வானதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தாள். அனிச்சைச் செயலாக அவளுடைய கண்கள் குழந்தைகளைத் தேடின. மணி மணியாக இரண்டு குழந்தைகள். நான்கு வயது பவன், இரண்டு வயது பாவனா.
” அம்மா, அம்மா, குழந்தைங்க எங்கம்மா?
“
” தெரியலை வானதி, சாயந்திரம் சீக்கிரமாவே விளையாடப் போனாங்க. இன்னும் காணோம். பவன் இன்னும் ஹோம்வொர்க் வேற பண்ணலை. நானே நீ வந்ததும் தான் போய்த் தேடணும்னு காத்துக்கிட்டு இருந்தேன்” என்றாள் அம்மா கவலையுடன்.
” அப்படியா, விளையாடற சுவாரஸ்யத்துல நேரம் போனது தெரிஞ்சிருக்காது. நானே போய்த் தேடறேன்” என்று உடனே கிளம்பிப் போனாள் வானதி.
அம்மாவின் வயதுக்கு நாள் முழுவதும் குழந்தைகளை மேய்ப்பதே அதிகம். பாவம், அவளுக்கு உதவுவதற்காகத் தான் இங்கே வானதியுடன் இருக்கிறாள். அப்பா இறந்த பிறகு தான் பெற்ற குழந்தைகளுக்கு உதவி நேரத்தைப் போக்குகிறாள் அம்மா. வானதியின் கணவனும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அம்மாவின் உதவி வானதிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.
தெருவில் இறங்கி அருகிலிருந்த பூங்காவில் தேடினாள். குழந்தைகள் இல்லை. பூங்காவை விட்டு வெளியேறி கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மனதில் பயப்பந்து சுருட்டி உதைத்தது. அலைபாயும் மனத்தை அடக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரத்திலேயே எதிரில் பவனும், பாவனாவும் கண்ணில் பட்டு விட்டார்கள்.
‘ அச்சச்சோ, என்ன இது? இரண்டு பேரோட டிரஸ் என்ன ஆச்சு? டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு என்ன அப்படி விளையாட்டு! இப்போக் கண்டிக்கலைன்னா கெட்டுக்
குட்டிச்சுவராயிடுவாங்க! ‘ என்று எண்ணியபடி, கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து முதுகுக்குப் பின்னே மறைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்து முறைத்தாள்.
” எங்கடா போனே பவன்? வெளியே போனால் நேரத்துக்கு வீடு திரும்பணும்னு சொல்லிருக்கேனா இல்லையா? பாட்டி பாவம் எவ்வளவு கவலைப்பறாங்க? தங்கச்சிப் பாப்பாவையும் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கே! என்ன இது பொறுப்பில்லாத காரியம் ? ” என்று கோபத்துடன் கத்தினாள் பாவனா.
” அது வந்தும்மா, நம்ம பார்க் வாசலில கொய்யாப்பழம் விக்கற பாட்டி இல்லை, அவங்க குடிசை வீடு நேத்துப் பெஞ்ச மழையில இடிஞ்சு விழுந்து தரைமட்டமாயிடுச்சாம். நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து அதை வேடிக்கை பாக்கப் போனமா? அவங்களுக்கு சாமான்களை எல்லாம் பொறுக்கிக் குடுத்து ஹெல்ப் பண்ணினோமா? அவங்க வீட்டுல இருந்த குழந்தைங்களுக்குப் பாவம் டிரஸ்ஸே இல்லைம்மா. குளிரில நடுங்கிட்டிருந்தாங்க. நான் என் சட்டையைக் கழட்டிக் கொடுத்துட்டேன். என் கிட்ட தான் அலமாரில நிறைய டிரஸ் இருக்கே? என்னைப் பாத்துப் பாப்பாவும் தன்னோட கவுனைக் கழட்டிக் கொடுத்துட்டாம்மா. ஸாரிம்மா, நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே? ” என்று சொன்ன மகனை வானதி பார்த்த பார்வையில் பெருமை பொங்கியது.
பேச மறந்து நின்ற அம்மாவைப் பார்த்து பவன் பயந்து போனான்.
” நாங்க பண்ணினது தப்பாம்மா? “
தன் கையில் இருந்த குச்சியைத் தூக்கி எறிந்த வானதி, குழந்தைகளை வாரி அணைத்துக் கண்ணீர் பெருக்கினாள். அன்பு உள்ளங்களின் சங்கமம் அது.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.