வாசித்துப் பழகலாம்
வாங்க வாங்க குழந்தைகளே!
வாசிப்பின் பயன்களும்தான்
வாழ்க்கையிலே ஏராளம்!
உலகத்தை அறிந்துகொள்ள
உதவுகின்ற கருவியிது!
உள்ளத்தை மேம்படுத்தி
உறுதியாக்கும் சாதனமாம்!
இன்று முதல் நூலொன்றை நீ
நண்பனாகத் தேர்ந்தெடு!

உடுக்கை இழந்தோன் கையாக
உனக்கதுவும் உதவிடுமே!
பொழுதுபோக்கு மட்டுமல்ல
வாசிக்கும் அனுபவம்!
உண்மையை உள்ளபடி
எடுத்துரைக்கும் பேரின்பம்!
ஏட்டுச் சுரைக்காய் என்று நீயும்
புத்தகத்தை ஒதுக்கிடாதே!
சொற்களெனும் உளிகள்உனை
அற்புதமாய்ச் செதுக்கிடுமே!
நல்ல நூலைத் தேர்ந்தெடுத்து
நாள்தோறும் நீ படித்துவந்தால்
குன்றிலிட்ட விளக்கு போல
உலகுக்கே ஒளி தருவாய்!
நாளை நாளை என்று நீயும்
நாட்களையும் தள்ளிடாமல்
ஏந்திடுவாய்க் கரமதனில்
நூலொன்றை இக்கணமே!
ஆழ்ந்திடுவாய் வாசிப்பில்!
அகலத்தில் உயர்ந்திடுவாய்!
புவனா சந்திரசேகரன்.
