சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
சிங்குச்சா சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
சிங்குச்சா சிங்குச்சா
மஞ்ச கலரு சிங்குச்சா
“என்ன பாட்டு பாடுற பீமா?” சிறகடித்து பறந்தபடி பூஞ்சிட்டுகள் வந்து அமர்ந்தன.
“இப்படி ஒரு பாட்டு கேட்டதில்லயா சிட்டூஸ்!”
“கேட்டுருக்கோமே!” கோரசாக சலசல என்ற பேச்சுக்களுக்கு நடுவில் பதில் வந்தது.
“இன்னைக்கு உங்களுக்கு எங்கே வண்ணங்கள் வேண்டாம்னு சொல்லப்போறேன்.”
“வண்ணங்கள் வேண்டாமா? என்ன பீமா இப்படி சொல்ற? எங்களுக்கு கலர்ஸ் னா ரொம்ப பிடிக்குமே!”
“சிகப்பு, மஞ்சள், பச்சை, பிங்க், ஆரஞ்சுன்னு பல வண்ணங்கள் உண்டு.
ஏழு வண்ணங்கள் கொண்டு இறைவன் வானில் தீட்டும் வானவில் அழகு;
காலையிலும் மாலையிலும் மணம் சேர்க்கும் பல வண்ண மலர்கள் அழகு!
உங்க ஓவியங்களை அழகாக்குற வண்ண பென்சில்கள் அழகு!
வண்ணங்கள் பிடிக்காத ஒருவர் உண்டா என்ன?உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் ஆடை வாங்கிக்கோங்க; பிடித்த வண்ணத்தில் பள்ளிப்பை வாங்கிக்கோங்க; பென்சில் டப்பாவையும் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் வாங்கிக்கோங்க!!
ஆனால் உண்ணும் உணவு!!
வண்ணங்களைத் தாங்கி வரும் உணவுக்கு, எப்போதுமே தலையை வலமும் இடமுமாய் ஆட்டி , “நோ’ சொல்லிடுங்க.”
‘ஏன்? அது எத்தனை அழகா இருக்கும் தெரியுமா!’ என்று ஒரு சிட்டு கேட்டது.
“உணவில் பச்சை, மஞ்சள், ஊதா வண்ணங்கள் எல்லாம் எப்படி வருதுன்னு தெரியுமா?”
“ம்கூம்.. தெரியாது.”
“நிறம்ஊட்டிகள். அவை நம்ம உணவில் கலக்கப்படுறதுனாலதான் உணவு கலர்கலரா இருக்கு”
“ஓஹோ.. அதனால் என்ன?”
“அந்த நிறம் ஊட்டிகள் பெரும்பாலும் செயற்கையான வேதிப்பொருள் கள்தான் .. அதாவது கெமிக்கல்ஸ்.”
“அந்த கெமிக்கல்ஸ் எல்லாம் கெட்டதா பீமா?” ஒரு சிட்டு சந்தேகமாய் கேட்டது.
“ஆமாம்.. அந்த நிறம் ஊட்டிகள் சாப்பிடுறதுனால குழந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம். குழந்தைகளுக்கு ADHD(ATTENTION DEFICIT AND HYPERACTIVE DISORDER) ங்கிற கவனமின்மை மற்றும் மிகைப்பட்ட இயக்கம் நோய் வர்றதுக்கு இந்த நிறம் ஊட்டிகளில் இருக்கிற வேதிப்பொருள்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றாங்க.”
“ADHD- அப்படின்னா என்ன பீமா?”
“அப்படின்னா…. எப்படி சொல்றது?” யோசித்த பீமா ” குழந்தைகள் கவனமில்லாமல் அங்கேயும் இங்கேயும் ஓடுவது நார்மலான ஒன்றுதான். ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்படும்போது குழந்தைகளால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அவர்களுக்கு பிடித்த காரியத்தில் கூட கவனம் செலுத்த முடியாது. அதனால் எந்தவொரு காரியத்தையும் புதிதாக கற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள். அதீத இயக்கத்தினால் அவர்களால் சமூகத்தில் பொருந்துவது கடினமாக இருக்கும்”
“ஓ மை காட்!”
“இதற்கே கடவுளைக் கூப்பிட்டா எப்படி? இந்த வேதிப்பொருள் கள் கேன்சர் அதாவது புற்று நோய் உண்டாக்கக் கூடியவைன்னும் சொல்லி இருக்காங்க”
“அச்சோ.. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” ஒரு சிட்டுவின் சந்தேகம்.
“ஒரு ஜூஸ் ரொம்பவும் பச்சை கலர்ல இருந்ததா, அது என்ன வேதிப்பொருள்னு போய் நெட்ல பார்த்தேன். தெரிஞ்சிகிட்டேன். உனக்கும் இதைப்பற்றி முழுக்க தெரியனும்னா, தேடிப்பார்.. தெரிஞ்சிக்கலாம்.”
“ஆனா, எனக்கு கலர் கலரா உணவு இருந்தா ரொம்ப பிடிக்குமே!” ஒருசிட்டு சோகமாய் சொல்ல, பீமா, “அதனால் என்ன? இயற்கையிலேயே நிறமூட்டிகள் இருக்கும். கார்ட் சாறு எடுத்து போடுங்க.. குங்குமப்பூ போடலாம். பீட்ரூட் ஜூஸ் போடலாம். கொஞ்சம் சுவையும் மணமும் வேறு மாதிரி இருக்கும். அதுக்கு பழகிக்கிறது நல்லது.”
“ஓகே பீமா.. எங்க அம்மா கூட அப்படிதான் சொல்வாங்க.. நான்தான் வேணாம் சொல்லுவேன். இனிமே அப்படி வம்பு பண்ணாம ஆரோக்யமான உணவை எடுத்துக்கிறோம்.”
“நமக்கு விழிப்புணர்வு வந்துடுச்சின்னா, தயாரிக்கிறவங்களும் மாறுவாங்க. ஓகே சிட்டூஸ்.. ரொம்ப நல்லது! மாலை ஆகிடுச்சி.. உங்க கூட்டுக்கு கிளம்பலையா?”
“இதோ கிளம்பிட்டோம்! வர்றோம் பீமா! பை!” என்று சொல்லியபடி சிட்டுகள் சிறகடித்து பறக்க, மரத்தடியில் அமர்ந்திருந்த பீமா புன்னகையோடு பார்த்திருந்தார்.
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.