ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குரங்கு கபிஷ் வசித்து வந்தது. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், சிறிய விலங்குகளைச் சீண்டுவதும் என்று எப்போதும் தான் இருக்கும் இடத்தைப் பரபரப்பாகவும் கலகலப்பாகவும் வைத்துக் கொள்வதில் கபிஷுக்கு நிகர் கபிஷ் தான்.

ஆனால் பெரியவர்கள் சொல்லிச் சொல்லித் தன்னுடைய குறும்புத்தனத்தைக் குறைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தது கபிஷ்.

ஒருமுறை காட்டுக்குள் வந்த ஒரு கழைக்கூத்தாடிக் குழுவைச் சேர்ந்தவர்கள் கூடாரம் போட்டுத் தங்கியிருந்தார்கள். தங்களிடம் இருந்த ஒரு பழைய டமாரத்தை வேண்டாமென்று காட்டிலேயே விட்டு விட்டுப் போனார்கள். அந்த டமாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திரிந்தார் நம்முடைய கபிஷார்.

ஒரு பெரிய குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு டமாரத்தில் ஓங்கி ஓங்கி அடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த பின்னரும் கபிஷுக்கு ஆர்வம் ஓயவில்லை. பெரிய கல்லை எடுத்து ஓங்கி அடித்து வித்தியாசமான சத்தம் வருகிறதா என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது கபிஷ்.

” ஐயோ , வேண்டாம் போதும் போதும் நிறுத்துங்க அண்ணா! ரொம்ப வலிக்குது” என்று அழ ஆரம்பித்த டமாரத்தை வியப்புடன் பார்த்தது கபிஷ்.

” அட,  உனக்குப் பேச வருமா? ” என்றது கபிஷ்.

” பேச வரும் அண்ணா. ஆனா இந்த மனுஷங்க கூட இருக்கும் போது பேசவே முடியலை. பேசியிருந்தாலும் நான் பேசினது அவங்களுக்குப் புரிஞ்சிருக்காது. நிறைய அவங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடாத் தேஞ்சுட்டேன். இந்தக் காட்டுக்கு வந்தப்புறம் தான் எனக்கே ஓய்வு கெடைச்சிருக்குன்னு சந்தோஷப்பட்டேன். நீங்க என்னடான்னா, அதையும் கெடுத்து என்னைப் போட்டுத் தாறுமாறாக அடிக்கறீங்களே? “

” அச்சச்சோ, எனக்குத் தெரியாமப் போச்சு போ! இனிமேல் அடிக்க மாட்டேன். வா, நாம ரெண்டு பேரும் விளையாடலாம் ” என்று சொல்லித் தன்னுடன் அழைத்துப் போனது கபிஷ்.

monkey drum
படம்: அப்புசிவா

குரங்கும், டமாரமும் அன்றில் இருந்து இணைபிரியா நண்பர்கள் ஆனார்கள். இவ்வளவு நாட்களாகப் பேசாமல் இருந்த டமாரம் காட்டுக்கு வந்து பேச ஆரம்பித்ததால் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தது.

” அண்ணா, இது என்ன? புது மாதிரி மரமா இருக்கு? “

” இந்தப் பறவை ஏன் இப்படி ராத்திரி பூராக் கத்துது? “

” இந்தக் காக்காவோட குரல் மட்டும் ஏன் இவ்வளவு கர்ணகடூரமா இருக்கு? “

என்று ஆரம்பித்து ஆயிரத்தெட்டு கேள்விகள். கபிஷ் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அடுத்த கேள்வி பிறக்கும். உருண்டு உருண்டு வரும்போது சத்தம் போட்டுக் கொண்டே வந்ததால் கபிஷின் பொறுமையே போக ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கபிஷுக்கு எரிச்சல் வர ஆரம்பித்தது.

” என்ன நீ? எப்பப் பாரு தொண தொணன்னு எதையாவது கேட்டுட்டே இருக்கயே? வாய் வலிக்கலையா உனக்கு? ” என்று சள்ளு புள்ளென்று எரிந்து விழுந்தது கபிஷ். ஒரு நாள் கோபத்துடன் டமாரத்தை, காட்டாற்றில் தூக்கியெறிந்து விட்டது.

தண்ணீரில் ஊறிப்போன டமாரத்தால் பேசவே முடியவில்லை. தொண்டை கட்டிக் கொண்டது. கஷ்டப்பட்டு நதியில் நீந்தி மீன்களின் உதவியுடன் கரையேறியது. அழுது அழுது ஓய்ந்த டமாரம், ஒரு மரத்தடியில் கிடந்தது. குளிரில் நடுங்கிய டமாரத்தின் உடலில் வெயில் படத் தொடங்கியதும், இதமாக இருந்தது. தனக்குப் பிரியமான கபிஷ் அண்ணனை நினைத்து டமாரத்துக்கு வருத்தமாக இருந்தது.

கபிஷுக்கும் டமாரத்தைப் பிரிந்ததில் இருந்து மனதே சரியில்லை. டமாரத்தைக் கோபத்துடன் தூக்கி எறிந்தது தப்பு என்று மனதுக்குள் தோன்றியது.

‘ பாவம், ரொம்ப நாளா யார் கிட்டயும் பேச முடியாமல் தவிச்சுட்டு இருந்திருக்கான். அதுனால தானே என்னிடம் பேசினான்? பாசத்தோட அண்ணா, அண்ணான்னு உருகினவனை நான் அடிச்சுத் துரத்திட்டேனே இப்படி? ” என்று எண்ணி மாய்ந்து போனது கபிஷ்.

ஒரு நாள் இரவு நேரத்தில் மரத்தின் கிளை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த கபிஷ் திடீரென விழித்துக் கொண்டது. ஏதோ புகையும் நாற்றமும், வெளிச்சமும் சற்றுத் தொலைவில் தெரிந்தது. வெப்பமாகவும் உணர்ந்தது கபிஷ். மரத்தில் இருந்து இறங்கி ஓடிப்போய்ப் பார்த்த போது, காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததை கவனித்தது.

” ஐயோ, இந்த விஷயத்தை எல்லார் கிட்டயும் சொல்லி, இந்தக் காட்டில் இருக்கற விலங்குகளையெல்லாம் உடனே காப்பாத்தணுமே? டமாரம் மட்டும் இந்த சமயத்தில் இருந்திருந்தா சௌகரியமாக இருந்திருக்கும்? இப்போ என்ன செய்யறது? ” என்று சுத்தமாகப் புலம்பியது கபிஷ்.

” அண்ணா, அண்ணா ” என்று அருகில் ஒரு புதரில் இருந்து சத்தம் வரப் பார்த்தது கபிஷ். மெல்ல அந்தப் புதரில் இருந்து வெளியே வந்தது டமாரம்.

” இங்கயா இருந்தே நீ? ” ஆச்சரியத்துடன் கபிஷ் கேட்க,

” ஆமாம் அண்ணா, கஷ்டப்பட்டு ஆத்தை விட்டு வெளியே வந்து வெயிலில் நின்னு உடம்பில் இருந்த ஈரத்தை உலர வச்சேன். உங்களைப் பாக்காம இருக்க முடியலை. உங்க எதிரில வந்தா ரொம்பக் கோவிச்சுக்குவீங்களோன்னு பயமா இருந்துச்சு. தினமும் இங்கே வந்து ஒளிஞ்சு நின்னு உங்களைப் பாத்துட்டே இருந்தேன். இன்னமும் கோபம் போலையா அண்ணா? ” என்று மென்மையாக டமாரம் சொல்லி முடித்தது.

” கோபம் எல்லாம் இல்லை. இதெல்லாம் அப்புறம் நிதானமாப் பேசிக்கலாம். இப்போ முக்கியமான வேலை இருக்கு. உன்னைக் கொஞ்சம் நல்லா அடிக்கப் போறேன். இன்னைக்கு ஒரு நாளைக்குப் பொறுத்துக்கோ” என்று சொல்லி விட்டு, ஒரு குச்சியை எடுத்து டமாரத்தை ஓங்கி அடிக்கத் தொடங்கிய கபிஷ், காட்டுத்தீ பரவும் தகவலைக் காடு முழுவதும் பரப்பியது. எல்லா விலங்குகளும் விழித்துக் கொண்டன. சின்னச் சின்னக் குட்டிகளையும், வயதானவர்களையும் பத்திரமான இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

யானைகள் தங்களுடைய தும்பிக்கையால் நீரை உறிஞ்சி வந்து தீயில் பீய்ச்சி அடித்தன. மற்ற விலங்குகளும் ஓடியாடி உதவி செய்தன. கொஞ்ச நேரத்தில் தீயும் ஒருவழியாகக் கட்டுப்படுத்தப் பட்டது. காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும், கபிஷின் பொறுப்பான செயலைப் பாராட்டின. அதன் பிறகு டமாரமும், கபிஷும் மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் காட்டில் வாழ்ந்தன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments