குழந்தைகளே!
எம்.சி.ராஜா (1883 – 1943) எனச் சுருக்கமாக அறியப்படும் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்பவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர் பள்ளி நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை வெளியிட்டார். நிலா நிலா ஓடி வா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கை வீசம்மா கை வீசு போன்ற பிரபலமான குழந்தைப் பாடல்களின் ஆசிரியர் இவரே.
இப்பாடல்களைக் கேட்டு வளராத, பாடிப் பழகாத தமிழ்க்குழந்தையே இல்லை எனும் அளவுக்கு இவை மிகப் பிரபலம். குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்ளும் வண்ணம் எளிய சொற்களில் அமைந்த இப்பாடல்கள் தலைமுறை தலைமுறையாக, நம் மழலைகளின் பாலபாடமாக உள்ளன.
பட்டப்படிப்பை முடித்துப் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். இளம்வயதிலேயே அரசியலில் நுழைந்த இவர் நீதிக்கட்சியின் சார்பாக நின்று, சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
தீண்டாமை ஒழிப்பு, தாய்மொழிக்கல்வி உரிமை, சிறுபான்மையோர் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்.
ஆதி திராவிடர் என்ற சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் இவரே. அம்பேத்கருக்கு முன்பே ஆதிதிராவிடர் நலனுக்காகப் பாடுபட்டவர்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.