“ கவின், தருண், இறுதியா இதுதான் உங்க முடிவா? நீங்க கண்டிப்பா வரலையா? நாங்க காலையில் சீக்கிரம் கிளம்பிடுவோம். நாங்க போனதுக்கப்புறம் உங்க முடிவு மாறினா ஒண்ணும் செய்யமுடியாது. பாத்துக்குங்க” என்று அப்பா கேட்டார்.
“ இல்லைப்பா, நாங்க வரலைப்பா, ரெண்டு நாள் தானே? எப்படியோ சமாளிச்சுக்கறோம். கவலைப்படாமல் கெளம்புங்க. எங்களுக்கு இந்த வாய்ப்பு போச்சுன்னா இன்னும் ஒரு வருஷம் காத்துட்டு இருக்கணும்” என்று கவின் சொல்ல, தருண் தன் உடன்பிறப்பு சொன்னதைத் தலையாட்டி ஆமோதித்தான்.
கவின், தருண் இரண்டு பேரும் இரட்டைப் பிறவிகள். அவர்களுக்கு ஒரு குட்டித் தங்கை இருக்கிறாள். அம்மா, அப்பா இரண்டு பேரும் தங்கையுடன் அடுத்த நாள் காலையில் கிளம்பி உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ள சென்னை செல்கிறார்கள். திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும். நாளை மறுநாள் கவின், தருண் இரண்டு பேருக்கும் முக்கியமான கிரிக்கெட் மேட்ச் இருந்தது.

கவின், தருண் இரண்டு பேருமே அவர்களுடைய பள்ளியின் கிரிக்கெட் டீமில் முக்கியமான பிளேயர்கள். கவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் தருண் சுழற் பந்து வீச்சாளர். அடுத்த நாள் இன்னொரு ஸ்கூல் டீமோடு நடக்கப்போகும் மேட்ச்சில் நன்றாக விளையாடினால் மாவட்ட அளவு பிளேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேட்ச்சை கவனிக்க மாவட்ட அளவிலான கிரிக்கெட் வல்லுநர்கள் வரப்போகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது இரண்டு பேருக்கும் நீண்ட நாள் கனவு. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்து மாநில அளவு பிளையராக முன்னேற வாய்ப்பு இருக்கிறது என்பதால் கல்யாணத்திற்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார்கள். அம்மா, அப்பா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். இவர்களுக்கோ இஷ்டமில்லை.
“ சாப்பாட்டைப் பத்திக் கவலைப்படாதீங்க. எதையாவது வாங்கிச் சாப்பிட்டுக்குவோம். இரண்டு நாளும் ஸ்கூலில் தான் நிறைய நேரம் இருப்போம். அவங்களே சாப்பாடு ஏற்பாடு செஞ்சுடுவாங்க” என்று சொல்லி விட்டார்கள்.
“ ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காமல், சீக்கிரமாப் படுத்துத் தூங்குங்க. மொபைலை நோண்டிட்டு இருக்கக் கூடாது. ஜங்க் ஃபுட் எதையும் ஆர்டர் பண்ணி சாப்பிட வேணாம்” என்று அம்மா சகட்டு மேனிக்கு அறிவுரைகளை வழக்கம் போல அள்ளி வழங்கிவிட்டுத்தான் கிளம்பினார்.
அதிகாலையில் தங்கையுடன் அம்மா, அப்பா கிளம்பிச் சென்றதால் சீக்கிரமே எழுந்துவிட்டார்கள் கவினும், தருணும். குளித்துத் தயாராகி, அம்மா செய்து வைத்திருந்த காலை உணவை உண்டுவிட்டுப் பள்ளிக்குச் சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்தார்கள். அன்று முழுவதும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கடுமையான பயிற்சி.
“ உங்க ரெண்டு பேர் மேலயும் நிறைய நம்பிக்கை வச்சிருக்கேன். நல்லா விளையாடி ஸெலக்ட் ஆகணும். ஸ்கூலோட பேருக்குப் பெருமை சேக்கணும்” என்று அவர்களுடைய கோச் அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பினார்
சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது நன்றாகக் களைத்துப் போயிருந்தார்கள். எதையோ வரவழைத்து சாப்பிட்டு விட்டுத் தூங்கிப் போனார்கள். அடுத்த நாள் காலையில் சீக்கிரமே அலாரம் வைத்து எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். முக்கியமான நாள் என்பதால் மனதிற்குள் பதட்டமாக இருந்தது. வாசலில் அழைப்பு மணிச் சத்தம் கேட்டு, கவின் வாசலுக்கு விரைந்தான்.
பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடி வந்திருந்த இளம்பெண் கவலையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“ அப்பா இருக்காரா? அம்மா இருக்கீங்களா? ஒரு உதவி வேணும்“
“ என்ன ஆச்சு ஆண்ட்டி? அவங்க ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்களே? “
“ அப்படியா? என்னோட மாமனாருக்கு திடீர்னு உடம்பு சரியில்லை. என் கணவர் ஆஃபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கார். எனக்கு இங்கே டாக்டர் யாரு, எங்கே போகணும்னு தெரியாது. அவங்களைக் கேக்கலாம்னு பாத்தேன். சரி, வேற வீட்டுல கேட்டுப் பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். கர்ப்பிணியாக இருந்தவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“ ஆண்ட்டி, உள்ளே வாங்க ஒரு நிமிஷம். அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கறவங்க வயசானவங்க. என் ஃப்ரண்டோட அப்பா டாக்டர் தான். அவர் கிட்டக் கேக்கறேன்” எனறு சொன்ன கவின், தனது அலைபேசியில் எடுத்து வந்து அவனுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மோகனை அழைத்தான். நல்ல வேளையாக அவனுடைய அப்பா வீட்டில் இருந்தார். பக்கத்து வீட்டுப் பெண்ணிடமே அலைபேசியைக் கொடுத்து அவளையே பேச வைத்தான். அதற்குள் தருணும் வந்துவிட்டான். அந்தப் பெண் பேசிவிட்டு, கவினிடம் அலைபேசியைக் திருப்பித் தந்தாள்.
“ கவின், அவங்க சொல்லற சிம்ப்டம் எல்லாம் பாத்தா ஹார்ட் அட்டாக் மாதிரித் தோணுது. ஒரு மாத்திரை மட்டும் வீட்டில் இருந்தால் கொடுக்கச் சொல்லிருக்கேன். நான் உடனே ஆம்புலன்ஸ் அனுப்ப ஏற்பாடு பண்றேன். அவங்க ரொம்ப டென்ஷனா இருக்காங்க. உங்க ரெண்டு பேரில் ஒருத்தர் அந்த பேஷன்டைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் வாங்க. என்னோட ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும்” என்று சொன்னார்.
அடுத்தடுத்து மளமளவென்று காரியத்தில் இறங்கினார்கள் கவினும், தருணும். ஆம்புலன்ஸ் வந்து உடனடியாக அந்தப் பெரியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தப் பெண் மருத்துவமனையில் மயங்கி விட, அவளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கவின், தருண் தலையில் விழுந்தது. சரியான நேரத்தில் வந்துவிட்டதால் நல்லவேளையாக உயிர் பிழைத்தார் பெரியவர். “மைல்ட் அட்டாக்”
என்று சொன்னார்கள்.
சென்னையில் திருமண முகூர்த்தம் முடிந்ததும் தான் அவர்களுடைய பெற்றோரால் பேச முடிந்தது. மதியம் ஆகியிருந்தது.
“ கிரிக்கெட் மேட்ச் எப்படிப் போச்சு? காலையில் விளையாடற நேரத்தில் பேச வேண்டாம்னு தான் கூப்பிடலை” என்று கேட்டார் அப்பா.
“ இல்லைப்பா, ஸ்கூலுக்கே போகலை” என்ற தருண், நடந்தவற்றை விளக்கினான்.
“ சரி விடுங்க. ஒரு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க! எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லி வைத்துவிட்டார்.
அடுத்த நாள் காலையில் அவர்கள் திரும்பிவந்தபோது பக்கத்து வீட்டுப் பெண்ணின் கணவனும் விஷயம் தெரிந்து ஊர் திரும்பியிருந்தான். இவர்கள் வீட்டுக்கு வந்து கவின், தருண் செய்த உதவியைப் பாராட்டி நன்றி கூறும்போது நெகிழ்ந்து போய்விட்டான். அந்தத் தெருவே அவர்களைக் கொண்டாடியது. ஆனாலும், கவின், தருண் மனதிற்குள் கிரிக்கெட் மேட்ச்சில் கலந்துகொள்ள முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்தது. குழந்தைகள் தானே?
வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு, கவின் எட்டிப் பார்த்தான். மோகன் நின்று கொண்டிருந்தான்.
“ நேத்து எக்ஸ்பர்ட் வரலைன்னு மேட்ச்சே நடக்கலையாம். இன்னைக்குத் தான் மேட்ச். சீக்கிரம் கெளம்புங்க” என்று சொல்ல, கவின், தரும் இரண்டு பேரும் பாய்ந்து தயாராகிக் பறந்தார்கள் தங்களுடைய சைக்கிள்களில்.