ஒரு காட்டில் ஒரு சிங்கம் காட்டிற்கு ராஜாவாக வாழ்ந்து வந்தது. அது காட்டிலிருக்கும் எல்லா விலங்குகளையும் துன்புறுத்திக்கொண்டிருக்கும். விலங்குகளை வேட்டையாடும். விலங்குகளின் பாதிக் கூட்டங்களை அழித்துவிட்டது. இதையெல்லாம் தெரிந்த ஒரு முயல் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே ஒரு மரத்தடியில் படுத்தபடி கேரட்டைக் கடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அதற்கு ஒரு சிறப்பான யோசனை வந்தது.
அதன்படி, மறுநாள் அந்த முயல் சிங்கத்தை பார்க்கப் போனது. முயில் வருவதை பார்த்த அந்த சிங்கம்,
“ஏ முயலே! எதற்கு வந்தாய்? எனக்கு உணவாகவா?” என்று கேட்டது.
அதற்கு அந்த முயல்,
“இல்லை இல்லை. நான் எதற்கு வந்தேன் என்றால் உன்னைவிட நான்தான் வீரமானவன் என்று கூற வந்தேன்.” என்றது முயல்.
அதற்கு அந்த சிங்கம்,
“ஹா! ஹா! ஹா!” என்று சிரித்தது.
அந்த முயல்,
“நீ நம்பவில்லை என்றால் என்னை உன் முதுகில் ஏற்றிக்கொண்டு இந்த காட்டை சுற்றிவா..” என்றது.
அதற்கு அந்த சிங்கம் சரி என்றது.
“நம்மை பார்ப்பவர்கள் என்னைப் பார்த்து பயந்து விட்டார்கள் என்றால் நீ இந்த காட்டை விட்டே ஓடிவிட வேண்டும்!” என்றது முயல்.
அதற்கும் சிங்கம் சரி என்றது.
ஒப்புக் கொண்டபடி, சிங்கம் தன் முதுகில் முயலை ஏற்றிக் கொண்டு காட்டை சுற்றி வந்தது.
வழியில் நந்து வந்த போது முயலைப் பார்த்த குரங்கு,
இந்த முயல் சிங்கத்தின் மீதே ஏறிக் கொண்டதே.. அப்படியென்றால் முயலைப் பார்த்து சிங்கம், பயந்துவிட்டதா என்று நினைத்தது.
“வணக்கம் முயலண்ணா!” என்று முயலுக்கு பவ்யமாக வணக்கம் சொன்னது குரங்கு.
காட்டிலுள்ள மற்ற விலங்குகளும் முயலை பயத்துடன் பார்த்து வணக்கம் வைத்தன.
காட்டை சுற்றி வந்த சிங்கம் முயலை இறக்கிவிட்டது.
முயல்,
“எல்லா விலங்குகளும் எனக்கு பயத்துடன் வணக்கம் சொன்னதை பார்த்தாயா? இப்பொழுது என்ன சொல்கிறாய்? உன்னை விட நாந்தான் பலசாலி நம்புகிறாயா?” என்று கேட்டது முயல்.
அதற்கு அந்த சிங்கம்,
“ஆம் நீ தான் பலசாலி! என்னை விட்டுவிடு!” என்று பயத்துடன் சொன்னது சிங்கம்.
“இனிமேல் இந்த காட்டில் நீ இருக்கவே கூடாது! உன் உயிர் உனக்கு வேண்டுமென்றால் ஓடிப் போ!” என்றது.
அதைக் கேட்ட அந்த சிங்கம் நடுநடுங்கிப் போய் பதறியபடியே ஓடிவிட்டது.
சிங்கம் போன பிறகு அங்கிருக்கும் விலங்குகள் எல்லாம் சிங்கத்தின் தொல்லையில்லாமல் இருந்தது .
முயலும் வழக்கம் போல் கேரட்டைக் கடித்துக் கொண்டு மரத்தடியில் படுத்திருந்தது. இப்பொழுது அந்தக்காட்டில் எந்தத்
தொல்லையும் இல்லை.