அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன்.

“அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதே சாலச் சிறந்தது” என்று சொல்ல, துருவனின் தலைமையில் அந்தக் குழு அங்கிருந்து கிளம்பியது.

maayavi

மயில் சில சமயம் நடந்தும் சில சமயம் பறந்தும் வந்தது. பறக்கும் சமயத்தில் துருவனும் கிளியும் மயிலின் மேல் அமர்ந்து கொண்டனர். அவர்கள் பறக்கும் போது அணிலும் தனது சிறகுகளை விரித்துப் பறந்து உடன் வந்தது. வினோதமான அந்த ஊர்வலம்  வனத்தின் ஊடே காட்டுச் செடிகளையும் புதர்களையும் விலக்கியபடி தொடர்ந்தது.

நடுநடுவே பெரிய மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டு தங்களுக்குக் கிடைத்த பழங்களையும், பழக் கொட்டைகளையும் உண்டு பசியாறிக் கொண்டார்கள். சிறிய நீரோடைகளும் சிறு நதிகளும் தெளிந்த நீருடன் வனத்தின் ஊடே மிகுந்து இருந்ததால் பயணமும் தடையில்லாமல் தொடர்ந்தது. ஆனாலும் போக வேண்டிய தொலைவு அதிகம். போகப் போகப் பயணம் கடினமாகவும் இருந்தது.

அவர்கள் கிளம்பியதற்கு அடுத்த நாள் பகலில் ஏதோ கிடைத்ததை உண்ட பின்னர் ஒரு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த துருவன் அப்படியே உறங்கி விட்டான். அணில் தம்பியும் மயில் அண்ணனும் அக்கம்பக்கத்தில் அவர்களுக்கு விருப்பமான உணவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். கிள்ளி மட்டும் மரத்தின் கிளையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று கிளியின் கீச் கீச் சத்தம் கேட்டு சடக்கென்று தூக்கம் கலைந்து எழுந்த துருவனால் எழ முடியவில்லை. உடலை ஏதோ இறுக்கிய மாதிரி உணர்ந்தான். மூச்சுத் திணறி பயங்கர வலி உடலெங்கும் பரவியது. ‘ஆபத்து, ஆபத்து’ என்று கிளி வேறு கத்தியது. துருவனின் உடலை ஒரு மலைப்பாம்பு சுற்றி இறுக்கிக் கொண்டிருந்தது.

துருவனுக்கு கௌதம முனிவர் அளித்த பாதுகாப்பு மணியின் ஞாபகம் வந்து கழுத்தில் இருந்த கயிற்றைத் தேடிக் கயிற்றில் கோர்க்கப் பட்டிருந்த அந்த மணியை உடனே தேய்த்தான். உடனே அந்த மலைப்பாம்பு அவன் உடலிலிருந்த பிடியை அகற்றிக் கொண்டது. அவன் உடலை விட்டுத் தெறித்துக் கீழே விழுந்தது. முனிவர் தந்த மணி துருவனின் உயிரைக் காப்பாற்றி விட்டது. கிள்ளிக் கிளி ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. கிளி கத்திய சத்தம் கேட்டு மயிலும் அணிலும் கூடத் திரும்பி அந்த இடத்துக்கு ஓடி வந்துவிட்டன.

மலைப்பாம்பைக் கண்டு மயில் கோபம் கொண்டு அதைத் தாக்க ஆரம்பித்தது. அணிலும் சீற்றம் கொண்டு தனது உடலைப் பெரிதாக்கிக் கொண்டு அந்தப் பாம்பைப் பறந்து பறந்து வந்து தாக்கியது. இரண்டு உயிரினங்களுமாக அந்த மலைப்பாம்பைக் குற்றுயிரும் குலையுயிருமாக்கி விட இரண்டும் சேர்ந்து அந்த மலைப்பாம்பைத் தூக்கிச் சென்று சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் போட்டு விட்டு வந்தன. அதற்குப் பிறகே அமைதி கொண்டன.

“இந்த வனப்பகுதியில் போகப் போக இது போன்று பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் இனி நாம் மாறி மாறிக்காவல் காக்கவேண்டும். மற்றவர்கள் தூங்கும் போது எச்சரிக்கையுடன் ஒருத்தராவது விழித்திருக்க வேண்டும். யாருமே எப்போதுமே தனியாக இருக்கக் கூடாது” என்று முடிவு செய்தன.

நடக்கப் போவதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தனக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களைப் பரிசுகளாக அளித்த கௌதம முனிவரின் அறிவாற்றலை  எண்ணிப் பரவசமடைந்து அவருக்குத்  தலைவணங்கினான் துருவன். தனது ஆசானுக்கு மனதார நன்றி கூறினான்.

மலைப்பாம்பால் தாக்கப்பட்டதன் தாக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வெளிவந்த துருவன் தனது பயணத்தைப் புதிய உற்சாகத்துடன் தொடர்ந்தான்.

“நாம் நடந்து சென்று கொண்டேயிருக்கிறோம். சரியான திசையில் தான் செல்கிறோமா?” என்று அணில் கேட்க, துருவன்,

“மாயாவியின் மலைக்கோட்டை நமது நாட்டின் கிழக்கு எல்லையில் இருக்கிறது. கதிரவன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால் அந்தத் திசையை அனுமானித்து நடக்கிறோம். ஆனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது இருள் சூழ்ந்து இருக்கும். கதிரவனின் கதிர்கள் உள்ளே ஊடுருவ  முடியாது. தற்சமயம் நாம் நடக்கும் பகுதியில் கொஞ்சம் வெளிச்சம் இருப்பதால் கவலை இல்லை. வெளிச்சமே இல்லாத உட்பகுதியில் நடந்து போகும் போது என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும்” என்று கூறினான்.

“அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படிப்பட்ட இருண்ட பகுதிகளில் பயணம் செய்யும் போது நாங்கள் எங்களுடைய பறவையின நண்பர்களிடம் பேசி நாம் செல்லவேண்டிய திசையை அறிந்து சொல்கிறோம். நீண்ட தூரம் பறந்து சென்றாலும் மாலையில் தங்களது கூடுகளில் விட்டுச் செல்லும் தங்களுடைய குழந்தைகளுக்காக மாலையில் சரியான பாதையில் திரும்பி வரும் பறவைகளுக்கு வழி மற்றும் திசையெல்லாம் நன்றாகவே தெரியும். அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு  நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்” என்று மயிலும் கிளியும் உறுதியளித்தன. அணிலும் ஆனந்தத்துடன் தலையசைத்தது. அனைவரும் மலைக்கோட்டை இருந்த கிழக்குத் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் நிறைய வினோதமான அனுபவங்களை எதிர்கொண்டது அந்தக் குழு. தனது காலடியில் மிதிபட்டு சிறிய உயிரினங்கள் உயிரிழந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கவனமாக நடந்த துருவனை கிளியும், அணிலும் மற்றும் மயிலும் பெருமையுடன் பார்த்தன.

 ‘சிறிய வயதிலேயே எவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறான்? தன்னால் எறும்பு, பூச்சிகள், நத்தை போன்ற சிற்றுயிர்கள் துன்பத்துக்கு ஆளாகக் கூடாது என்று யோசித்து மனதில் கனிவுடன் பார்ப்பது எவ்வளவு உயர்ந்த குணம்! சரியான தலைவனைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என்று அவையும் பெருமிதம் கொண்டன.

அடுத்த நாள் பகலில் ஒரு சிறிய நதியில் ஓடிக்கொண்டிருந்த தெள்ளிய நீரைக் கைகளால் அள்ளி தாகம் தீர்த்துக் கொண்டு நிமிர்ந்த துருவன் அழகான அன்னப்பறவைகளின் ஜோடி ஒன்று அந்த நீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து இரசித்துக் கொண்டு நின்றான்.

சாதாரணமாகவே தூய வெளளை நிறத்தில் இருக்கும் அன்னப்பறவையின் அழகே தனி தான். அதிலும் இந்த அன்னப் பறவைகளின் உடலில் பொன்னிறத்தில் இருந்த கோடுகள், அவற்றின் மீது சூரிய ஒளி படும்போது அழகாக மின்னிய காட்சி கண்களைக் கவர்ந்தது.

அந்த அன்னப்பறவைகளின் ஜோடியின் அருகே ஒரு சிறிய பறவை நீந்திக் கொண்டிருந்தது‌ . அந்தக் குட்டிப்பறவை அந்த ஜோடியின் குழந்தையாக இருக்கலாம். தனது தாய் தந்தையை விட்டு விலகி நதியின் கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தது. அந்த அன்னப்பறவைகள் தங்களை விட்டு விலகிச் சென்ற அந்தக் குட்டி அன்னத்தை விளையாட்டு சுவாரஸ்யத்தில் கவனிக்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.

கரையோரம் ஒதுங்கிய அந்தச் சிறு பறவையைத் தாக்க ஒரு முதலை வாயைத் திறந்து கொண்டு அருகில் வர, அங்கிருந்த துருவன் அதைப் பார்த்து விட்டு அந்த அன்னப்பறவையைக் கையால் தூக்கிக் கொண்டான். சினமுற்ற முதலை பாய்ந்து துருவனைத் தாக்க, துருவனின் நண்பர்கள் அவனுடைய உதவிக்கு விரைந்தார்கள். அன்னப்பறவையைத் தனது நண்பர்களின் பொறுப்பில் ஒப்படைத்த துருவன் தனது கழுத்தில் இருந்த மணியைத் தடவினான்.  அவனைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் உருவாகி முதலையை அருகில் நெருங்க விடாமல் தடுத்தது. கோபம் தலைக்கேறிய முதலை துருவனைச் சுற்றிச் சுற்றி வந்து தனது வாலால் நீரை ஓங்கி அடித்ததில் தண்ணீர் நாலாபக்கமும் தெறித்தது. அங்கு ஏற்பட்ட ஆரவாரத்தால் கவனம் சிதறிய அன்னஜோடி திரும்பிப் பார்த்தது. தங்களுடைய குழந்தையைக் காணாமல் அங்கு நீந்தி வந்து தங்கள் குழந்தை பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தன. முதலை துருவனைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்து நடந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு துருவனின் உதவிக்கு வந்தன.

 அன்னங்களால் எப்படி முதலையை அடக்கமுடியும் என்று துருவனின் நண்பர்கள் வியப்புடன் பார்க்க, அவர்கள் கண்முன்னே அற்புதமான காட்சியொன்று விரிந்தது.

அந்த அன்னப்பறவைகள் அழகான கந்தர்வர்களாக மாறினார்கள். கந்தர்வர்கள் என்றால் வானலோகத்தில் வசிக்கும் தேவர்களும் தேவதைகளும். மிகவும் எழில் வாய்ந்த தோற்றத்தையும் நிறைய சக்திகளையும் படைத்தவர்கள். அவர்கள் விரும்பும் போது உருவத்தை மாற்றிக் கொண்டு பூலோகத்துக்கு வந்து சுற்றித் திரிந்து இயற்கையை இரசிக்கும் வழக்கம் உடையவர்கள்.

அன்னப்பறவைகள் கந்தர்வர்களாக மாறிய ஒரு நொடியில் தங்களுடைய சக்தியால் அந்த முதலையின் மீது ஏதோ ஒளிக் கற்றையை ஏவினார்கள். அடுத்த நொடியே அற்புதம் ஒன்று அங்கே நிகழ்ந்தது. அந்த முதலை உருவம் மாறி ஒரு சித்திரக்குள்ளனாக அவர்கள் முன்னே சிரித்துக் கொண்டு நின்றது.

துருவனும் நண்பர்களும் வியந்து போய்ப் பார்க்க அந்த கந்தர்வர்கள் அவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள். துருவனும் துருவனின் நண்பர்களும் அந்தச் சித்திரக்குள்ளனும் அந்த தேவதைகளை வணங்கி நின்றார்கள். அந்தக் குட்டி அன்னப்பறவை அழகான தேவதையாக மாறி அவர்களைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.

“நடந்ததைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறதா? உனக்கு மனதில் கருணை இருக்கிறதா என்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கிறதா என்றும் சோதித்துப் பார்ப்பதற்காக நாங்கள் நடத்திய நாடகம் இது. நீ அதில்

வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று விட்டாய். அதனால் உனக்குப் பரிசாக இந்த சித்திரக்குள்ளனை உன்னுடன் அனுப்புகிறேன். சில முனிவர்களின் சாபத்தால் இந்தக் குளத்தில் இவன் முதலையாகத் திரிந்து கொண்டிருந்தான். இன்று இவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இன்றிலிருந்து ஆரம்பித்து, நீ சாதிக்க நினைத்த காரியத்தை முடிக்கும் வரை இவனும் உனக்குத் துணையாக நிற்பான். உன் நோக்கம் முழுமையாக நிறைவேறியதும் இவன் உங்களிடமிருந்து விடை பெறுவான். விரைந்து சென்று எண்ணிய செயலைச் சிறப்பாகச் செய்து முடிப்பாயாக!” என்று ஆசிகளை வழங்கி விட்டு அங்கிருந்து மறைந்து போனார்கள்.

சித்திரக்குள்ளன் துருவனைப் பார்த்து

நட்புடன் சிரித்தான். மிகச் சிறிய உருவம். சிறிய என்றால் ஒரு கத்திரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தது போன்ற தோற்றம். அவர்களிடம் சித்திரக்குள்ளன் தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

தொடரும்.

என்ன குட்டிகளா! எப்படி இருக்கீங்க? வினோதமான அணில், பேசும் மயில், கிள்ளி கிளி இவங்களோட சேந்து இனி சித்திரக்குள்ளனும் உங்களோட மனசில இடம் பிடிக்க வந்துட்டான். என்னல்லாம் லூட்டி அடிக்கப் போறாங்களோ? அடுத்த பதிவில் பாக்கலாமா? கிறிஸ்துமஸ் பண்டிகையை நல்லாக் கொண்டாடுங்க. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்கள் அனைவர்க்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments