ஹாய் சிட்டூஸ்..
ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
100மிலி சோடா/பெப்சி/கோக்/பேன்டா
100மிலி தண்ணீர்
காற்று போகாத மூடி உள்ள இரண்டு கொள்கலன்(கன்டெய்னர்)
இரண்டு அவித்த முட்டைகள்
எப்படி செய்வது:
ஒரு கொள்கலனில் 100மிலி சோடா போன்ற திரவத்தை ஊற்றுங்கள். அதில் ஒருமுட்டையை வைங்க. அதன் மூடியால் இறுக்கமாக மூடி வைக்க.
இன்னொரு கொள்கலனில் தண்ணீர் ஊற்றி, மற்றொரு முட்டையை வைங்க. மூடி கொண்டு மூடி வைக்க.
ஆறு மணி நேரம் கழித்து இரண்டு முட்டைகளையும் வெளியே எடுங்க.
சோடாவில் இருந்த முட்டையை உடைத்தால், அதன் தோல் மெலிதாகி, எளிதாக உடையும்.
தண்ணீரில் இருந்த முட்டை இயல்பான பலத்தோடு இருக்கும்.
ஏன் இப்படி?
சோடா ஒரு அமில திரவம். முட்டையில் இருக்கும் கால்சியம் அமிலத்தில் கரைந்திட, முட்டை ஓடு பலகீனமாகி விடும்.
அதனால் என்ன?
நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.