ராத்திரி மணி எட்டு ஆச்சு. காலை ஒன்பது மணிக்கே போன கரென்ட் இன்னும் வரலை. இன்வர்டரும் அணைந்து போயாச்சு.

பாட்டி பசிக்கிது. சாப்பிட தாங்க என்றாள் நந்து  

இருட்டல சாப்பிடக் கூடாது. இரு. மெழுகுவர்த்தி ஏத்தறேன் என்றாள் நந்துவின் அம்மா.

இருட்டுல சாப்பிட வேண்டாம். நாம மொட்டைமாடிக்கு போகலாம். நிலா வெளிச்சத்தில் சாப்பிடலாம் வா என்று நந்துவை அழைத்தாள் பாட்டி.

நிலாவிலா என்று ஆசையா கேட்ட நந்து, நிலா சாப்பாடுன்னா கதை சொல்லணும். சரியா என்று கேட்டாள்.


கதை இல்லாமலா என்ற பாட்டி சாப்பாடு கிண்ணத்தையும் பாயையும் எடுத்துக் கொண்டு நந்துவுடன் மாடிக்கு போனாள். சாப்பாட்டை ஒரு கை உருட்டி நந்துவின் சின்ன கையில் வைத்தாள் பாட்டி.

அம்மா எங்களுக்கும் என்று கூடவே கையை நீட்டினார்கள் வீட்டில் இருந்த நந்துவின் அம்மாவும் அப்பாவும். எல்லாருக்கும் கையில் போடறேன் என்ற பாட்டி சாப்பாட்டை ஒரு ஒரு கவளமாக உருட்டி உருட்டி ஒவ்வொருவர் கையில் வைத்தாள்.

பாட்டி கதை என்று ஞாபகப்படுத்தினாள் நந்து.

கதை இல்லாமலா என்று கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

பாட்டி சொன்ன கதை இதோ. 

ஒரு ஊரில் ரங்கன் என்னும் விவசாயி ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு அந்த ஊரின் எல்லையில் இருந்த காட்டை ஒட்டிய ஒரு தோட்டம் இருந்தது. கரடுமுரடா இருந்த அந்த தோட்டத்தில் ரங்கன் அரும்பாடு பட்டு, நல்லா ஆக்கி  வாழை பயிர் செய்திருந்தார். அந்த வருசம் நல்ல மழை பெய்திருந்ததினால் வாழை மரங்கள் நல்லா தளதளன்னு வளர்ந்திருச்சு. ரங்கனுக்கு ரொம்ப சந்தோஷம். அடடா.. இந்த வாழைக்குலைகளை வித்து நிறைய காசு சம்பாரிச்சால் நம்ம மகனுக்கு, இந்த வருஷமே கல்யாணம் பண்ணிடலாமே என்று நெனச்சுக்கிட்டு இருந்தார்.  வாழை தோப்பில், பழங்கள் பலுக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் பத்து பதினஞ்சு நாளைக்குள்ள குலையை எல்லாம் வெட்டிடலாம் என்று நெனச்சு வாழைக்குலையை விக்கறதுக்கு சந்தைக்கு கொண்டு போக லாரிக்கு கூட சொல்லி வெச்சிட்டாரு.

அப்போ தான் காட்டில் இருந்து ஏகப்பட்ட குரங்குகள் ராவோட ராவா வந்து வாழைப்பழத்தை குலையோடு பிடுங்கி தின்று விட்டு தோட்டத்தை நாசம் செய்து விட்டுப் போயிருந்தது. மறுநாள் காலையில் வழக்கம் போல தோட்டத்திற்கு வந்த ரங்கன் முதல்நாள் இரவில் குரங்குகள் செய்த அட்டகாசத்தைக் கண்டு மனசு கஷ்டமா போயிட்டாரு.

monkey banana

அதனால ரங்கன் ராத்திரி தோட்டத்திற்கு வந்து காவல் காத்துக் கொண்டிருந்தார். அன்று இரவு அப்படி காவல் காத்துக் கொண்டிருந்த போது காட்டில் இருந்து குரங்குகள் தவ்வி கொண்டு வந்து வாழை மரங்களை நான்கைந்து குரங்குகளாய் சேர்த்து தள்ளி பழத்தை பறித்து தின்று கொண்டிருந்தது. ரங்கன் குரங்குகளை ஒருபக்கம் விரட்டினால் மறுபக்கம் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் ரங்கனால் குரங்குகளை துரத்த முடியாமல் அழ ஆரம்பித்தார்.”கடவுளே,இந்த குரங்குகளிடம் இருந்து என் தோட்டத்தைக் காப்பாத்துப்பா” என்று கண்களை மூடி வேண்டிக் கொண்டார்.

வேண்டி முடிந்த பின்பு, கண்களை திறந்தவரின் முன்பு ஒரு கரிய நிற பூதம் வந்து நின்றது.
“ஏன் அழறே? உனக்கு என்ன வேண்டும்?’ என்று பூதம் கேட்டது.

“குரங்குகளை விரட்டனும்” என்று ரங்கன் வேண்டிக் கொண்டான்.

உடனே பூதம் எல்லா குரங்குகளையும் தோட்டத்தில் இருந்து விரட்டி விட்டு கீழே விழுந்து கிடந்த வாழைமரங்களை எல்லாம் எடுத்து  பூமியில் சரியாக நாட்டு வைத்தது.

ரொம்ப சந்தோஷமான ரங்கன், பூதத்திற்கு ரொம்ப நன்றி சொல்லி, வாழைக் குலைகளை பூதத்திற்கு தின்பதற்கு கொடுத்தான்.

“அதெல்லாம் வேண்டாம் ரங்கா” என்று சொன்னது பூதம்.

“உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். நான் செய்கிறேன்” என்று பவ்வியமாக கேட்டான் ரங்கன்.
“குரங்குகளை காட்டுக்கு விரட்டிக் கொண்டு போனதில் முள்ளுச்செடி  முதுகில் குத்தி ரொம்ப அரிக்கிறது. கொஞ்சம் சொறிஞ்சி விடு” என்றது.

நம்ம அவ்வளவு பழம் தரோம்னு சொல்லியும் அதை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி வெறுமனே முதுகு சொறிஞ்சி விட சொல்லுதே என்று மனதிற்குள் சந்தோஷமாய் அதற்கென்ன என்றவாறே பூதத்திற்கு முதுகு சொறிஞ்சி விட்டான்

ரங்கன் முதுகு சொறிய சொறிய பூதத்திற்கு ரொம்ப சொகமா இருந்தது. நீ ரொம்ப நல்லா முதுகு சொறியரே. நீ தினம் ராத்திரி இங்கே வந்துடனும். வந்து தினம் எனக்கு முதுகு சொறிஞ்சி விடனும். அப்படி வரலைன்னா நான் உன் வீட்டுக்கே வந்துடுவேன்” என்று சொல்லி பயமுறுத்தியது.

ரங்கனும் எங்கே இந்த பூதம் நம்ம வீட்டுக்கு வந்து மத்தவங்களையும் தொந்திரவு செஞ்சிடுமோன்னு பயந்து வேண்டாம் வேண்டாம். தினம் ராத்திரி நானே வந்துடறேன். வந்து உங்களுக்கு முதுகு சொறிஞ்சி விடறேன்னு பூதத்துக்கு சத்தியம் செஞ்சான்.

தினம் ராத்திரி பூராவும் பூதத்திற்கு முதுகு சொறிஞ்சி விடற வேலையாய் போச்சு ரங்கனுக்கு. அதனால் அவனுக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிருந்தது. மேலும் ராத்திரி பூராவும் கண் முளிச்சதில உடம்பு கெட்டுப் போச்சு. நாளுக்கு நாள் ரொம்ப மெலிஞ்சி போயிட்டாரு ரங்கன்.

வெளியூரில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கனின் மகன் முருகன் ஒருநாள் ஊருக்கு வந்தான்.  ரங்கனைப் பார்த்த முருகனுக்கு அப்பா ரொம்ப சோர்வாக இருப்பதாக தெரியவே, “ஏன் அப்பா, நீங்க இவ்வளவு சோர்வாயிருக்கீங்க?” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா” என்று உண்மையை மகனிடம் மறைச்சுட்டான். பாவம்.மகனே வெளியூரில் இருப்பவன். வீட்டுக்கு எப்போதோ ஒருதடவை வரான். அவனை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நெனச்சான் ரங்கன்.

முருகனோ “இல்லைப்பா, நீங்க நேசத்தை சொல்லுங்க”என்று திரும்ப திரும்ப கேட்டான். ரங்கனும், முருகனின் நடந்த விஷயங்களை அப்படியே சொல்லிட்டாரு. எல்லாத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட முருகன் “இன்னைக்கு ராத்திரிக்கும் தோட்டத்திற்கு போகணுமாப்பா?” என்று கேட்டான்.

“ஆமாம் முருகா. நான் போகலைன்னா பூதம் என்னை தேடிக்கிட்டு இங்கே வீட்டுக்கே வந்துடுவேன்னு சொல்லியிருக்கு. சொன்னா மாதிரி நான் போகலைன்னா அது இங்கே வந்துடும். பாவம் வீட்ல இருக்கிறவங்க. பயந்துடுவாங்க இல்ல” என்றார்.

“நீங்க சொல்றது உண்மை தான்” என்று ஒத்துக் கொண்ட முருகன் “அப்பா, இன்னைக்கு உங்களுக்கு பதிலா நான் போறேன்னு” கேட்டான்.

“வேண்டாம். நீ போனா உன்னை அது பயமுறுத்தும். நீயும் பயந்துருவே. வேண்டாம் நீ போகாதே” என்று ரங்கன் பதறினார்.

“இல்லைப்பா பூதத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன். இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும் நான் போயிட்டு வரேன். சரின்னு சொல்லுங்க” என்று கெஞ்சினான் முருகன். 

“சரி போயிட்டு பத்திரமா வா” என்று ரங்கன் அவனை வழியனுப்பி வெச்சான்.

தோட்டத்தில் முருகன் ஒரு கருத்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு தன் முன்னால் கொஞ்சம் விறகை போட்டு எரித்து குளிர் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் முன் பூதம் வந்து நின்றது. வரும் போதே ரொம்ப அவசரமா வந்தது. “எனக்கு ரொம்ப முதுகு அரிக்குது. சீக்கிரம் சொறிஞ்சு விடு” என்று அவசரப்படுத்தியது.

முருகனும் உடனே சொறிய ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக முருகன் சொறிஞ்சதில் பூதம் ரொம்ப குஷியாயிருச்சு. நல்லா சொறியரே ரங்கா என்று பாராட்ட வேறு செய்தது. மீதி நாளை விட இன்னைக்கு ரொம்ப நல்லா சொறியறியே என்றது.

ஆமாங்க என்றான் முருகன்.

என்னடா உன் குரல் ஒருமாதிரி இருக்கு என்று கேட்டது பூதம்.

காயச்சலுங்க என்றான் முருகன்.

காய்ச்சலா இருந்தாலும் மீதி நாளை விட இன்னைக்கு அற்புதமா சொறியரே. சரி சரி. பேசிக்கிட்டு இருக்காதே. சொறிஞ்சி விடு என்று அதிகாரமாக சொன்னது.

முருகனும் சொறிஞ்சிக்கிட்டே இருந்தான். சொறிய சொறிய சுகமாயிருக்கவே பூதம் மெய் மறந்து இருந்தது. நடுநடுவே அற்புதம்.ஆகா.ம். அற்புதம். அப்படித் தான். அப்படித் தான். வேகமா, இன்னும் வேகமா, ஆங். ம். அப்படித் தான். ஜோர் ஜோர் என்றெல்லாம் புல்லரிச்சி புளங்காகிதம் அடைஞ்சது. கண்கள் செருகி சொறியற சுகத்தை அனுபவிசிக்கிட்டு இருந்தது.

சுகம் எங்கடான்னா சொறியறதுலடா என்றானாம் ஒருத்தன். இது பழமொழி

நடுராத்திரி ஆயிருச்சு. முருகன் சொறியறதை நிறுத்தலை. கை வலிச்சது. இருந்தாலும் நிறுத்தாமல் சொறிஞ்சிக்கிட்டே இருந்தான். பூதமும் மெய்மறந்து போய் சொறியறதை அனுபவிசிக்கிட்டு இருந்தது.

அப்போது தான்…டட்டடைங்..

.குளுர் காயரதுக்காக மூட்டியிருந்த நெருப்பில் முருகன் ஏற்கனவே ஒரு இரும்பு கரண்டியை செருகி வெச்சிருந்தான். அதை இப்போது எடுத்துப் பார்த்தான். எரியற நெருப்புல இவ்வளவு நேரமும் இருந்ததால் இரும்பு கரண்டி நல்லா தகதகவென நெருப்பாய் ஜொலிசிக்கிட்டு இருந்தது.

நெருப்பில இருந்து, சுடச்சுட, தகதகவென நெருப்புகட்டியாய் இருந்த   அந்த இரும்பு கரண்டியை வெளியே  எடுத்தான்.

பூதத்தின் முதுகில் நன்றாக ஒரே இழுப்பு.

நடுமுதுகில் நெருப்பு தகதகக்கும் இரும்பு கரண்டி பட்டு எரிச்சல் தாங்காமல் துள்ளிக் குதித்தது பூதம். தூக்கம் போயிருச்சு. இவ்வளவு நேரமும் சொறிஞ்சிக்கிட்டு இருந்த சுகம் போச்சு. எல்லாத்துக்கும் மேலே இப்போ எரிச்சல் மட்டும் தான். தாங்க முடியலை. அய்யோ அப்பா என்று வலியில் அழுது அலறியது. ஊஹூம். முடியலை

.இருடா உன்னை என்ன செய்யறேன் பார் என்று பூதம் முருகனை பிடித்து விழுங்கி விடப் பார்த்தது. அதனால் ரெண்டு கையாளும் முருகனை கையை நீட்டியது.


நீட்டிய கையில் மீண்டும் இரும்பு கரண்டியால் ஒரே இழுப்பு.

அய்யோ. கையை உதறிக் கொண்டது. துள்ளியது பூதம் வலியில்.

கிட்ட வா. இன்னும் மூஞ்சியிலே சூடு வைக்கிறேன். வா. வா. கிட்ட வா என்று கூவினான் முருகன்.

அவனிடம் கிட்ட நெருங்கி மீண்டும் சூட பட பூதம் என்ன முட்டாளா? அந்த இடத்தை விட்டு ஓடிப் போச்சு.

நாளைக்கு இந்த பக்கம் வா. உனக்கு இருக்கு என்று முருகன் சொன்னான்.

ஓடிக் கொண்டிருந்த பூதத்தை, காட்டில் குரங்குகள் மறித்தது. பூதமே, எதற்கு இப்படி பதறி ஓடிப் போறே என்று கேட்டன.

அவர்களிடம் தான் ரங்கனை சொறிய சொன்னதை சொல்ல முடியுமா பூதத்தால். வெட்கமாய் இருக்கவே அந்த கதை சொல்லாமல்  “ அந்த ரங்கன் எனக்கு முதுகில் சூடு போட்டு விட்டான். எரிச்சல் தாங்கலை” என்றது

.ரங்கன் எதுக்கு உனக்கு சூடு போடணும். நீ அவனுக்கு நல்லது தானே செஞ்சே என்று கேட்டது குரங்குகள்.

நல்லது தான் செஞ்சேன். அதனால ரெண்டு வாழைப்பழம் கொடேன்னு கேட்டேன். அதெல்லாம் தர முடியாதுன்னு சொன்னான். நீ என்ன தர மாட்டேன்னு சொல்றது என்று நானே ரெண்டு பழம் பறிச்சி தின்னேன். அது ஒரு தப்பா? அதுக்குத் தான் இப்படி நடுமுதுகில் சூடு போட்டுட்டான். இனி அந்த பக்கமே நான் போக மாட்டேன்” என்று சொல்லியவாறு ஓடியது.

குரங்குகள் ஒன்று சேர்ந்து மீட்டிங் போட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டது.”ஆனானப்பட்ட இந்த பூதத்துக்கு இந்த கதி. இத்தனைக்கும் பூதம் ரங்கனுக்கு நல்லது செஞ்சது. அப்படி இருந்தும் ரங்கன் ஒரு நன்றி வெச்சிப் பார்க்காமல் ரெண்டு வாழைப் பழத்துக்காக  நல்லா பழுக்க காய்ச்சின  கம்பியால ஒரே இழுப்பு இழுத்துருச்சு. நாம இனி அந்த தோப்புக்கு போக கூடாது. யாராவது ஒருத்தர் ரங்கனிடம் சிக்கினாலும் நம்மளையும் இப்படி தான் பழுக்க காய்ச்சின இரும்பு கரண்டியால நடுமுதுகில சூடு போட்டுறுவான் என்று பயந்து அந்த திசைக்கே போவதில்லை அந்த குரங்கு கூட்டம்.

தனது புத்திசாலித்தனத்தால், சமயோசித புத்தியால் தங்களுடைய எதிரியை பின்னாங்கால் பிடரியில் பட விரட்டி அடிக்க முடிஞ்சுது முருகனால். அப்பா ரங்கனுக்கும் உடம்பு நல்லபடியா தேறி வந்தது.

பழுத்த வாழைக் குலைகளை அறுத்து சந்தைக்கு அனுப்பி வித்து காசு சம்பாரிச்சி முருகனுக்கு கல்யாணம் செஞ்சி வெச்சான் ரங்கன்.

என்று கதையை முடித்தாள் பாட்டி.

அந்த கல்யாணத்துக்கு வாங்கினது தான் இந்த டிரெஸ் என்று தான் போட்டிருந்த உடையை தொட்டுக் காண்பித்தார் நந்துவின் அப்பா.

அப்படியா பாட்டி என்று கண்கள் விரிய கேட்டாள் நந்து.

சும்மா சொல்றதுடாம்மா. கல்யாணத்துல தான் அந்த காலத்து கதைகள் முடியும். கல்யாணம் என்றால் புது டிரெஸ் வாங்குவாங்க இல்ல. அதைத் தான் இப்படி சொல்றது என்று சிரித்தாள்.

நான் ஒரு கதை சொல்லவா என்று கேட்டார்  நந்துவின் அப்பா.

சொல்லுங்க அப்பா என்று குஷியானாள் நந்து.

ஒரு ஊர்ல ஒரு நரியாம் என்று ஆரம்பித்தார் நந்துவின் அப்பா

ஆஹா என்று ஆவலோட கேட்டாள் நந்து.

அத்தோடு கதை சரியாம் என்று அவள் தலையை ஆசையா முட்டினார் அப்பா

.அய்யே பாட்டி இந்த அப்பாவைப் பாருங்க என்றாள் நந்து அழாதகுறையாக.

விடு பாப்பா. நாளைக்கு நான் உனக்கு நரி கதை சொல்றேன் என்று முடித்தாள் பாட்டி.

இந்த கதையில் என்ன நீதிபோதனை இருக்கு என்று கேட்டாள் நந்துவின் அம்மா. அதாவது மாரல் ஆப் தி ஸ்டோரி என்றது நந்து. பள்ளியில் அப்படித் தானே கதைகள் மாரல் ஆப் தி ஸ்டோரி என்று  ஒரு போதனையுடன் முடியும் அதற்கு பாட்டி சொன்னாள். நாம் கஷ்டத்தில் இருக்கும் போது உதவிக்கு என்று  அழைக்கும் ஆட்கள் சரியான நபர்களாக இருக்க வேண்டும். அப்படி சரியான ஆளுடன்  கூட்டு வைக்கவில்லை என்றால் அது முன்னாடி நமக்கு இருந்த கஷ்டத்தை விட இது பெரிய கஷ்டமாகி விடும்.

அப்படின்னா நாம் எப்போதும் நல்லவங்களோட தான் சேரனும் இல்ல பாட்டி என்று நந்து கேட்டாள்.

அதற்குள் காலையில் போன கரெண்டும் வந்து விட்டது. சட்டென்று ஊரே பிரகசமாகிப் போயிற்று.

சரி சரி. நேரமாச்சு. வாங்க எல்லாரும் போய் படுக்கலாம். நந்து நாளைக்கு நீ பள்ளிக்கு போக வேண்டும் என்று அவளையும் அழைத்துக் கொண்டு படியிறங்கினாள்  பாட்டி.

What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments