கெட்ட சூனியக்காரிக்கு டாரத்தியைப் பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. டாரத்தியின் நெற்றியில் இருக்கும் மச்சத்தையும் அவளது கால்களில் இருந்த வெள்ளிக் காலணிகளையும் பார்த்தவுடன் அவளுக்கு பயம் வந்துவிட்டது. இவை இரண்டுக்கும் உள்ள சக்தி பற்றி கெட்ட சூனியக்காரிக்கு நன்றாகவே தெரியும்.
என்ன செய்வது என்று யோசித்தாள். ‘எனக்குத் தானே அவகிட்ட இருக்குற சக்திகளைப் பத்தி நல்லா தெரியும்.. ஆனா தன்கிட்ட இருக்குற சக்திகளைப் பத்தி அந்தப் பொண்ணுக்கே எதுவும் தெரியாதே.. அதனால இவளை எளிதா சமாளிச்சுடலாம்’ என்று கெட்ட சூனியக்காரிக்குத் தோன்றியது. டாரத்தியை அவளுடைய கடினமான வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லிப் பணித்தாள்.
தன் நண்பர்களை இழந்துவிட்ட சோகத்துடன் டாரத்தி கெட்ட சூனியக்காரியின் வீட்டைப் பெருக்கவும், பாத்திரங்களைக் கழுவவும் ஆரம்பித்தாள். அவளுடைய நண்பனான சிங்கத்தைக் குதிரை மாதிரி பழக்கி அதில் ஏறி சவாரி செய்ய விரும்பினாள் சூனியக்காரி. அதற்கு சிங்கம் ஒத்துழைக்காததால் சிங்கத்திற்கு சாப்பாடு எதுவும் கொடுக்கக் கூடாது என்று கோட்டையில் உள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டாள் சூனியக்காரி. ஆனால் யாருக்கும் தெரியாமல் டாரத்தி சிங்கத்திற்கு உணவளித்து வந்தாள்.
டாரத்தியிடம் இருந்த வெள்ளிக் காலணிகளை எப்படியாவது திருட வேண்டும் என்பது சூனியக்காரியின் திட்டம். டாரத்தி அதை எப்போதுமே கழற்றுவதில்லை. உறங்கும் பொழுதும் குளிக்கப் போகும் பொழுதும் மட்டுமே கழற்றினாள். ஆனால் கெட்ட சூனியக்காரிக்கு இந்த உலகிலேயே இருட்டு மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டு விஷயங்கள் தான் மிகுந்த பயத்தைத் தருபவை. தண்ணீர் பட்டால் அவள் முழுவதுமாக அழிந்து விடுவாள். அந்த உண்மை அவளுக்கு மட்டுமே தெரியும். இருட்டிற்குள் அவளால் போகவே முடியாது. அதனால் ரொம்ப யோசித்த சூனியக்காரி, டாரத்தி சமையல் கட்டில் வேலை செய்யும் போது எப்படியாவது அவளைக் கீழே விழ வைத்தால் செருப்புகள் கழன்று விடும் என்று திட்டமிட்டாள்.
கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு கயிற்றை டாரத்தி நடக்கும் இடத்தில் குறுக்காகக் கட்டி வைத்தாள் சூனியக்காரி. அவளது திட்டப்படியே டாரத்தி அதில் தவறி விழ, அவளுடைய ஒரு செருப்பு கழன்று போய் தூரத்தில் விழுந்தது. அதை ஓடிப் போய் எடுத்து வைத்துக் கொண்டாள் சூனியக்காரி. இன்னும் வெள்ளிக் காலணியின் மந்திர சக்தியைப் பற்றி அறியாத டாரத்தி, தன்னைக் கீழே தள்ளிவிட்டு விட்டாளே என்ற கோபத்தில் அருகில் இருந்த வாளித் தண்ணீரை எடுத்து சூனியக்காரியின் மேல் கொட்டி விட்டாள்.
அந்தோ பரிதாபம்! அவள் எதிர்பார்க்காத விதமாக ஓவென்று அலறிய சூனியக்காரி இப்படியே சுருங்கிப் போய் கொஞ்ச நேரத்திற்குள் காணாமலே போனாள். டாரத்தியால் நம்பவே முடியவில்லை. சூனியக்காரி அடிமையாகப் பிடித்து வைத்திருந்த எல்லா உயிரினங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி! டாரத்திக்கு நன்றி கூறி அனைத்தும் உயிரினங்களும் தங்கள் விடுதலையைக் கொண்டாடின. டாரத்தி விடுவித்தவர்களில் விங்க்கீஸ் என்றழைக்கப்படும் மந்திர சக்தி படைத்த உயிரினங்களும் உண்டு. அவர்களிடம் சென்ற டாரத்தி, ‘என்னோட நண்பர்களான தகர மனிதனையும் சோளக்கொல்லை பொம்மையையும் காப்பாற்ற முடியுமா?” என்று கேட்டாள்.
“நாங்க முயற்சி பண்ணிப் பார்க்கிறோம்” என்று சொன்ன விங்க்கீக்கள் தகர மனிதன் உடைந்து கிடந்த பாறைகளுக்கு அருகில் சென்றன. ஆங்காங்கே கிடந்த தகர மனிதனின் பகுதிகளை சேகரித்து மீண்டும் சூனியக்காரியின் கோட்டைக்கு கொண்டு வந்த விங்க்கீக்கள் மூன்று பகல்களும் மூன்று இரவுகளுமாக ஓய்விலாலாமல் தகர மனிதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அவர்களது திறமையாலும் உழைப்பாலும் தகர மனிதன் முழுவதுமாக மீண்டு வந்தான்.
டாரத்தி, டோட்டோ, சிங்கம் ஆகியோரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தகர மனிதன் சோளக்கொல்லை பொம்மையை நினைத்து வருத்தப்பட்டான். “நம்ம நண்பர்கள்ல அவன் மட்டும் இல்லை.. அவனும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று தகர மனிதன் சொல்ல, டாரத்தி மீண்டும் விங்க்கீக்களிடம் உதவி கேட்டாள். இப்போது குரங்குகள் சோளக்கொல்லை பொம்மையை பிய்த்துப் போட்டிருந்த இடத்திற்கு சென்ற விங்க்கீக்கள் வைக்கோல் கதிர்களை சேகரித்து சோளக் கொல்லை பொம்மையின் உடைகளுக்குள் நுழைத்தவுடன் அவனும் உயிர் பெற்று வந்து விட்டான்.
நண்பர்களுடன் இணைந்து அந்த கோட்டையில் சில நாட்கள் செலவழித்த டாரத்தி விங்க்கிக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, “நீங்களே இனிமே இந்த கோட்டையைப் பார்த்துக்கோங்க.. நாங்க ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்கப் போறோம். அவர் சொன்னதெல்லாம் நிறைவேற்றிட்டோம்.. இனிமேல் அவர் எங்களுக்கு உதவுவார்னு நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு விடை பெற்றாள் டாரத்தி. இதுவரை இவளுக்கு எதிராக செயல்பட்டு வந்த பறக்கும் குரங்குகள் படையும் அவளை வழியனுப்ப வந்தது. “இனிமேல் நாங்க உங்களோட சொல்லுக்குக் கட்டுப்பட்டவங்க. என்ன உதவி வேணும்னாலும் எங்களை மனசால நினைச்சுக்கிட்டு கூப்பிடுங்க, நாங்க உடனே வந்துடுவோம்” என்று அந்த பறக்கும் குரங்குகள் கூறின.
மீண்டும் அவர்கள் மரகத நகரத்திற்கு வந்து சேர்ந்தனர். கோட்டைக் காவலருக்கு இவர்களைப் பார்த்ததில் பெரிய ஆச்சரியம். மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றவர் அவர்களுக்கு மீண்டும் பச்சை நிறக் கண்ணாடிகளை அழைத்தார். அவர்களை வரவேற்க ஒரு பெரிய கூட்டம் அங்கே திரண்டது. டாரத்தி எப்படி கெட்ட சூனியக்காரியை சுருங்கி காணாமல் போகச் செய்தாள் என்பதைப் பற்றியே எல்லாரும் பெருமையாகப் பேசினார்கள். அரண்மனைக்கு அவர்கள் சென்று சேர்ந்த போது, “உங்களை நாளைக்கு பெரிய மந்திரவாதி சந்திப்பார். நீங்க ஓய்வெடுங்க” என்று காவலர்கள் கூறினார்கள்.
ஆனால் பல நாட்கள் காத்திருந்தும் பெரிய மந்திரவாதி அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் டாரத்திக்கும் அவளது நண்பர்களுக்கும் பயங்கர கோபம் வந்தது. “எங்களை நாளைக்கு சந்திக்கலைன்னா நான் சிறகு வைத்த குரங்குகளை வரவழைச்சுடுவேன்.. அதுங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.. அதுங்க பயங்கரமான மிருகங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி காவலரிடம் கொடுத்தனுப்பி விட்டாள் டாரத்தி. பெரிய மந்திரவாதி அவர்களை மறுநாள் கூப்பிட்டு அனுப்பினார். அங்கு அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!
தொடரும்
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.