ஒரு நகரத்தில் செல்வாக்குடன் வாழ்ந்த ஒரு பணக்காரர் வீட்டில் சின்னா என்ற சிறுவன் அடிமையாக இருந்தான். அன்றைய காலகட்டத்தில் பணக்காரர்கள் வீட்டில் ஏழைகளை அடிமைகளாக வைத்து வேலை வாங்கும் பழக்கம் இருந்தது. சரியான உணவு இல்லாமல், எப்போது பார்த்தாலும் வேலை செய்துகொண்டு நாட்களைக் கழிப்பது, கடினமானவே  இருந்தது சின்னாவிற்கு. வேலை செய்ய மறுத்தால் கசையடிகள் கிடைக்கும். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான் சின்னா.

ஒருநாள் தன்னுடைய முயற்சியில் வெற்றி கண்டான் சின்னா. தான் வேலை செய்த வீட்டில் இருந்து தப்பித்து ஓடி அருகில் இருந்த காட்டுக்குள் புகுந்துவிட்டான்.

அப்போது திடீரென்று அவனுக்கு மிக அருகில் ஒரு சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு நடுங்கிப் போனான் அவன்.

‘ அடடா, சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைத்து என் முதலாளி வீட்டில் இருந்து தப்பித்து வந்து, இங்கே சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு விட்டேனே? என்னைக் கொன்று தின்னப் போகிறது இந்தச் சிங்கம். என் வாழ்க்கை இந்தக் காட்டில் முடியப்போகிறது’

என்று எண்ணியபடி சுற்றிலும் பார்த்தான்.

அவனுக்கு மிக அருகில் ஒரு மரத்தடியில் சிங்கம் அமர்ந்திருந்தது. அதனுடைய கால்களில் முட்கள் தைத்துக் கிழித்திருந்தன. வலியால் துடித்தபடி உட்கார்ந்திருந்தது அந்தச் சிங்கம்.

parambariya kadhai 38
படம்: அப்புசிவா

சின்னா, அந்தச் சிங்கத்தின் அருகில் சென்று உட்கார்ந்து, அதனுடைய பிடரியில் இருந்த கேசத்தைப் பிரியத்துடன் தடவிக் கொடுத்தான்.

“ சிங்கராஜா, நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? ” என்று அக்கறையுடன் கேட்டான் சின்னா. சிங்கமும் தலையை ஆட்டியது.

“ ஏதாவது செய்து முட்களை எடுத்தால் என்னுடைய வலி குறையும்” என்றது சிங்கம்.

“ இதோ, என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்று கூறிய சின்னா, சிங்கத்தின் காலில் இருந்த முட்களைப் பொறுமையுடன் அகற்றினான். அருகிலிருந்த செடிகளில் நல்ல மூலிகைகளைத் தேடிப் பறித்து அவற்றைக் கசக்கி, சிங்கத்தின் காயத்தில் தடவி, மரப்பட்டைகளைத் துணி போல வைத்துக் காயத்தை மூடினான். சிங்கத்திற்கு நன்றாக வலி குறைந்தது. சின்னாவிற்கு நன்றி கூறிய சிங்கம் அப்படியே தூங்கிவிட்டது.

சிங்கம் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதனை எழுப்ப மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் சின்னா. காட்டுக்குள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான் .அடுத்த நாளே அவனுடைய முதலாளி, சின்னாவைத் தேடுவதற்காக அனுப்பிய வேலையாட்களிடம் சின்னா வசமாக மாட்டிக் கொண்டான். அவர்கள் சின்னாவை இழுத்துக்கொண்டு போய் முதலாளியிடம் சேர்த்தார்கள்.

“ என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இருந்து தப்பித்து ஓடுவாய்? உனக்கு விரைவில் சரியான தண்டனை கொடுக்கப் போகிறேன் ” என்று கோபத்துடன் கத்தினார் அந்த முதலாளி. அன்றிலிருந்து சின்னாவிடம் அதிக வேலை வாங்கினார்கள். உணவும் மிகக் குறைவாகவே கிடைத்தது.

சில நாட்கள் கழித்து அவர்களுடைய நகரத்திற்கு அந்த நாட்டின் அரசர் வந்தார். சின்னாவின் முதலாளி, அரசருக்காக விருந்து மற்றும் கேளிக்கை விளையாட்டுகளை நடத்த ஏற்பாடு செய்தார்.

அபாயகரமான சில விளையாட்டுகள் நடக்கப் போவதாக அறிவித்தார்கள். அந்த விளையாட்டுகளில் ஒன்று தான் சிங்கத்துடன் மனிதன் மோதுவது. சிங்கத்தின் கூண்டிற்கு முன்னால் சின்னா நிறுத்தி வைக்கப்பட்டான். சிங்கத்தின் கூண்டு திறக்கப்பட்டது. சிங்கம் ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வெளியே வந்தது. சின்னா அச்சத்துடன் கண்களை மூடிக் கொண்டான்.

பாய்ந்து வந்த சிங்கம், சின்னாவின் அருகில் வந்து அமைதியாக அமர்ந்துவிட்டது. அவனை ஒன்றுமே செய்யவில்லை. கண்களைத் திறந்து பார்த்த சின்னா, தான் உதவி செய்த சிங்கம் தனக்கெதிரே நிற்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அவனும் அதனருகில் சென்று பிரியத்துடன் அதனைத் தடவிக் கொடுத்தான். அரசர் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். சின்னாவை அருகில் அழைத்து மனதாரப் பாராட்டினார்.

சின்னாவைத் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினார் அரசர். சின்னாவின் முதலாளியால் மறுக்கவா முடியும்? சின்னா, அரசருடன் அரண்மனைக்கு சந்தோஷமாகக் கிளம்பினான்.

“ மன்னிக்கவும் அரசரே. இந்தச் சிங்கம் என்னுடைய நண்பன். சிங்கத்தையும் அழைத்து வரலாமா? ” என்று அனுமதி கேட்க, அரசரும் உடனடியாக அவனுக்கு அனுமதி தந்துவிட்டார்.

அரசருடன் அரண்மனைக்கு வந்த சின்னாவுக்கு அரசர் நல்ல வேலை தந்தார். உண்ண உணவு, நல்ல உடை மற்றும் தங்க வீடு கிடைத்தது. அந்த வீட்டில் சின்னாவும் சிங்கமுமாகச் சேர்ந்து நல்ல நண்பர்களாக  மகிழ்ச்சியாக நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments