“மகிழ்ச்சி.எஃப்.எம் ல் பத்து வயசுக்குள் இருக்கும் குழந்தைங்களை கதை சொல்லச் சொல்லி வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிருக்காங்க. போட்டியாம். எனக்கு மீட்டிங் இருக்கு. சாயந்திரம் நான் வரதுக்குள்ள சூர்யாவை தயார் பண்ணி வை. வந்து வீடியோ எடுத்திடலாம்” என்று சொல்லிவிட்டு ரகு அலுவலகம் சென்றுவிட்டான். கமலிக்குதான் தலைவலி.

            சூர்யாவுக்கு பத்து வயது, பள்ளி விடுமுறை. அவனை கவனிக்க வேண்டும். சமைத்து, வீடு ஒழுங்கு செய்து, துணி துவைத்து, பாத்திரம் கழுவி அப்பாடா என்று உட்கார்ந்து அவனை தயார் செய்யவேண்டும். என்ன கதை சொல்லச்சொல்லலாம் என்று கமலியின் மனம் முழுக்க யோசனையாக இருந்தது. வேலைகளை முடித்து உட்கார்ந்து சூர்யாவை கூப்பிட்டாள்.

“சூர்யா, காக்கா வடை திருடும் கடை இருக்கு. அதை சொல்லலாமா?” என்றாள்.

“வேணாம்மா, அது எல்லாருக்கும் தெரியும்…வேற சொல்லலாம்”

“இல்லடா, அதிலேயே ஊமை காக்கா, கூட புத்திசாலி நரி பாட்டிக்கிட்ட போய் ஊமையா நடிக்கிற மாதிரி ஒண்ணு தயார் பன்ணிடுறேன். புதுசா சொல்லலாம்” என்றாள் கமலி. ஏதோ இதழில் படித்த ஞாபகம் வந்தது.

“சரிம்மா” என்று சொல்லி சூர்யாவும் ஆர்வம் காட்ட, சொல்ல ஆரம்பித்தாள். நல்ல இடைஞ்சலாக நடுவில் வந்து உட்கார்ந்தான் சின்ன வாலு விஷால். அவனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது.

“ம்மா… நானும்..நானும் கதை சொல்லுவேன்” என்று கத்தினான் விஷால்.

“நீ அப்பா வந்ததும் சொல்லு. இப்ப அண்ணன் சொல்லட்டும்” என்று சொல்லி அவனை அடக்கி வைத்துவிட்டு கதையை ஆரம்பித்தாள். பாட்டி வடை சுடும் கதைதான். காகம் நிஜமாகவே ஊமை என்பதால் பாட்டி பரிதாபப்பட்டு அதற்கு வடை கொடுத்தார். அதை கவனித்த நரி பாட்டியிடம் போய் ‘நான் ஊமை எனக்கும் வடை குடுங்க’ என்று கேட்க, பாட்டி சிரித்துக்கொண்டே ‘உனக்கு காதும் கேட்காதுதானே’ என்று கேட்க, அதற்கும் அந்த நரி ‘ஆமாம் எனக்கு காதும் கேட்காது’ என்று சொல்ல… இப்படி போனது கதை. கமலி சொல்வதை எல்லாம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டேயிருந்தான் விஷால்.

kutti story
படம்: அப்புசிவா

ரகு வந்ததும் செல்லில் கேமராவை தயார் செய்து கொண்டு சூர்யாவை கூப்பிட, அவனுக்கு முன்னால் விஷால் வந்து உட்கார்ந்து அடம் பண்ண ஆரம்பித்தான். அவனை அடக்கவே முடியவில்லை.

“கமலி, இவனுக்கும் எதாவது சொல்ல வேண்டியதுதானே” என்றான் ரகு.

“விளையாடறீங்களா, பெரியவனுக்கே பேச வரலை… இதில் சின்னதை எப்படி நான் தேற்ற” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே விஷால் “எனக்கு தெரியும்…நானே சொல்லுவேன்..சொல்லுவேன்” என்று கத்த ஆரம்பித்தான். அவனை கண்டித்து கமலி சத்தம் போட, கமலியை அடக்கிய ரகு தன் செல் கேமராவை ஆன் செய்து சூர்யாவை சொல்லச்சொல்லி கமலியை எடுக்கச்சொன்னான். கமலியின் செல்லை ஆன் செய்துகொண்டு ஹாலின் வெளியே விஷாலை கூட்டிக்கொண்டு போய் அவன் சொல்லும் கதையை படம் பிடிக்க ஆரம்பித்தான்.

“சொல்லு குட்டிப்பையா, உன் கதையை” என்று சொல்ல விஷால் ஆரம்பித்தான்.

“வந்து ஒரு பாட்டி… அவங்க நல்ல பாட்டி, அவங்க சாக்லேட் செய்வாங்க…”

சொல்லிவிட்டு ரகுவை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான். ”எனக்கு ஒரு சாக்லேட் தந்தாதான் கதை சொல்லுவேன்” என்று மழலையாக சொல்லிவிட்டு அவனே எழுந்து ஓடி உள்ளிருந்து ஒரு சாக்லேட் எடுத்து பிரித்து வாயில் போட்டபடி மறுபடி சொல்ல ஆரம்பித்தான். அனைத்தையும் பதிவு செய்தான் ரகு. அனுப்பப்போவதில்லை என்பதால் எல்லாவற்றையும் எடுத்தான்.

“அன்ழ்ந்த பாட்லி…” சாக்லேட் வாயில் கரைய “அந்த பாட்டி, நெறயா சாக்லேட் செய்வாங்க… கலர் கலரா…அப்ப ஒரு குருவியும் காக்காவும் வந்து அள்ளிக்கிச்சு…” என்று விதவிதமாக சொல்ல ஆரம்பித்தான் விஷால். அவன் கதையில் குருவி செல்லில் பாட்டு கேட்டது. பாட்டி கிரிக்கெட் விளையாடினார். நரியும் சிங்கமும் நீச்சல் அடித்தன. ஒர் கொசு வந்து புது டிரஸ் கேட்டு அடம் பிடித்தது. ஆரம்பம் என்று ஒன்று சொல்லிவிட்டு கதை எங்கெங்கோ போனது. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தூக்கம் வருகிறது என்று படுத்துவிட்டான் விஷால்.

            சூர்யாவை பதிவு செய்த வீடியோவை மெயில் பன்ணிவிட்டு, அப்பாடா என்று உட்கார்ந்தான் ரகு.

            ஒரு மாதம் ஆயிற்று. செல்லுக்கு ரிசல்ட் வந்த்து சூர்யாவுக்கு ஆறுதல் பரிசு. மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்து கமலியிடமும், சூர்யாவிடமும் பகிர்ந்துகொண்டான்.

“அவ்ளோதானா” என்றாள் கமலி.

“வேறென்ன?” என்று கேள்வியாக பார்த்தான் ரகு. சூர்யாவும் கமலியும் அவர்களுக்குள் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அங்கே ஓடிவந்த விஷால் “அப்பா எனக்கு பரிசு குடுத்திருக்காங்களே” என்று கத்த புரியாமல் பார்த்தான் ரகு.

“என் செல்லில் விஷால் கதை சொன்னது இருந்ததா… அதை ஏன் சும்மா விடுவானேன்னு நானும் அனுப்பினேன். எல்லாரும் ட்ரெய்னிங் எடுத்து மனப்பாடம் பண்ணி கதை சொல்லியிருக்க, உங்க சின்ன வாலு அவனா கற்பனை பன்ணி அழகா சொல்லியிருக்கான்னு  முதல் பரிசுக்கு செலக்ட் பண்ணிட்டாங்க… எனக்கு மெசேஜ் வந்ததே…” என்று உற்சாகமாக சொல்ல ரகுவும் ஆச்சரியமாக விஷாலை தூக்கிக்கொண்டு அவர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொண்டான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments