ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா..

ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது.

கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது.

அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா..

வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக் கதிர்கள் பூமியத் தொட, சுகமான இளவெயில் அடிக்க ஆரம்பிச்சது.

அது வரை மழைக்கு ஒதுங்கி இருந்த கோழி, ஆடு மாடு எல்லாம் தங்களோட உடம்ப உதறி, மேல இருந்த மழைத்தூறலையெல்லாம் சிதற விட்டு வெயிலுக்கு வந்துடுச்சுங்க.

இதையெல்லாம், ரசனையோட பார்த்தாலும், கைபேசிய கீழ வச்சிட்டு விளையாடப் போக மனசே இல்ல ஷிவானிக்கு. அந்த அளவுக்கு அந்த மெய்நிகர் விளையாட்டுல (வீடியோ கேம்) மூழ்கிட்டா ஷிவானி.

maayavanam

அப்ப அவ கைக்கடிகாரம் அவள எச்சரிக்கிற விதமா சிவப்பு நிற ஒளி பாய்ச்சும் வெளிச்சத்தோட அலாரத்தை ஒலிக்க விட்டது.

“ஹே இப்ப எதுக்கு இப்படி கத்துற? இங்க எதுவும் அபாயம் இருக்கிறது போலத் தெரியலையே?” அப்டின்னு தன் கடிகாரத்த கேட்டா ஷிவானி.

“நீ இப்ப விளையாடுறயே இந்த விளையாட்டு இதுவே அபாயம் தான்.. இன்னுக்கு உனக்கான திரை நேரம் (ஸ்க்ரீன் டைம்) முடிஞ்சிடுச்சு. நீ போய் கோழியோட விளையாடு” அப்டின்னு கராறா சொல்லுச்சு அவ கைக்கடிகாரம்.

“இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடுறனே?” அப்டின்னு கெஞ்சினா ஷிவானி.

“நீ கொஞ்ச நேரம் முன்னாடி வர, மழை பெய்றதனால உன்னால ஆடு, மாடு, கோழிகூட எல்லாம் விளையாட முடியலைன்னு கவலைப்பட்ட தானே?” அப்டின்னு கேட்டுச்சு கடிகாரம்.

“ஆமா, ஆனா அதுக்கப்பறம் மொபைல்ல விளையாடும் போது நேரம் போறதே தெரியலையே, அதான் அதை மறந்துட்டேன்” அப்டின்னு சொன்னா ஷிவானி.

“உன்னோட உள் மன ஆசை கிராமத்துல வந்து கோழிய பிடிச்சு விளையாடுறது. ஆனா, இந்த செல்பேசி செயலி உன் சுயநினைவை மழுங்கடிச்சு உன்ன தனக்குள்ளயே மூழ்கடிக்கப் பார்க்குதே. அது அபாயமில்லையா? யோசி சிவானி” அப்டின்னு அவள சிந்திக்க தூண்டினது கடிகாரம்.

“ஆமா இந்த கைபேசி செயலியில எப்ப வேணா நான் விளையாடலாம். ஆனா கிராமத்துக்கு எப்போவாவது தானே வரேன். இங்க வந்து ஓடியாடி தாத்தாவோட செல்லப் பிராணிகளோட விளையாடனும், அம்மா சைக்கிள் பழகின வாடகை சைக்கிளை வாங்கி ஓட்டிப் பார்க்கனும், குளத்தில மீன் பிடிக்கனும், வெளில பாட்டி பொங்கல் வைக்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்லனும் இப்படி பெரிய பட்டியலோட கிராமத்துக்கு கிளம்பி வந்தேன். ஆனா இந்த கைபேசிய எடுத்ததும் அதெல்லாம் மறந்துட்டனே” அப்டின்னு வருத்தப்பட்டா சிவானி.

“வருத்தப்படாதே சிவானி, வருத்தத்தால எந்த நன்மையும் நேராது. நம் பாதை தவறு அப்டின்னு தெரிஞ்சா உடனே அதில் இருந்து விலகி நல்ல பாதைய தேர்ந்தெடுக்கனும்” அப்டின்னு பச்சை விளக்கை ஒளிர விட்டது கைக்கடிகாரம்.

“அதுவும் சரி தான்” அப்டின்னு கைப்பேசி அணைச்சு வச்சிட்டு கோழிக் குஞ்சுகளைத் துரத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சிட்டா நம்ம ஷிவானி.

பொங்கல் பண்டிகையையும், மெய்நிகரா கொண்டாடாம மெய்யாக் கொண்டாடி ரொம்ப மகிழ்ச்சியா இருந்தா ஷிவானி..

நீங்களும் மெய்யான பொங்கல் கொண்டாடுங்க குட்டீஸ்..

பொங்கலோ பொங்கல். பொங்கல் நல் வாழ்த்துகள் செல்லம்ஸ்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments