டூடுல் ஆர்ட்
கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள்.
அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான்.
“பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையா போரடிக்கிது! ஏதாவது புது வெளையாட்டு சொல்லித் தாங்க!” என்று தன் வீட்டு பால்கனியிலிருந்து கூவினான்.
தாத்தாவுக்கு கொஞ்சம் கோல்டாக (cold) இருந்ததால் தாத்தாவே அவனைத் தன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.
மித்துவின் குரல் கேட்டு எட்டிப் பார்த்த பார்வதிப் பாட்டி,
“என்ன மித்து? ரொம்ப போரடிக்கிதா! சரி! நா ஒனக்கு ஒரு புது வெளையாட்டு சொல்லித் தரேன். நீ உன் ஃப்ரண்ட்ஸோட வெளையாடு! சரியா?” என்றாள்.
“ம்! சரி பாட்டி!” என்று மித்து உற்சாகமாக பதிலளித்தான்.
பாட்டி அவனுக்கு ஒரு காகிதத்தில் அவனுடைய கையை விரித்து வைத்து அதனைச் சுற்றி ஒரு அவுட் லைன் போல வரைந்து கொள்ளச் சொன்னாள்.
“ம்! வரைஞ்சிகிட்டேன் பாட்டி! இப்ப என்ன செய்யணும்?”
“இப்ப அந்த கை டிசைன்க்குள்ள குட்டி குட்டி டிசைன் வெச்சி ஃபில் அப் பண்ணுடா மித்து!” என்றாள் பாட்டி.
“அப்டீன்னா? புரில பாட்டி!” என்று சொன்னான் மித்து.
“இங்க பாரு! நான் செய்திருக்கேன் பாரு!” என்று சொல்லி தான் வரைந்த படத்தைக் காட்டினாள் பாட்டி.
அதைப் பார்த்த மித்து,
“ஓ! மெஹந்தி டிசைன் மாதிரியா? சரி! சரி!” என்று சொல்ல,
“கிட்டத்தட்ட அப்டிதான் மித்து! இது மாதிரி ஒரே படத்துக்குள்ள வேற வேற டிசைன் வெச்சி நிரப்பறதுக்கு பேரு டூடுல் ஆர்ட்! இத ஜென்டாங்கிள்னும் சொல்வாங்க! இப்பல்லாம் பெரியவங்களுக்கு கூட மைன்ட் ரிலாக்ஸ் செய்துக்க இந்த விளையாட்டைதான் டாக்டர்ஸ் விளையாடச் சொல்றாங்க!” என்று பாட்டி விவரம் கூறினாள்.
“ஆனா இதுவும் போரடிக்குமே!” என்று சிணுங்கினான் மித்து.
“இதுலதான் உன் க்ரியேட்டிவிட்டிய காட்டணும் நீ!”
“இதுல என்ன க்ரியேட்டிவிட்டி இருக்கு?”
“இப்ப நான் உன் கையை அவுட் லைனா வெச்சி வரைய சொன்னேன்! அடுத்ததா உன் காலை அவுட் லைனா வெச்சி வரைய ட்ரை பண்ணு! அது மாதிரி வேற வேற ஈசி டிசைன்ஸ் வெச்சி வரையலாம். அதுக்கப்றம் கொஞ்சம் கொஞ்சமா கஷ்டமான டிசைன்ஸ் எடுத்துக்கலாம். உள்ள ஃபில் அப் பண்ற டிசைன்ஸ்க்கு வேற வேற கலர் பென்ல ஃபில் அப் பண்ணினா இன்னும் அட்ராக்டிவ்வா இருக்கும்! இப்டிதான் நாம நம்மளை வளர்த்துக்கணும்!”
“இதுனால என்ன யூஸ் பாட்டி?”
“இதுனால உன் கான்சென்ட்ரேஷன் வளரும்! உன் பொறுமை வளரும்! கலர் சென்ஸ் வளரும்! எப்பவுமே மொபைல் யூஸ் பண்றதால வலிச்சிட்டிருக்கற உன் விரல்களுக்கும் நல்ல ரிலாக்சேஷன் கிடைக்கும். இன்னும் நிறைய யூஸ் இருக்குடா மித்து கண்ணா!” என்றாள் பாட்டி.
“சரி பாட்டி! அப்ப நான் இந்த டிசைன் இன்னிக்கு வரையறேன்.”
“உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் இத சொல்லு! ஈவ்னிங் யார் யார் என்ன என்ன வரைஞ்சீங்கன்னு எனக்கு சொல்லுங்க! சரியா?”
“யார் நல்லா வரைஞ்சாங்களோ அவங்களுக்கு ஒரு கிஃப்ட்! அப்டிதானே பாட்டி?” மித்து ஆவலாகக் கேட்டான்.
“அதுக்கென்னடா! குடுத்துட்டா போச்சு!” என்றாள் பாட்டி!
மித்து ஆர்வமாக வரையப் போனான்.
அவனைப் போல நீங்களும் வரைந்து பாத்து நல்லா வந்துதான்னு சொல்லுங்க சுட்டீஸ்!
அது வரைக்கும் சமத்தா இருங்க! டேக் கேர்! பை! பை! 👋👋👋👋👋👋👋👋
***********
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.