சுட்டி டீவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த அகிலாவை அவள் அண்ணன் அருண் கூப்பிட்டான்.
“ஏய் ! அகிலா ! இங்க ஓடி வா ! வந்து பாருடி ! நம்ம செம்பருத்திச் செடி பூத்திருச்சு.”
அகிலாக்குட்டியும் செம்பருத்திப் பூவைப் பார்க்கத் தலை தெறிக்க ஓடினாள்.
சென்னைப் புறநகர் பகுதியில் இருந்த ஒன்றிரண்டு தனி வீடுகளில் அதுவும் ஒன்று. அருகில் உள்ள அரசுப் பள்ளியில் அருண் மற்றும் அகிலா படிக்கிறார்கள். அப்பா சரவணன் சொந்தமாக தையற்கடை நடத்தி வருகிறார்.
வாடகை வீடு தான் .பெரிய வீடாக இல்லாவிட்டாலும், கச்சிதமான வீடு. சுற்றுச்சுவரை ஒட்டி கொஞ்சம் மண் தளம் உண்டு. முன்புறம் பூச்செடிகள் , பக்கவாட்டில் ஒரு கொய்யா மரமும், சில வாழை மரங்களும் இருந்தன.
செம்பருத்தியும் கனகாம்பரமும் வைத்திருந்தார் அம்மா காயத்ரி.
இரண்டு நாட்களாகவே, பிள்ளைகள் அடிக்கொருமுறை செம்பருத்தி மொக்கு வைச்சுடுச்சு, மொக்கு பிரியது… என்று அனத்திக் கொண்டு இருந்தார்கள்.
இன்று பூ மலர்ந்தது. இருவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
“அம்மா, இந்த பூவையும் பொரியல் செய்துடுவியா?”
”பூவையெல்லாம் யாராவது பொரியல் செய்வாங்களா?”
“அம்மா, நீ தான போன வாரம் நம்ம வாழ மரத்துப் பூவில பொரியல் செஞ்ச ?”
அகிலாவின் கேள்விகளுக்கு அம்மாவால் விடை ஏதும் தர முடியவில்லை.
வாசலில், யாரோ, “அய்யா” என்று அழைத்தார்கள்.
தெருவில் மின்துறை சார்ந்த பணிகள் நடந்து கொண்டிருந்தன.
“அய்யா, உங்க வீட்டில இருக்கற கொய்யா மரத்தோட கிளைகள வெட்டணும்” என்றார் மின் உதவிப் பொறியாளர்.
“என்னாச்சு அய்யா, ஏதாவது பிரச்சினையா ?”அப்பா சரவணன்.
“மழைக் காலம் வரப் போகுது இல்லீங்களா? பெருமழை, புயல், சூறாவளி சமயங்களில மரக்கிளைகள் மின்கம்பங்களிலோ மின் தடத்திலோ சரிந்து விழலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , ரொம்ப சாய்ந்து இருக்கக் கூடிய மரக்கிகிளைகளை ட்ரிம் பண்ணுகிறோம்”
”நல்லது தானே ! விபத்துகளைத் தடுக்கலாம்.” என்றபடி, அவர்களுக்கு உதவச் சென்றார் சரவணன்.
அகிலாவுக்கு கொய்யா மரத்தை வெட்டப் போகிறார்கள் என்பது தெரிந்ததும், “நோ, நோ.. நோ மீன்ஸ் நோ” என்று கத்தினாள்.
அவர்கள் கோடாரியுடன் மரத்தை அணுகிய போது, “அங்கிள், வெட்டாதீங்க , எங்க டீச்சர் என்ன சொன்னாங்க தெரியுமா?”
“இல்லம்மா, மரத்தை வெட்டல்ல… சும்மா, கிளையை மட்டும் தான்…”
சரவணன் சொல்லியதை அகிலா காதில் வாங்கவே இல்லை.
“நமக்கு தண்ணி வேண்டாமா ? மரங்கள் தான் மழை தருது. அதனால மரங்களை வெட்டக் கூடாது.” என அலறினாள்.
அருண் அவன் பங்குக்கு, “அப்பா, மரங்களும் செடிகளும் உயிரி தான். அதை அழிக்கலாமா ?” என்றான்.
சரவணன் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று லாலி பாப் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார் சரவணன்.
“அருண், அகிலா, நாம மரங்களை வெட்டக் கூடாது. மரங்கள் ரொம்ப முக்கியம். நீங்க சொல்றது ரொம்ப சரி. அதே சமயம் தொழில் வளர்ச்சி, மக்கள் பாதுகாப்பு இப்படி சில சமயம் கிளைகளையோ அல்லது முழு மரத்தையோ கூட வெட்டுவது அவசியமாகுது.”
“மரத்தை வெட்டாம வேலைகளைச் செய்ய முடியாதா ?” அருண்.
“கண்டிப்பா மரத்தை வெட்டாத ஐடியா தான் முதல்ல பார்ப்பாங்க. “சரவணன்.
“அப்பா, எங்க டீச்சர் நாம ஒவ்வொருவரும் ஆளுக்கோரு மரம் வைக்கணும் ,அப்படின்னு சொன்னாங்க” அகிலா.
“ஆமாம் அகிலா, இப்ப கொய்யா மரக்கிளை வெட்டுறாங்க, கொஞ்சம் இடைஞ்சலா இருக்கறதால. நம்மள மரம் வைக்கக் கூடாதுன்னு சொல்லலயே “சரவணன்.
“ஐடியா ! அப்பா, நாம இன்னொரு மரம் வைக்கலாமா?”
”கண்டிப்பா, நம்ம வீட்டு பின்பக்கம் நாம மரம் வைக்கறோம். இன்னிக்கு இவ்னிங் , மரக்கன்று வாங்கிடலாம்” சரவணன்.
பிள்ளைகள் முகத்தில் ஒரு தெளிவு.
மீண்டும் உற்சாகம் .
“அம்மா, இன்னிக்கி, செம்பருத்திப்பூ பாயசம் செய்யறயாமா?” அகிலா குதித்துக் கொண்டே அம்மாவிடம் போகிறாள்.
“நோ, நோ, இன்னிக்கி, கொய்யா துவையல் தான்” என்று அருண் அவள் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓடுகிறான்.
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
தமிழில் ஆர்வமும், தேர்ச்சியும் பெற்றுள்ள கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, சொல்வனம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் எனது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.