அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வந்து சேரவும் சிட்டு பறந்து வரவும் சரியாக இருந்தது.
“இன்னிக்கு எல்லாருமே ஒரே நேரத்துல வந்துட்டோம்” என்றாள் மலர்.
“எல்லாருக்கும் மாலை வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு.
“வணக்கம் சிட்டு! எல்லாரும் நல்லாயிருக்கோம்” என்றாள் கயல்.
குழந்தைகள் வழக்கம் போல் வட்டமாய் அமர்ந்து கொள்ள, சிட்டு கதை சொல்ல மேடையில் வந்து அமர்ந்தது.
“போன வாட்டி டைனோசருக்கும், ஜூராசிக் பார்க்குன்னு படத்துக்குப் பேரு வைச்சதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாபு கேட்டான். அதுலேர்ந்து ஆரம்பிக்கிறேன்” என்றது சிட்டு.
“ம்.. சரி ஆரம்பி” என்றான் பாபு.
“ஆரம்ப காலத்துலேர்ந்து பூமி தோன்றுன வரலாற்றை ஆராய்ச்சி பண்றவங்க, 245 மில்லியன்லேர்ந்து 66 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை, மேசோஸாயிக் யுகம்னு (MESOZOIC ERA) சொல்றாங்க. இந்தக் காலத்துல தான், பெரும்பான்மையான ஊர்வன விலங்கினங்கள் தோன்றியிருக்கு. இந்தக் காலத்தை டிரியாசிக், (Triassic, Jurassic, Cretaceous ஜூராசிக், கிரிட்டேசியஸ்னு மூனு பிரிவாப் பிரிக்கிறாங்க. ஜூராசிக் காலத்துல, நிலத்துல டைனோசர் தான் பெரும்பான்மையா ஆதிக்கம் செலுத்தியிருக்கு.
MESOZOIC ERA (245 to 66 millions of years ago) | ||||
PALEO- ZOIC ERA | TRIASSIC PERIOD | JURASSIC PERIOD | CRETACEOUS PERIOD | Ceno- zoic Era |
“ஒரு மில்லியன்னு சொன்னாலே, பத்து லட்சம்.. 66 மில்லியன்னா ஏறக்குறைய ஆறு கோடி அறுபது லட்சம் ஆண்டுக்கு முன்னாடி. சரியா சிட்டு? கதிர் கேட்டான்.
“ரொம்பச் சரி கதிர்!”
“ஆறு கோடி ஆண்டுக்கு முன்னாடி, பூமியோட அமைப்பு எப்பிடி இருந்துச்சி சிட்டு?” இது கயல்.
“பூமி இந்த ஜூராசிக் காலத்துக்கு முன்னாடி வரைக்கும், பாஞ்சியாங்கிற பேர்ல ஒரே கண்டமா இருந்திருக்கு”
“அப்பிடியா? கேட்கவே ஆச்சரியமாயிருக்கே? அப்ப அமெரிக்கா, ஆசியா அப்படீன்னு கண்டங்கள் கெடையாதா? ” என்றான் வினோத்.
“இல்ல வினோத். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா எல்லாம் சேர்ந்து இருந்திருக்கு. அதுக்கப்புறம் தான், எல்லாம் பிரிஞ்சி தனித் தனிக்கண்டமா ஆயிருக்கு”
“அப்ப இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பக்கத்துல, பக்கத்துல இருந்துச்சா?” முத்து கேட்டான்.
“ஆமாம் முத்து. அதுக்கப்புறம் தான், இந்த பாஞ்சியா தனித்தனியா பிரிஞ்சுது. பூமியோட தகடுகள் ஒன்னோட ஒன்னு மோதி, நெறைய மலைகள் உருவாச்சு. நிலப்பரப்பு பூரா, டைனோசர் இனம் பெரும்பான்மையா இருந்துச்சி” இந்த ஜூராசிக் காலத்துல தான், பறக்குற டெரோசரஸ் (Pterosaurs) நெறையா இருந்துருக்கு”.
“பறக்குற டெரோசரஸா? அப்படீன்னா அது ஒரு டைனோசரா?” என்றாள் மலர்.
“இது டைனோசர் இல்ல மலர். பறவைக்கு முன்னாடியே, நம்ம பூமியில தோன்றுன பறக்கக் கூடிய ஒரு விலங்கு. பாம்பு,பல்லி, முதலை மாதிரி இதுவும் ஊர்வன (Reptiles) இனத்தைச் சேர்ந்தது.. பறவை மாதிரி, இதுக்கு இறக்கை கெடையாது. ஆனா வெளவால் மாதிரி, ஜவ்வு தோல் இருந்திருக்கு”.
“இப்ப அந்த உயிரினம் ஒலகத்துல இருக்கா?” இது. பாபு.
“இல்ல டைனோசர் இனம் மாதிரியே, இதுவும் சுத்தமா அழிஞ்சி போச்சு”
“சரி.. டைனோசர் இனம் ஏன் பூரா அழிஞ்சு போச்சு? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா சிட்டு?” என்று கேட்டாள் கயல்.
“நேரமாச்சு. அதுக்கு அடுத்த மாசம் பதில் சொல்றேன். இன்னும் என்னென்ன சந்தேகம் இருக்கோ, எல்லாத்தையும் யோசிச்சி வைங்க. டாட்டா, பை பை, சீ யூ” என்று சொன்னபடி படுவேகத்தில் பறந்து போனது சிட்டு.
என்ன குழந்தைகளா? சிட்டு சொல்ற டைனோசர் கதை உங்களுக்குப் பிடிச்சிருக்கா? உங்களுக்கு ஏதும் சந்தேகம்னா, தயங்காமக் கேளுங்க. சிட்டு கண்டிப்பாப் பதில் சொல்லும்.
உங்களுடைய கேள்வியை அனுப்ப வேண்டிய முகவரி:-
feedback@poonchittu.com
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.