கதிரவன் மலர்விழி தம்பதியின் ஒரே மகன் நான்கு வயது கவின்.
அவன் அருகிலுள்ள பள்ளியில் யூகேஜி படிக்கிறான்.
சென்ற வருடம் பெருந்தொற்று காரணமாக இணைய வழியில் பள்ளி ஆரம்பப் படிப்பைத் தொடங்கியவன் இந்த வருடம் முதல் தான் நேராகப் பள்ளிக்கு சென்று படிக்கவிருக்கிறான்.
அடுத்த வாரம் அவன் பள்ளிக்கூடம் திறக்கிறது.
ஏற்கனவே பள்ளி பற்றியும் பாடம் பற்றியும் அறிமுகம் இருந்தாலும் முதன்முறையாகப் வீட்டை விட்டு பெற்றோரைப் பிரிந்து பள்ளி செல்லப் போகிறான்; அதனால் எல்லா குழந்தைகளையும் போல பள்ளி செல்ல பயந்து கொண்டு அடம் பிடித்து அழுது புரளாமல் இருப்பதற்காக மலரும் கதிரும் தங்கள் குழந்தையிடம் பள்ளிக்கூடத்தைப் பற்றி நல்ல விதமாகவே கூறி அவன் பள்ளிக்குச் செல்ல மனதளவில் தயார் செய்தனர்.
அதனால் கவின் பள்ளி செல்ல மிக ஆவலாகவே இருந்தான்.
கவினுக்கு பள்ளிச் சீருடை புதிய காலணிகள் வாட்டர் பாட்டில் லஞ்ச் பாக்ஸ் ஸ்நாக் பாக்ஸ் எல்லாம் புதிதாக வாங்கி வந்தார்கள்.
கவினுக்கு இதையெல்லாம் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“ம்மா.. இய்ல என்ன வெப்ப? இய்ல என்ன குப்ப (குடுப்ப)?” என்று அந்த இரண்டு பிளாஸ்ட்டிக் டப்பாக்களையும் காட்டி தன் மழலை மொழியால் கேட்டான்.
“இதுல கவின் குட்டிக்கு ஸ்நாக்ஸ் வெச்சு தருவேனாம்.. இதுல மம்மு வெச்சு தருவேன்.. நீ ஸ்கூல்ல சமத்தா அடம் பிடிக்காம சாப்பிடுவியாம்.. சரியா?” என்று மலர்விழி மகனைக் கொஞ்சினாள்.
அவன் படிக்கவிருக்கும் பள்ளியில் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து அம்மா அல்லது பெரியவர்கள் உணவு எடுத்து வந்து ஊட்டக்கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.
அதனால் கவினுக்கு பள்ளி செல்ல ஆரம்பிக்கும் முன்பாகவே ஸ்நாக் பாக்ஸ் எப்படி திறந்து ஸ்நாக்ஸை கீழே சிந்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி சாப்பிட வேண்டும்; அதே போல லஞ்ச் பாக்ஸை எப்படி திறந்து வைத்து அதனுள்ளிருக்கும் உணவை எப்படி ஸ்பூனால் சாப்பிட வேண்டும் என்று பழக்கினாள் மலர்விழி. தண்ணீர் பாட்டிலிலிருந்தும் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தாள்.
கவினுக்கு இதையெல்லாம் தானே செய்து கொள்ள மிக மிகப் பிடித்தது.
“நானே சாப்பனும் ல்லம்மா..” என்று கேட்டான்.
“ஆமாடா செல்லம்.. நீயே சாப்பிடணும்..” என்று கொஞ்சினாள்.
எல்லாம் கற்றுக் கொண்டு தயாரானவனாய் தன் பெற்றோருடன், முதல் நாள் பள்ளிக்கு கிளம்பினான் கவின்.
பள்ளிச் சீருடையுடன் புத்தம் புது காலணிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு அழகாய் தயாராகி வந்தவனைக் கண்டு கதிரவன் வியந்தான்.
“அட சமத்துக்குட்டி! ஸ்கூல் போக ரெடி ஆகிட்டீங்களா?” என்று தூக்கிக் கொண்டான் கதிர்.
“ம்..” என்றான் கவின்.
“ஒனக்கு ஸ்கூல் போக பயமால்லையா?” என்று அடுத்த கேள்வி கேட்டான் கதிர்.
“ல்ல.. நா சமத்தா ஷூல் போவேன்.. அய்வே (அழவே) மாத்தேன்..” என்றான்.
கதிரவனுக்கும் மலர்விழிக்கும் மகனின் பதிலில் உள்ளம் இனித்தது.
இருவரும் மகனை அழைத்துப் போய் பள்ளியில் விட்டனர்.
அங்கு மற்ற குழந்தைகள் எல்லாம் அழுது ஆர்பாட்டம் செய்ய கவினுக்கு மனதில் பெரிய பயம் வந்து விட்டது. அதனால் அவனும் அழுது அமர்க்களம் செய்துவிட்டான்.
அவனையும் மற்ற குழந்தைகளையும் ஆசிரியை ஜாஸ்மின் கொஞ்சி சமாதானம் செய்தாள்.
அன்று வீட்டுக்கு வந்த கவின் தெளிவாக இருந்தாலும் அழுதததால் அவனுடைய முகம் சோர்வைக் காட்டியது.
அவனைக் கண்டு மலரும் கதிரும் கவலையடைந்தனர். ஆயினும் அவனை பயமுறுத்த விரும்பவில்லை.
“கவின் குட்டிக்கு ஸ்கூல்ல இன்னிக்கு என்ன சொல்லி தந்தாங்க? நீ என்னல்லாம் பண்ணின?” என்று இருவரும் கேட்க, கவின் எதற்கும் பதிலே சொல்லவில்லை.
“வெலாதினேன்..” என்று மட்டும் சொல்லிவிட்டு விளையாட ஓடிவிட்டான்.
மறுநாள் பள்ளி செல்ல கொஞ்சம் தயங்கினாலும் பள்ளிக்குச் சென்று வந்தான். இன்றும் தன் பெற்றவர்களின் பழைய கேள்விக்கு அதே பதிலை சொல்லிட்டு விளையாட ஓடி விட்டான்.
எப்போது எப்படிக் கேட்டாலும் இதே பதில்தான் அவர்களுக்குக் கிடைத்தது.
ஆரம்பத்தில் கவினுக்கு பள்ளி செல்ல பயமாக இருந்தாலும் அவன் சமத்தாகப் பள்ளி செல்லத் தொடங்கினான்.
‘இவன் என்ன? நம்ம என்ன கேள்வி கேட்டாலும் ஒழுங்காவே பதில் சொல்ல மாட்றானே? ஸ்கூல்ல எதும் பிரச்சனை இருக்குமோ?’ என்று நினைத்து கதிரும் மலர்விழியும் கவலைப்பட்டனர்.
அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியது.
“ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு சொல்லத் தெரீல.. நீ அவனுக்கு ஒழுங்கா சொல்லிக் குடுக்கல..” என்று மனைவியைக் குற்றம் சொன்னான் கதிர்.
“ஏன்? நீங்க சொல்லிக் குடுக்க வேண்டியதுதானே?” என்று கோபப்பட்டாள் மலர்.
பள்ளி சென்று விசாரித்தால் எல்லாம் நன்றாக இருப்பதாகவே பதில் வர அவர்கள் குழப்பமடைந்தனர்.
இருவருக்கும் பயமும் கவலையும் கூடவே கோபமும் இருந்தது. ஆனால் அவன் முரண்டு பிடிக்காமல் பள்ளி சென்று வருவதால் கொஞ்சம் நம்பிக்கையுடனும் இருந்தனர்.
இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட, கதிரின் தந்தை, ஏகாம்பரம், தன் மூத்த மகன் வீட்டிலிருந்து இளைய மகனான கதிரின் வீட்டுக்கு வந்தார்.
“ஐ! தாத்தா! தாத்தா!” என்று தாத்தாவிடம் செல்லம் கொஞ்சினான் கவின்.
தாத்தாவும் பேரனுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.
தாத்தாவும் பள்ளி சென்று வந்த கவினிடம் அவனுடைய பெற்றோர் கேட்ட அதே கேள்வியைக் கேட்க பேரனும் தன் வழக்கமான,
“வெலாதினேன்..” என்ற பதிலையே கூறிவிட்டு ஓடிப் போனான்.
“என்ன கதிரவா? இவன் ஒழுங்கா பதில் சொல்ல மாட்றானே?” என்று கேட்டார் ஏகாம்பரம்.
“எப்ப கேட்டாலும் இப்டிதான்ப்பா சொல்றான்.. என்ன பண்றதுன்னு எங்களுக்கும் புரியலப்பா..” என்றான் கதிர்.
“அவன் சரியா பதில் சொல்லாம இருக்கறதுனால எங்களுக்குள்ள சண்டை வருது மாமா..” என்றாள் மலர்.
கதிர் தன் மனைவியை முறைத்தான்.
“குழந்தை பதில் சொல்லலன்னா அவ என்னடா பண்ணுவா? அவள ஏன் மொறக்கற..” என்று மகனை அதட்டினார் ஏகாம்பரம்.
“இவ ஒழுங்கா சொல்லி குடுத்திருந்தா இவ்ளோ பிரச்சனை ஏன் வரப் போகுதாம்..” என்று முணுமுணுத்தான் கதிர்.
“பாருங்க மாமா..” என்று மலர் தன் மாமனாரிடம் குறை படித்தாள் மலர்.
“டேய்..” என்று ஏகாம்பரம் மகனை மீண்டும் அதட்ட,
“சரி! சரி! ஒங்க மருமகள நா ஒண்ணும் சொல்லிடல..” என்றபடியே மனைவியை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.
ஏகாம்பரம் மருமகளை சமாதானம் செய்தார்.
இரண்டு நாட்கள் இப்படியே கழிய, ஏகாம்பரம் சிறிது யோசனைக்குப் பின் பேரனிடம் அவன் போக்கிலேயேதான் பேச வேண்டும் என்று புரிந்து கொண்டு அதை நடைமுறைப் படுத்த முடிவு செய்து கொண்டார்.
அதன்படி அன்று மாலையும், “வெலாதினேன்..” என்று கூறிவிட்டு ஓடப் பார்த்த பேரனைப் பார்த்து,
“என்ன வெலாத்து வெலாதின?” என்று அவனைப் போலவே மழலைக் குரலில் கேட்க, கவின் வியந்து சிரித்தான்.
“தாத்தாக்கு சொல்லு கவின்.. ஸ்கூல்ல என்ன வெலாத்து வெலாதின?” என்று தாத்தா பேரனை கொஞ்ச,
பேரன் சொல்லத் தெரியாமல் திணறினான்.
“நம்ம அந்த வெலாத்து வெலாதலாமா?” என்று தாத்தா அடுத்த கேள்வி கேட்க, கவினுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
“ம்ம்..” என்று தலையாட்டிவிட்டு உள்ளே ஓடிப் போய் தன் அம்மாவின் துப்பட்டா ஒன்றை எடுத்து வந்தான்.
அதைத் தன் அம்மா போட்டுக் கொள்வது போலவே தன் கழுத்தில் போட்டுக் கொண்டான்.
“தாத்தா இங்க உக்காங்க..” என்று தாத்தாவை சுவற்றைப் பார்த்து அமர வைத்துவிட்டு அவரிடம் ஒரு காகிதம் மற்றும் பென்சிலை கொடுத்துவிட்டு சுவற்றில் சாக்பீசால் எழுதுவது போல பாவனை செய்தான்.
பின்னர், தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டு தாத்தாவைப் பார்த்து,
“ஆல் ஆஃப் யூ ரைத் திச்..” என்றான்.
இவனுடைய விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த மலர்விழி, அடுப்பை அணைத்துவிட்டு தானும் தன் மாமனார் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“நானும் உன் கூட விளையாட வரவா கவின்..” என்று மலர்விழி கேட்க, சற்று யோசித்துவிட்டு பெரிய மனசு வந்தது போல போனால் போகட்டும் என்று அவளையும் தன் விளையாட்டில் சேர்த்துக் கொண்டான்.
“ஆல் ஆஃப் யூ ரைத் திஸ்!” என்று மீண்டும் கூறினான்.
மலர்விழி தன் காகிதத்தில் எதையோ எழுதுவது போல பாவனை செய்ய, தாத்தா அவனை ஒன்றும் புரியாதது போல பார்த்தார்.
அப்போது கதிரும் தன் வேலை முடிந்து வீடு வர, தன் அப்பாவும் மனைவியும் தன் மகனின் முன்னால் மாணவர்கள் போல அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவனும் அவர்களுடன் வந்து அமர்ந்தான்.
கவின் தன் துப்பட்டாவை மீண்டும் ஒரு முறை சரியாகப் போட்டுக் கொள்வது போல பாவனை செய்துவிட்டு, அப்பாவைப் பார்த்து,
“ஐயோ அப்பா! காஸ்குள்ள (class) வர முன்னாதி, ‘மேயி கம்மிம் மிஸ் (may I come in miss)’ ன்னு கேக்கணும்!” என்றான்.
உடனே கதிரும், சிறு புன்னகையுடன் எழுந்து போய் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு,
“ஓ! சாரி மிஸ்! மே ஐ கம் இன் மிஸ்?” என்று கேட்க,
“கம்மிம் அன் சித்தவ் (come in and sit down)!” என்று கூறிவிட்டு,
“இத எய்து..” என்று கூறினான்.
கதிரும் தன் மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல பாவனை செய்தான்.
“என்ன எய்தணும்? எனக்கு எய்த தெய்யாதே!” என்றார் தாத்தா.
“ஒன்கு எய்த தெய்யாதா..” என்று கேட்ட கவின், தன் தாத்தாவின் அருகில் வந்து அவருடைய கை பிடித்து பென்சிலால் காகிதத்தில் கிறுக்கினான்.
பின்னர் தாத்தாவைப் பார்த்து,
“ஏமாம்மம்.. புஞ்சுதா?” என்று தன் தாத்தாவின் பெயரை தன் மழலை மொழியால் விளித்துக் கேட்டான்.
மலர்விழிக்கும் கதிருக்கும் வியப்போ வியப்பு! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
தாத்தா, பேரனின் அழைப்பிலும் செயலிலும் வியந்து போய்ப் பார்க்க,
“ஹையோ தாத்தா! நா புஞ்சுதா கேத்தா.. நீ புஞ்சுது மிஸ் ச்சொல்லணும்..” என்று சொல்லிக் கொடுத்தான்.
“ஓ.. சரி.. சரி.. நீ திருப்பியும் கேளு.. நா சரியா சொல்றேன்..” என்று தாத்தா தலையாட்டினார்.
கவின் மீண்டும் ஒரு முறை தாத்தாவின் கைபிடித்து காகிதத்தில் கிறுக்கி விட்டு,
“ஏமாம்மம்.. இப்பிதான் எய்தணும்.. புஞ்சுதா?” என்று கேட்டான்.
“புஞ்சுது மிஸ்!” என்றார் தாத்தா.
“குத் பாய்!” என்று கூறி கவின் தாத்தாவின் உள்ளங்கையில் குட்டியாக எதையோ கிறுக்கினான். பின்னர் அவருடைய கன்னத்தில் பச்சென்று முத்தம் ஒன்றை பதித்தான்.
தாத்தாவும் பேரனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
உடனே மலர்விழி,
“மிஸ்! நா எய்தினது கரெட்டா?” என்று கேட்டாள்.
கவின் தன் அன்னை எழுதிய காகிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு,
“குத் பாய்!” என்று கூறினான்.
மலர்விழிக்கு வாய் கொள்ளாத சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு மகனின் விளையாட்டை ரசித்தாள்.
கவின் தன் அன்னையின் உள்ளங்கையிலும் குட்டியாகக் கிறுக்கி விட்டு அவளுடைய கன்னத்திலும் முத்தம் பதித்தான்.
“மிஸ்! என்னுது?” என்றான் கதிர்.
கவின் தன் அப்பாவின் காகிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு,
“கதீ! நீ தப்பு தப்பா எய்திக்க.. கம் ஹியா!” என்றான்.
மகன் சொல்வதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் கதிர்.
“கதீ! டாப் லாஃபி (stop laughing)! கம் ஹிய!” என்று கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, கதிருக்கு மேலும் சிரிப்பு வந்தது.
“கதீ!” என்று அவனருகில் வந்த கவின், “ஹூம்..!” என்று பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு, மீண்டுமொரு முறை தன் துப்பட்டாவை சரி கொள்ளும் பாவனையை செய்து தன் கோபம் தணிந்தது போல காட்டிக் கொண்டு,
“கதீ! நீ குத் பாய்ல்ல.. சமத்தா எய்தினா நா ஒன்கு நெண்டு ஸ்தா (ரெண்டு star) போதுவேன்.. ஓகேயா?!” என்று கொஞ்சிவிட்டு தந்தையின் கையைப் பிடித்து காகிதத்தில் கிறுக்கினான்.
“இப்பிதான் எய்தனும். புஞ்சிதா கதீ?” என்று கேட்டான்.
கதிர் என்ன பதில் சொல்ல வேண்டும் புரியாமல் விழிக்க, மலர்விழி, ‘புஞ்சிதுன்னு சொல்லுங்க’ என்று தன் மகனறியாமல் கணவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்.
கதிரும் ஒரு புன்னகையுடன் மகனைப் பார்த்து,
“ஓ! புஞ்சிது மிஸ்!” என்றான்.
“இப்ப நீயே எய்து கதீ!” என்று கவின் கூற கதிரும் தன் காகிதத்தில் கிறுக்கிக் காட்டினான்.
அதைப் பார்த்து விட்டு,
“குத் பாய்!” என்று தன் தந்தையைப் பார்த்துக் கூறிய கவின், தந்தையின் உள்ளங்கையிலும் குட்டியாகக் கிறுக்கிவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
கதிரும் தன் மகனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“மிஸ்! இது என்ன மிஸ்?” என்று தங்கள் உள்ளங்கையில் கவின் கிறுக்கியதைக் காட்டிக் கேட்டாள் மலர்விழி.
“இதா ஸ்தா! நீங்க மூண் பேம் (பேரும்) சமத்தா எய்திகீங்க.. தெய்லி இதே மாதி எய்தினா நா தெய்லி ஸ்தா போத்வேன்..” என்று கூறினான்.
மூவரும்,
“ஹை! ஜாலி! ஜாலி!” என்று கைதட்டி சிரித்தனர். கவினும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.
“உங்க மிஸ் இப்டிதான் ஒனக்கு டெய்லியும் கையில ஸ்டார் போடுவாங்களாடா செல்லம்?” என்று தாத்தா கேட்க,
“ம்.. எங்க ஜாஸ்மின் மிஸ் இப்திதான் தெய்லி என்கு ரக்சித் அப்பம் (அப்றம்) நேகா எல்லாக்கும் ஸ்தா போதுவாங்க.. முத்தம் குப்பாங்க (குடுப்பாங்க)..” என்ற கவின் தொடர்ந்தான்.
“அன்னிக்கு எல்லாம் அய்தோம்ல.. அன்னிக்கு மிஸ் எல்லாக்கும் சாக்கி குத்தாங்க.. அப்பம் எல்லாக்கும் பாத்து பாதி (பாட்டு பாடி) தீவில தாம் அன் ஜெயி (tv ல tom & jerry) காட்டூன் போத்தாங்க.. அயாம இந்தா (இருந்தா) முத்தம் தவ்வேன்னு சொன்னாங்க.. நா அப்பம் நேகா ஷாமா எல்லாம் அயல.. ஒதனே முத்தம் குத்தாங்க.. தெய்லி ஷூல் (school) போன ஒதனே முத்தம் குப்பாங்க (குடுப்பாங்க)..” கவின் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனான்.
பெரியவர்கள் மூவரும் வியந்து போய் விழி விரியக் கேட்டிருந்தனர்.
பள்ளியில் நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருந்த கவின் சட்டென்று எழுந்து நின்று கொண்டு,
“ஆல் ஆஃப் யூ கோ அன் பே!” என்றான்.
மலர்விழி அவன் சொல்வது புரியாமல் விழிக்க, அவளுடைய மாமனார்,
“அப்தீன்னா என்ன மிஸ்?” என்று கேட்டார்.
“ஐயோ தாத்தா! ஒன்கு ஒன்னுமே தெல்ல.. கோ அன் பே – ன்னா போய் வெலாதுன்னு சொன்னேன்.. எல்லாம் போய் கேம்ஸ் வெலாதுங்க..” என்றான்.
“என்ன கேம்ஸ் மிஸ்?” என்றான் கதிர்.
“பால் வெலாதுங்க.. அப்பம் (அப்புறம்) சிங் (ஊஞ்சல் / swing), சைத் (சறுக்க மரம் / slide).. எல்லாம் வெலாதாம் (விளையாடலாம்)..” என்ற கவின் தன் அன்னை, தந்தை மற்றும் தாத்தாவின் கை பிடித்து வீட்டு வாசலுக்கு அழைத்துப் போனான்.
“எங்க ஷூல்ல சிங் சைத் எல்லாம் இக்கில்லம்மா (இருக்கில்லம்மா).. அதுல வெலாவேன் (விளையாடுவேன்)..”
“அப்டியா? சமத்து குட்டி!” என்றாள் மலர்விழி.
கவின் கூறிக் கொண்டிருக்கும்போது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் கவினை விளையாட அழைக்க வந்தனர்.
“ம்மா! நா வெலாத போதேன்..” என்று கூறிக் கொண்டே தன் கழுத்திலிருந்த துப்பட்டாவைக் கழற்றி தன் அன்னையிடம் கொடுத்துவிட்டு ஓடினான் கவின்.
“இப்பதான் நிம்மதியா இருக்கு மாமா!” என்றாள் மலர்விழி.
“ஆமாம்ப்பா!” என்றான் கதிர்.
“அவனுக்கு லேசா தயக்கம் இருந்திருக்கு.. அவனை அவன் போக்கிலயே போய்தான் பேச வெக்க முடிஞ்சது..” என்றார் பெரியவர்.
“அந்த துப்பட்டாவ எப்டி இழுத்து இழுத்து விட்டுக்கறான் பாத்தியா?” என்று சிரித்தான் கதிர்.
“அவங்க ஜாஸ்மின் மிஸ் இப்டிதான் பேசும் போது துப்பட்டாவ இழுத்து விட்டுக்குவாங்க.. அத அப்டியே அப்சர்வ் பண்ணிருக்கான் பாருங்களேன்..” என்றாள் மலர்.
“ஆமாம்மா! நீ சொல்ற மாதிரி அவன் நல்லா கவனிக்கறான்.. இப்பலேர்ந்தே அவன் தன்னை சுத்தி நடக்கறத.. எல்லாரும் பேசறத.. நல்லா கவனிக்கறான்..” என்றார் ஏகாம்பரம்.
“ஆமாம்ப்பா!” என்று அவர் கூறியதை ஆமோதித்தான் கதிர்.
“டேய் கதிர்.. நீ கேக்கற மாதிரி இவனுக்கு நாம உக்கார வெச்சு சொல்லிக் குடுக்கறது இவன் மண்டையில ஏறாது..” என்றார் ஏகாம்பரம்.
“புரியுதுப்பா!” என்று கூறிய கதிர் மனைவியைப் பார்த்து,
“சாரி மலர்!” என்று மனதார மன்னிப்பும் கேட்டான்.
மலர்விழி அவனைப் பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள்.
“கதிர்! குழந்தைகளுக்கு நாம உக்கார வெச்சி நல்லது சொல்லிக் குடுக்கறத விட நம்ம நடத்தையில நல்லது சொல்லி குடுத்தா கப்புன்னு பிடிச்சுக்குவாங்க.. அது அப்டியே பசுமரத்தாணி மாதிரி அவங்க மனசில பதியும்.. காலத்துக்கும் அழியாது.. புரியும்னு நெனக்கிறேன்..” என்றார் ஏகாம்பரம்.
“புரிஞ்சிகிட்டேன்ப்பா! இனிமே உங்க மருமககிட்ட சண்டை போட மாட்டேன்..” என்றான் கதிர்.
“ஏமாம்மம்..” என்று தன் பெயரை தன் பேரன் கூப்பிட்டது போல அவனுடைய மழலை மொழியிலேயே கூறிப் பார்த்து மகிழ்ந்தார் தாத்தா.
“குட் பாய்ன்னு அவங்க மிஸ் சொன்னத அப்டியே சொல்றான்.. கேர்ள்ஸ பாத்து குட் கேர்ள்ன்னு சொல்லணும்னு இன்னும் கத்துக்கல போலிருக்கு..” என்றாள் மலர்.
“குத் பாய்!” என்று மனைவியைப் பார்த்து சொல்லிச் சிரித்தான் கதிர்.
“கதீ! டாப் லாஃபீ!” என்று மலர் கவின் கூறியது போல தன் கணவனைப் பார்த்துக் கூறிவிட்டு மாமனாரின் கையில் ஹைஃபை அடித்துக் கொண்டு சிரிக்க, கதிர் அவளைப் பார்த்து முறைக்க முயன்று தோற்றுப் போய் அவர்களுடன் இணைந்து சிரித்தான்.
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.