங்காரம் செஞ்சாப் போதாதா? அதே மாதிரி மெழுகுவர்த்தி ஏத்தி வச்சாலே வீடெல்லாம் ஜகஜோதியா இருக்குமே? மண் விளக்குகள் வேற எதுக்கு? ” என்றான் கவின்.

” மண் விளக்குகள் தான் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவை. எல்லா வீட்டிலும் ஸீரியல் லைட் போடறதால, மின்சாரமும் தானே வேஸ்ட் ஆகுது? பவர் அதிகமாக உபயோகிப்பதை நாம குறைக்கணும் இல்லையா? ஸேவ் பவர் டு ஸேவ் எர்த். கேண்டில்களை விட மண்ணால் செய்யப்படும் விளக்குகள் தானே விரைவில் மக்கிப் போகக் கூடியவை? சுற்றுச்சூழலை அதிகம் மாசு படுத்தாமல் இருந்தாத்  தானே நம்மால் இயற்கையை சரியாப் பராமரிக்க முடியும்? “

” ஓ, அப்படியா! நாமும் நிறைய அகல் விளக்குகளையே வாங்கி வீட்டில் ஏத்தி வச்சு இந்த தீபாவளியை சிறப்பாக் கொண்டாடுவோம். நீங்களும் வாங்கம்மா. எல்லாருமாக் கடைக்குப் போகலாம் ” என்று பாவனா அழைத்தபோது மாதங்கி,

” இல்லைம்மா, எனக்கு வேலை நிறைய இருக்கு. நீங்கள்ளாம் போயி உங்களுக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வாங்க” என்று மாதங்கி சொல்லி விட்டாள்.

திலீபனும் குழந்தைகளும் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மார்க்கெட்டிற்குக் கிளம்பினார்கள். அருகிலேயே இருந்த பெரிய வணிக வளாகத்தில் நுழைந்து நிறைய இனிப்பு வகைகள், அலங்காரப் பொருட்கள், பட்டாசுகளை வாங்கி வண்டியில் வைத்தார்கள். எல்லா இடங்களிலும் திலீபன் தனது க்ரெடிட், டெபிட் கார்டுகளைத் தேய்த்ததால் ரூபாய் நோட்டுகளை எடுக்கத் தேவையே இருக்கவில்லை.

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் ஒரு நடைபாதைக் கடையில் அகல் விளக்குகள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த திலீபன் வண்டியை அங்கேயே நிறுத்தினான். மூன்று பேரும் இறங்கினார்கள். கடையில் விளக்குகளின்  விலையைக் கேட்ட பின்னர், தங்களுக்குப் பிடித்ததை எல்லாம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

கடையில் இருந்தவனுக்கு அவனுடைய மனைவி உதவி செய்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட திலீபனின் குழந்தைகளின் வயதிருக்கும் இரண்டு குழந்தைகள் கடையின் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பா, அம்மா சொல்லும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொண்டு உற்சாகமாக மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏழ்மை, அவர்களது உடையில் மட்டும் தெரிந்தது. உள்ளங்களில் இல்லை.

”  தீபாவளியை நீங்கள்ளாம் எப்படிக் கொண்டாடுவீங்க? ” என்று பரிவுடன் கேட்டான் திலீபன்.

” நாங்க என்ன சாப் செய்வோம்? ஏழைங்க. தினசரி உழைச்சு சம்பாதிக்கற வருமானம் சாப்பாட்டுச் செலவுக்கே  சரியாயிடுது. இருந்தாலும் கடனோ உடனோ வாங்கி எங்களால் முடிஞ்ச அளவு கொண்டாடுவோம். குழந்தைங்க ஏமாந்து போயிடக் கூடாதில்லையா? ” என்று அவன் சொன்னான். அதற்குள் பாவனாவும், கவினும் அருகில் இருந்த குழந்தைகளிடம் அதற்குள் பேசத் தொடங்கியிருந்தார்கள்.

” எந்த ஸ்கூலில் படிக்கறீங்க? ” என்று கவின் அந்தப் பையனைக் கேட்க, அந்தக் கேள்விக்கு அவர்களுடைய அம்மாவே பதில் சொன்னாள்.

” ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு அனுப்ப எங்களுக்கு வசதி இல்லை பேட்டி ( மகளே) . மகனை மட்டும் பக்கத்தில் இருக்கற கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு அனுப்பறோம். இவளையும் அனுப்ப ஆசை தான். ஆனா முடியலை. வீட்டில் இருந்து எங்க ரெண்டு பேருக்கும் அவளால் முடிஞ்ச உதவி செய்யறா” என்று சொல்ல, பாவனா அதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தாள்.

அதற்குள் விளக்குகளை எடுத்துக் கொண்ட திலீபன், ” எவ்வளவு ஆச்சு? ” என்று சொல்ல அந்தக் கடைக்காரன், ” தொண்ணூற்று ஐந்து ” என்று சொல்ல, பர்ஸை எடுத்தான் திலீபன். அப்போது தான் அலுவலகத்தில் அன்று கேன்டீனில் வேலை செய்யும் ஒரு சின்னப் பையனுக்குத் தருவதற்காக, பேண்ட் பையில் பணம் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பையனை அன்று பார்க்க முடியவில்லை. அதை எடுத்து நீட்டினான்.

” இந்தாங்க ஸாப் மீதிப் பணம்” என்று அவன் ஐந்து ரூபாயை நீட்ட, திலீபன் ஆச்சரியம் அடைந்தான்.

” என்னப்பா, 500 ரூபாய் கொடுத்தேன் நான். மீதி அஞ்சு ரூபாய் கொடுத்தா என்ன அர்த்தம்? “

” இல்லை ஸாப், நீங்க கொடுத்தது நூறு ரூபாய் தான். இருட்ட ஆரம்பிச்சுடுச்சு இல்லையா? அதுனால நீங்க சரியா கவனிச்சிருக்க மாட்டீங்க” என்றான் அந்தக் கடைக்காரன்.

சுளீரென்று கோபம் வந்தது திலீபனுக்கு.

” எனக்குக் கண்ணு தெரியலைன்னு சொல்லறயா? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நான் கொடுத்தது ஐந்நூறு தான். இந்த அஞ்சு ரூபாயைக்  கூட நீயே வச்சுக்கோ. நானூறு ரூபாயை ஒழுங்கா, மரியாதையாக் கொடுத்துரு. தகராறு செஞ்சா,  போலீஸில எனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. நான் இப்பவே போய் உன்னைப் பத்தி கம்ப்ளைன்ட் கொடுத்துருவேன்” என்று திலீபன் அவனை மிரட்டினான். அவன் மனைவியும், குழந்தைகளும் மிரண்டு போய் திலீபனின் முகத்தைப் பார்த்தன.

” ஸாப், நான் பொய் சொல்லலை. வியாபாரத்தில் பொய் சொல்லி லாபம் பாத்தா, அந்தப் பணம் எங்கிட்டத் தங்காது. நான் நியாயமாத் தான் நடந்துக்குவேன். நீங்க என்னை நம்பலை. ஆனா தயவு செஞ்சு போலீஸ் கம்ப்ளைன்ட் மட்டும் செய்யாதீங்க. அவங்க வந்தா என் கடையையே உடைச்சு எறிஞ்சுட்டுப் போயிடுவாங்க. நான் புள்ளை குட்டிக்காரன். என் பொழைப்பே நாசமாயிடும். என் கிட்ட அதிகமாப் பணம் இல்லை. நீங்க வேணா உங்களுக்கு வேணுங்கற விளக்குகளை எடுத்துட்டுப் போங்க” என்று கெஞ்சினான்.

திலீபன் இன்னும் நிறைய விளக்குகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

” இதுவும் ஒருவிதமான வியாபார தந்திரம் தான். என்னை இவ்வளவு நிறைய விளக்குகளை வாங்க வச்சுட்டான்” என்று முணுமுணுத்துக் கொண்டே திலீபன் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்கு வந்ததும் மாதங்கி, ” என்னங்க , எக்கச்சக்கமா விளக்குகளை வாங்கிட்டு வந்திருக்கீங்க? என்றாள்.

” அதுவா, அது வந்து….வாங்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு. அந்தக் கதையை அப்புறமாச் சொல்லறேன். நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் இந்த விளக்குகளை கிஃப்டாக் கொடுத்துக்கலாம்” என்றபடி உள்ளே போனான்.

” இந்தாங்க” என்று அவனிடம் ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் மாதங்கி.

” ஏது இது? ” திடுக்கிட்டுக் கேட்டான் திலீபன்.

” ஏங்க, பேண்டைத் தோய்க்கப் போட்டா செக் பண்ண மாட்டீங்களா? நல்லவேளை மெஷினை ஆன் செய்யறதுக்கு முன்னால நான் கவனிச்சேன்” என்று அவள் சொன்னபோது தான், ஆஃபீஸில் இருந்து திரும்பியதும் பேண்டை மாற்றிக் கொண்டு கிளம்பியது ஞாபகத்திற்கு வந்தது. பதறிப் போனான்.

” அய்யய்யோ, தப்புப் பண்ணிட்டேனே? ” என்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். நடந்தவற்றை மாதங்கியிடம் விவரமாகச் சொன்னான்.

” பாவம்பா அந்த அங்கிள்” என்றாள் பாவனா.

குற்ற உணர்ச்சி வதைத்தது திலீபனை. உடனே கிளம்பி விட்டான். அவனுடன் இந்த முறை மாதங்கியும் சேர்ந்து கிளம்பினாள். குழந்தைகளும் கூடக் கிளம்பி விட்டார்கள்.

” என்னை மன்னிச்சுடுங்க. தப்பு செஞ்சுட்டேன்” என்று அந்தக் கடைக்காரனின் கைகளைப் பிடித்தபடி பேசினான் திலீபன்.

” பரவாயில்லை ஸாப். நீங்க நினைச்சிருந்தா இதை மறைச்சுட்டுப் போயிருந்திருக்கலாம்.

ஏதோ மறதியினால உங்களுக்கே தெரியாம இந்தத் தப்பு நடந்திருக்கு. ஆனா நடந்தது தப்புன்னு உணர்ந்த உடனே வந்து மன்னிப்பு கேக்கறீங்களே, அந்த மனசு எத்தனை பேருக்கு வரும்? நீங்க ரொம்ப ரொம்ப உசந்தவங்க ஸாப்” என்று கண்களில் நீர் மல்கப் பேசினான் அந்த நல்ல மனிதன்.

” இந்தாங்க அங்கிள். உங்களுக்கும் குழந்தைகளுக்கும் எங்களோட தீபாவளி கிஃப்ட் ” என்று சொல்லி ஸ்வீட் டப்பாக்களையும், புதிய ஆடைகளையும் பாவனா, கவின் இருவரும் அவனிடம் கொடுத்தனர்.

அவனை வற்புறுத்தி ஐந்நூறு ரூபாயையும் கொடுத்தாள் மாதங்கி.

” இது வேற எதுக்கு மேம் ஸாப்? அது தான் நிறைய தீபாவளி கிஃப்ட் வேற கொடுத்துட்டீங்களே? “

” இது தனி. அது தனி. உங்களோட உழைப்புக்கும் நேர்மைக்கும் நாங்க  கொடுக்கற மரியாதைன்னு நினைச்சுக்கங்க பையா( அண்ணா). அப்புறம் உங்க பேட்டியையும் மறக்காம ஸ்கூலில் சேத்துடுங்க. அவளோட படிப்புச் செலவை நாங்க ஏத்துக்கறோம்” என்று மாதங்கி சொல்ல, அந்தக் கடைக்காரனின் மகள் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்தாள்.

அவளுடைய வாழ்விலும் இனி கல்வி என்ற தீபம் என்றென்றும் ஒளி வீசும்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments